*ஶ்ரீமத் பாகவதம்* 55
🙏 ஓம்
ஞாதிகளை வதம் செய்த பாவத்தைப் போக்க, தர்மபுத்ரர் மூன்று அச்வமேத யாகங்கள் செய்தார்.பகவான் கண்ணன் வந்து உடனிருந்து யாகங்களை செவ்வனே நடத்திக் கொடுத்தான். அவ்வமயம் சில மாதங்கள் அஸ்தினாபுரத்தில் தங்கியிருந்த கண்ணன், தன்னால் காக்கப்பட்ட குழந்தையோடு ஆசையாய் விளையாடினான். பின்னர், மீண்டும் துவாரகை திரும்பும்போது, அர்ஜுனனை உடன் அழைத்துக்கொண்டு திரும்பினான்.
அதன் பின்னர் ஏழு மாதங்களுக்கு கண்ணனைப் பற்றிய எந்த செய்தியும் அஸ்தினாபுரத்தை எட்டவில்லை.
தர்மபுத்ரர் கவலை கொள்ளத்துவங்கினார்.
இந்த சூழலில் தான் நாம் சற்று முன் பார்த்த படி, விதுரர் தனது தீர்த்த யாத்திரையை முடித்துவிட்டு தர்ம புத்திரரை சந்திக்க வந்தார். அவரிடம் இத்தனை ஆண்டுகள் தங்களது தகவல்கள் ஏதுமே கிட்டவில்லை. எப்படி கழித்தீர்கள்?
உங்கள் நிழலில் வளர்ந்த எங்களை நினைவு வைத்திருக்கிறீர்களா?
விஷம், நெருப்பு முதலியவற்றிலிருந்து நீங்களே எம்மைக் காத்தீர்.
விதுரர், தான் சென்று வந்த இடங்களையும், அங்கு தரிசித்த பெருமானுடைய மகாத்மியங்களையும் விளக்கமாகக் கூறினார்.
விதுரர் முப்பத்து ஆறு வருடங்கள் கழித்து திரும்பி வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில், பல ஞானிகளை சந்தித்தார். மைத்ரேய மஹரிஷியிடம் பல ஆண்டு ஆன்மீக தகவல் பரிமாற்றங்களுக்கு பின்னர், ஆத்ம ஞானம் பெற்று வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை பற்றி பரிபூரணமாக தெளிவாக புரிந்து கொண்ட மிக பக்குவப்பட்ட ஒரு யோகியின்
நிலையில் இருந்தார்.
அவர் வந்த காரணம், தன்னுடைய அண்ணன் திருதராஷ்டிரனுக்கு நற்கதிக்கு செல்லும் வழிகாட்டுவதே. அவர் அண்ணணுக்கு புறக்கண்ணைப் போலவே அகக் கண்ணும் குருடாகவே இருந்தது. அவன்மேல் வைத்திருக்கும் காருண்யம் காரணமாக அவனுக்கு நல்ல பாதையை காட்டிடவே இப்போது விதுரர் வந்துள்ளார்.
திருதராஷ்டிரனுடன் தனிமையில் அமர்ந்து, அவனுக்கு உபதேசித்தார். "திருதராஷ்டிரா! நீ எத்தனையோ குற்றங்களுக்குத் துணை போய், பாண்டவர்களை அழிக்கப் பார்த்தாய். நம் குலத்தின் மருமகளைத் துகிலுரித்தபோது, அதைக் கண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தாய். அரக்கு மாளிகையில் பாண்டவர்களை வைத்து எரிக்கப் பார்த்தது, விஷம் கொடுத்தது, சூதாட்டத்தில் தோற்கடித்தது, பதின்மூன்று ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பியபோது வாளாவிருந்தது... என்று எத்தனை குற்றங்களைப் புரிந்தாய்! இவ்வளவு நடந்தும் இன்னும் உனக்கு உடலிலும், ஸம்சாரத்திலும் வெறுப்பு ஏற்படாமலும், காட்டுக்குச் சென்று பகவானை தியானிக்காமலும் இருக்கிறாயே! இவ்வாழ்க்கையிலும், உடலிலும், உணவிலும் உனக்கு அவ்வளவு விருப்பமா? தன் உடலின் மீது விருப்பத்தோடு இருப்பவன், சாவதற்குப் பயப்படுபவன் ஆகியோர் முக்தி அடைவதில்லை. உன்னுடைய வாழ்க்கை ஆனந்தமாக இருக்கிறது என்றா நினைக்கிறாய்? வேறு வழியின்றி பெரியப்பனாகிய கிழவனுக்கு சோறு இட வேண்டும் என்ற கடமைக்காக, இகழ்ந்து கொண்டே பீமசேனன் உனக்கு சோறு போடுகின்றான். இப்படி வேண்டாதவர்களோடு வாழ்ந்து, உடலைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, அந்த உடலின் மீது வெறுப்பு ஏற்பட்டு பெருமாளை நினைத்து அவனை அடைவது எவ்வளவு சிறந்தது? இது ஏன் உனக்குப் புரிய மறுக்கிறது?
"நீ காட்டுக்குச் செல்ல வேண்டும். காலம் வலியது. உன் தேஹத்தில் எவ்வளவுதான் ஆசையாக இருந்தாலும், ஒருநாள் திடீரென்று காலதேவன் வந்து அதைப் பறித்துப் போவான். தேஹம் ஒழிந்த பிறகு அடுத்த பிறவி எடுத்து, அதில் முதல் மூன்று வருஷங்கள் மல, மூத்திரங்களை விலக்கி கொள்ளத் தெரியாமலும்; அடுத்த எட்டு வருஷங்கள், குழந்தையாய் விளையாடியும்; மேலே இளைஞனாய் காம சுகத்தில் ஈடுபட்டும்; இன்னும் வயதானால், பெண், பிள்ளை என்று பெற்றுப் பொறுப்பு எடுத்துக் கொண்டும்; மேலும் வயதானபோது, மூப்புற்று, துன்புற்று... என்று காலம் விரயமாக, எப்போதுதான் ப்ரஹ்மத்தை தெரிந்து கொள்ளப் போகிறாய்? உனக்கு ஸம்சாரத்தில் வெறுப்பு ஏற்படவில்லையா? ஒருவன் ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, சம்பாதித்து கொண்டே, உற்றார் உறவினரோடு இருந்து கொண்டே, முக்தி அடைய முடியாது. முக்தி அடைவதற்கு முதல்படி, ஸம்சாரத்தில் (உலகியல் வாழ்வில்) வெறுப்பு! இதை ஆச்சாரியர்கள் 'நிர்வேதம்' என்று கூறுவார்கள். பற்றற்ற தன்மை ஏற்படாமல், வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளாமல், அனைத்திலும் பற்றுதலோடு இருந்து கொண்டே முக்தி அடைவது என்பது நடக்காது.
விதுரர் தொடர்ந்தார் : "திருதராஷ்டிரா! யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தவம் செய்யக் காட்டிற்குப் புறப்படு! இதுவே அதற்குத் தக்க தருணம்" என்று வலியுறுத்தினார்.
திருதராஷ்டிரனும் உண்மையை உணர்ந்தான். பொழுது புலர்வதற்குள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திருதராஷ்டிரனும், காந்தாரியும், விதுரரும் புறப்பட்டு ஹிமாசலத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர். பொழுது புலர்ந்தது. தர்மபுத்திரன் அவர்களைத் தேடினான்.
இன்னும் வரும்.
🙏 ஓம்
--- காத்திருப்போம்
No comments:
Post a Comment