Sunday, July 25, 2021

Dayaa satakam sloka 4

*தயா சதகம்
ச்லோகம் 4*

पराशरमुखान् वन्दे भगीरथनये स्थितान् ।
कमलाकान्तकारुण्यगङ्गाप्लावितमद्विधान्॥

பராசரமுகாந் வந்தே பகீரதநயே ஸ்திதாந்
கமலாகாந்த காருண்ய கங்காப்லாவித மத்விதாந்    .4.

உயர்த்தரு ளரிப்பத துனிப்புன னனைத்தே
அயர்த்திடு மெமைப்பர னடித்திரு வுணர்த்தும்
சயத்திரு பகீரத னயத்துறு தவத்தோர்
முயற்றிரு பராசரர் முதல்வர்வ ழிபட்டேன்.           .4.

[பகீரதன் கடுந்தவம் புரிந்து கங்கையை அவனிக்குக் கொண்டு வந்ததுபோல் கமலாகாந்தனுடைய கருணை என்கிற பரிசுத்தமான கங்கா ப்ரவாஹத்தைக் கொணர்ந்து நம் போன்றவரை அதில் அவகாஹிக்கும்படி செய்வித்த மாசில் மனந்தெளி முனிவரான பராசரர் முதலிய மஹர்ஷிகளை வழிபடுகிறோம்]

 (ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்காரின் திருவருட்சதகமாலை)

அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி

கமலா காந்தனின் கருணையாம் கங்கைபோல்
எமைப்போல் வரேலும் இழுக்கற மூழ்கிட
தமரைக் கழுவிய பகீரதன் போலவே
அமைந்த பராசரர் வழியரைப் பணிவனே!

பாண்டிச்சேரி ஸ்ரீ ராமபத்ரம் ஸ்வாமி

வேங்கடவன் நற்கருணை கங்கையென பொங்கிவர
தீங்கனைத்தும் நீங்கிடவே முங்கியமிழ் பேறடைய
பாங்குடைய சீருடையோன் பகிரதன் போன்றபுகழ்
பாங்கருஞ்சீர் பராசரர் வழியோரைப் பணிந்தேனே

உரை

இதிஹாஸங்களும் புராணங்களும் இல்லாவிட்டால் பகவானுடைய தயை என்கிற உத்தம குணத்தின் ப்ரபாவம் நமக்குத் தெரியமாட்டாது. பராசரர் முதலிய மஹர்ஷிகள் செய்தருளிய புராண க்ரந்தங்களால்தான் ஸ்ரீநிவாஸனுடைய தயா மஹிமை நமக்கு வெளியாகிறது. அவர்களின் க்ரந்தங்களைப் பாராயணம் செய்வதாலும் சிரவணம் செய்வதாலும் பகவானுடைய தயாப்ரவாஹமாகிய கங்கையின் அலைகளால் நாம் நனைக்கப்பட்டுக் குளிர ஸ்நாநம் செய்விக்கப்படுகிறோம். முதலில் ஆழ்வார்களை வந்தநம் செய்துவிட்டுப் பிறகு மஹர்ஷிகளை வந்தநம் செய்வதற்குக் கருத்து யாதெனில், இது தயா ஸ்தோத்ரமாகையாலும், ஆழ்வார்கள் ஸ்ரீநிவாஸனுடைய தயையையே மோக்ஷோபாயமாகக் கைப்பற்றிய சரணாகதிநிஷ்டராகையாலும், திருவாய்மொழி முதலிய ப்ரபந்தங்கள் நீண்ட சரணாகதியாகும் என்று பெரியோர்கள் சொல்லுவதாலும், பகவானுடைய தயாகுணத்தையே ஆழ்வார்கள் ப்ரதாநமாக ப்ரகாசப்படுத்துவதாலும், பராசரர் போன்ற புராணக் கவிகள் பக்திநிஷ்டரானபடியாலும், அவர்கள் தயாகுணத்தோடு மற்ற வீர்யம், பலம், தேஜஸ் முதலிய குணங்களையும் அதிகமாகக் காட்டுவதாலும், பகவானுடைய தயையின் அருமையையும் பெருமையையும் அறிந்து கொள்ளும் விஷயத்தில் ஆழ்வார்களின் உதவி பேருதவியாகும் என்பதுதான். மஹர்ஷிகள் பகீரதனைப் போல் தவம் செய்பவர்கள். தவத்தால் கங்கையைப் பிறருக்கு உபகரிப்பதற்காகக் கொண்டுவந்ததுபோல் மஹர்ஷிகளும் தங்கள் தபோபலத்தால் கங்காப்ரவாஹம் போன்ற தங்களுடைய க்ரந்தங்களை லோகோபகாரமாக ப்ரவர்த்திப்பித்தவர்கள்.

ஆக்கூர் ஸ்ரீஅனந்தாசார்யார் ஸ்வாமி உரை

முன் ஶ்லோகத்தில் இன்னார் இனையார் என்று வித்தியாஸம் இன்றி அனைவரும் ஸ்ரீநிவாஸனுடைய அருளைப்பெற்று உஜ்ஜீவிக்கும்படி க்ரந்தமூலமாய் உபகரித்த ஆழ்வார்களைத் தொழுது இந்த ஶ்லோகத்தால் ஆழ்வார்களுக்கும் முற்பட்டவரும் வேதங்களில் மறைந்து கிடக்கும் பகவானுடைய தயா ஸ்வரூபத்தை இதிஹாஸபுராணாதி நூற்களால் எடுத்துக்காட்டி ஆழ்வார்களைப் போலவே அனைவருக்கும் தயை உதவும்படி உபகரித்தவர்களான மஹர்ஷிகளை வணங்குகிறார். பராஶரர் முதலான என்று சொன்னது வ்யாஸர், வால்மீகி, ஶௌநகர், ஶாண்டில்யர் முதலான பல ரிஷிகளைக் குறிக்கிறது. பராஶரரை முன்னிட்டு சொன்னதுக்கு கருத்து "तस्मै नमो मुनिवराय पराशराय" என்று ஆளவந்தார் கொண்டாடினதை அநுஸந்தித்து செய்தது என்று. தேவலோகத்தில் தேவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த கங்கையை மானிடருக்கு உதவும்படி செய்தது பகீரதனுடைய நீதி. அதுபோல் இம்மஹரிஷிகள் நித்யமுக்தர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ப்ரம்மாநந்தத்தை  "அந்தண ரந்தியர் எல்லையில் நின்ற வனைத்துலகும்' என்றும், "सर्वस्तरतुदुर्गाणि" = அனைவரும் துன்பமற்று வாழ்கவென்றும், " सति च तु भगवानशेष पुंसाम्" அனைவருக்கும் ஹரியானவர் பிறப்பில்லாச் செல்வத்தை தந்தருள வேணுமென்றும் சொன்னபடி அறிஞர் பாமரர் எல்லாரும் அடையும்படி செய்தனர். தயை வந்த வழியைச் சொல்கிற படியால் தயாஸ்துதி என்றே கருதுக.

No comments:

Post a Comment