Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்ம ராமாயணம்- அயோத்யா காண்டம் - அத்தியாயம் 9 தொடர்ச்சி
பரதன் அயோத்திக்குத் திரும்பிச் செல்ல முற்படுகியில் கைகேயி ராமனிடம் தனியே கூறியது,
கண்ணீர் பெருகும் கண்களால் கைகேயி ராமனிடம், "மாயைவசப்பட்டு உன் மகுடாபிஷேகத்தைத் தடுத்த என்னை மன்னிக்க வேண்டுகிறேன். மகாவிஷ்ணுவாகிய நீ மனித உருவெடுத்து வந்துள்ளாய். எல்லாம் உன் செயலாக இருக்கும்போது மனிதர்கள் தன்னிச்சையாக எவ்விதம் செயல் புரிய முடியும். பொம்மலாட்டப் பதுமைகள்போல் உன் மாயையால் இந்த உலகம் ஆட்டுவிக்கப்படுகிறது. தேவகாரியத்தை பூர்த்தி செய்யவே நானும் உன்னால் இவ்வாறு செய்யத் தூண்டப்பட்டேன். இப்போது நீ யாரென்பதைப் புரிந்து கொண்டேன். என்னுடைய் பந்த பாசங்களை அறுத்து அறிவை புகட்ட உன்னை சரணம் அடைகிறேன்."
இவ்வாறு கூறிய அவளிடம் ராமன்,
"நான் எல்லோரிடமும் சமமாக இருக்கிறேன். எனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்பது கிடையாது. கல்ப தருவைப் போல அவரவர்க்கு வேண்டியதை அளிக்கிறேன்.ஆகையால் அமைதியுடன் சென்று என் நினைவில் நற்கதி பெறுவீராக."
கைகேயி அதைக்கேட்டு அதிசயமும் ஆனந்தமும் அடைந்து சென்றாள்.
பிறகு ராமன் அத்ரி மகரிஷியின் ஆசியைப் பெற அவர் ஆஸ்ரமம் சென்ரான். அனசூயை சீதைக்கு இரண்டு பட்டு வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள், விச்வகர்மாவினால் செய்யப்பட ஆபரணங்கள் இவற்றை அளித்தாள்.
அத்ரி மகரிஷி ராமனிடம்,
"நீ இந்த உலகத்தைப் படைத்து பல அவதாரங்கள் எடுத்துள்ளாய். ஆயினும் அந்த தேகங்களின் குணங்கள் உன்னிடம் ஒட்டுவதில்லை. மாயை உன்னிடம் பயத்தால் விலகி நிற்கின்றது."
பிறகு ராமன் தண்டகாரண்யம் சென்றான்.
அடுத்து ஆரண்ய காண்டம்.
No comments:
Post a Comment