Monday, July 26, 2021

Ajamila story

*அனைத்து பாவங்களையும் போக்கும் நாராயணா நாமம்!.*
 
ஓம் நமோ நாராயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை, குழந்தை தவறாக சொல்லியிருந்தாலும் தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில்

"சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து" என்று வருகிறது.

இதற்கான அர்த்தம் என்னவென்றால் பகவான் ஸ்ரீ நாராயணனின் நாமத்தை தெரிந்து கூட சொல்ல வேண்டாம். தெரியாமல் நாரயணா என்று கூப்பிட்ட அந்த சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது.

ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது. அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர். ஒரு முறை யாக யக்‌ஷத்திற்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி காட்டுக்கு சென்றார் அஜாமிளன். சென்ற இடத்தில், ஒரு தாசியை கண்டு அவளுடன் காதல்கொண்டு, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார். அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 குழந்தைகள் பிறக்கிறார்கள்.

அஜாமிளனின் முன் வினை பயனால் தனது கடைசி குழந்தைக்கு பகவான் நாராயணன் பெயரை சூட்டுகிறார். கடைசி பிள்ளையின் மேல் அதிக பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா நாராயணா என்று பல முறை கூறுகிறார். கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள். யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைக்கிறார். நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள். யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள். அதற்கு, பகவான் விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காக்கிறார்கள்.

இதை கேட்ட அஜாமிளன், பகவான் நாமத்தின் மகிமையை உணர்ந்து, தனது மீதி நாட்களை ஹரித்வாரில் பகவன் நாம சங்கீர்த்தனத்தில் கழித்து பிறகு வைகுண்ட பதவி அடைகிறார்.

பகவான் மகா விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் "பகவான் மகா விஷ்ணுவிற்கு தான் கட்டுப்பட்டவர் என்றும், பகவானின் பக்தர்களையும் பகவானின் நாமத்தை கூறுபவர்களையும் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று தனது யம தூதர்களுக்கு உரைக்கிறார். அவ்வளவு சக்தி வாய்ந்தது நாராயணன் நாமம்.

ஓம் நமோ நாராயணாய!.

*தொகுப்பு* :
*ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்*
  🦅 *சர்வம்🌎 விஷ்ணு மயம்* 👈

No comments:

Post a Comment