Monday, June 21, 2021

Rama Avatar part1

   *தஸாவதாரம்* 

          *ஸ்ரீராமவதாரம்* 

 *பகுதி 01* 

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ர நாம ததுல்யம் ராம நாம வரானனே!...

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும் செம்மை சேர் நாமம்தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான். எனக் கம்பர் பெருமான் தெரிவிக்கிறார்.       

    வால்மீகி முனிவரின் ஆசிரமம்; தமசா நதிக்கரையில்  அமைந்து இருந்தது. ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு, வால்மீகி முனிவர் அவரை நோக்கி, நாரதரே இந்த யுகத்தில்; முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய; நேர்மையான சத்தியம் தவறாத, வீர தீர பராக்கிரமசாலியான; ஒருவன் யாராவது இருக்கிறானா என்று கேட்டார். அதற்கு நாரதர்; ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார்.

நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின், வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார். நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார்.

அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில், எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி, அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி, "இதயமற்ற அரக்கனே! என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய்!" என்று உணர்ச்சி வசப்பட, அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் வெளிவந்தன.

ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில், பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி வினயத்துடன் நின்ற போது, பிரம்மா, "வால்மீகி, என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும்!" என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். அதைப் படித்து மகிழாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

     மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.
 
பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர். இவற்றில் ராமாவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்க ளிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான்.
 
ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.

      சித்திரை மாதத்து வளர்பிறையில் நவமி திதியில், புனர்பூசம் நட்சத்திரத்தில், ஐந்து கிரகங்கள் தாங்கள் உச்சமாய் நிற்க, கடக லக்கினத்தில் வாக்கின் அதிபதி (அதாவது குரு) இந்துவோடு (அதாவது சந்திரனோடு) கூட உதயம் ஆகுகையில் ஜகந்நாதரான, அனைத்து உலகங்களும் வணங்குபவரான, திவ்ய லட்சணங்கள் பொருந்திய, விஷ்ணுவின் பாதி அம்சமான, மகா பாக்கியசாலியான, இக்ஷ்வாகு வம்சத்தை களிப்பிக்கின்ற (ஸ்ரீ)ராமர் எனும் புத்திரனை கெளசல்யா பெற்றாள். அளவில்லாத தேஜஸுள்ள அந்த புத்திரனாலே கெளசல்யா,  அதிதி போல் ஒளிர்ந்தாள். சாட்சாத் விஷ்ணுவினுடைய நாலில் ஓர் அம்சமான அனைத்து குணங்களோடு கூடின பரதர் எனும் பெயருள்ள சத்திய பராக்கிரமமுடையவர் கைகேயினிடத்தில் பிறந்தார்.

"பிறகு, விஷ்ணுவினுடைய பாதி அம்சத்தோடு கூடின, எல்லா அஸ்திரவித்தைகளிலும் வல்லவர்களான, வீரர்களான லக்ஷ்மணர், சத்ருக்னர் என்ற இரண்டு பிள்ளைகளை சுமித்ரா பெற்றாள். சம மனதுடைய பரதரோவெனில் பூச நட்சத்திரத்தில் மீன லக்கினத்தில் பிறந்தார். செளமித்ரர்கள் (அதாவது சுமித்ராவின் மைந்தர்களான லக்ஷ்மணர், சத்ருக்னர்) ஆயில்ய நட்சத்திரத்தில் சூர்யன் உச்சனாயிருக்க கடக லக்கினத்தில் பிறந்தார்கள். ஒளியால் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு ஒப்பான, மகாத்மாகளான, நற்குணமுள்ள நான்கு புதல்வர்கள் தனியாய் ஒருவருக்கொருவர் சமமானவர்களாய் ராஜாவிற்கு பிறந்தார்கள். கந்தர்வர்கள் மதுரமாய் பாடினார்கள். அப்சரஸ் கணங்களும் நடனம் செய்தார்கள். தேவ துந்துபிகள் முழங்கின. பூமாரியும் ஆகாயத்திலிருந்து பொழிந்தது. அயோத்யாவில் ஜனக்கூட்டமும், மகா உற்சவமும் உண்டாயிற்று.

"வீதிகள் ஜனங்களால் நெருக்கப்பட்டவையாகவும், நாட்டியர்களாலும், நர்த்தகர்களாலும் நிறைந்தவையாகவும், பாடகர்களாலும், வாத்தியம் வாசிப்போராலும் அப்படியே மற்றவர்களாலும் சப்தம் நிறைந்திருந்தன.  பிராமணர்களுக்கு செல்வத்தை, கோ (அதாவது பசு) தனங்களை, ஆயிரக்கணக்காக கொடுத்தார். பதினோருநாள் சென்றபின், பெயரிடும் கர்மத்தை பின் கூறியவாறு செய்தார். மகாத்மாவான மூத்தவரை (ஸ்ரீ)ராமரென்றும், கைகேயியின் மைந்தனை பரதரென்றும், சுமித்ரையின் புத்திரனை லக்ஷ்மணரென்றும் மற்றொருவனை சத்ருக்னர் என்றும், வசிஷ்டர்  அப்பொழுது பெயர்களை இட்டார். பட்டணத்திலும், கிராமத்திலுமுள்ள பிராமணர்களுக்கு விருந்திட்டார். இன்னும் பிராமணர்களுக்கு அளவில்லாத அநேக ரத்தின குவியலையும் கொடுத்தார். அவர்கள் குழந்தைகளுக்கு ஜனன கிரியை முதலிய எல்லா காரியங்களையும் நடத்தினார்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீராமாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*Rama Avatar

No comments:

Post a Comment