அத்யாத்ம ராமாயணம் பாலகாண்டம்
அத்தியாயம் 5 (தொடர்ச்சி)
அஹல்யையின் சரிதம் வாலமீகியில் சொல்லப் பட்டதே போல இங்கும் காணப்படுகிறது. இந்திரன் கௌதமர் உருவத்தில் வந்ததும் அவனுடைய சாபமும் அஹல்யையை சபித்ததும் அதே போல இருந்தாலும், வால்மீகிராமாயணத்தில் அஹல்யை கல்லானதாகக் கூறவில்லை. யார் கண்களுக்கும்தென்படாது காற்றே உணவாக இருக்கும்படிதான் சபிக்கப்பட்டாள்.
ஆனால் இங்கு அவள் கல்லாகுமாறு சபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது, இதை பின்பற்றியே கம்பனும் சித்தரிக்கிறான்.
.வால்மீகியின் கூற்றுப்படி இந்திரன் என்று தெரிந்தே அஹல்யை தன் அழகினால் இந்திரனே மயங்கினான் என்ற பெருமை கொண்டு அவனுக்கு உடன்பட்டாள் . ஆனாலும் அவள் நீண்ட நாட்கள் செய்த தவத்தால் தூய்மை அடைந்தாள் . ராமனின் பாதம் ஆச்ரமத்தில் பட்டதும் அவள் பாவம் நீங்கியது.
அத்யாத்ம ராமாயணத்தில் அவள் கல்லுருவாக இருந்து ராமன் பாதஸ்பரிசத்தால் தன்னுரு அடைந்தாள் என்று கூறப்பட்டிருக்கிறது.
கம்பனின் சித்திரம் சிறிது மாறுபடுகிறது. கௌதமர் அஹல்யை சாபவிமோசனம் அடைந்ததும் அவ்விடம் வருகிறார் . அப்போது விஸ்வாமித்திரர் அவரிடம் , "நெஞ்சினால் பிழைப்பு இல்லாளை நீ அழைத்திடுக," என்கிறார். அதாவது அவள் இந்திரனை கௌதமர் என்று .எண்ணியதால் அவள் தவறிழைக்கவில்லை என்று பொருள்.
இந்த இடத்தில் கம்பனுடைய அழகிய கவிதை பின்வருமாறு.
அஹல்யை சுய உருக்கொண்டதைக் கண்டு விஸ்வாமித்திரர் ராமனிடம் கூறுகிறார் .
.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்று ஓர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்தண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்
இது கம்பனின் சொல் வண்ணம்.
அஹல்யை ராமனை நாராயணனாகவே கண்டு துதித்து வணங்கித் தன் பதியுடன் சேர்ந்தாள் .
அவளுடைய துதியின் சுருக்கம் பின்வருமாறு.
"ப்ரம்ம ருத்ராதிதேவர்களால் தேடப்படும் தங்கள் பாததூளியால் பவித்திரம் அடைந்தேன். எவருடைய பாததூளியால் பவித்திரம் அடைந்த கங்கையால் தேவர்களும் தூய்மை அடைகின்றார்களோ அந்த பாததரிசனம் கிடைக்க நான் செய்த புண்ணியம்தான் என்னே!
யத் பாதபங்கஜ ரஜ: ஸ்ருதிபிர்விம்ருக்யம்
யன்னாபிபங்கஜபவ: கமலாஸனஸ்ச
யன்னாமஸார ரஸிகோ பகவான் புராரி:
தம் ராமசந்தரம் அனிசம் ஹ்ருதி பாவயாமி
எவருடைய பாததூளியானது வேதங்களால் தேடப்படுகிறதோ , எவருடைய நாபிக்கமலத்தில் ப்ரம்மா அமர்ந்துள்ளாரோ, சிவ பெருமான் யாருடைய நாமத்தின் ரசிகரோ, அவரை நான் ஹ்ருதயத்தில் ஸ்மரிக்கிறேன்.
நமோஸ்து தே ராம தவாங்க்ரிபங்கஜம்
ச்ரியா த்ருதம் வக்ஷஸி லாலிதம் ப்ரியாத்
ஆக்ராந்தம் ஏகேன ஜகத்த்ரயம் புரா
த்யேயம் முனீந்த்ரை: அபிமான வர்ஜிதை:
ராமா உன்னுடைய பாதத்தாமரையானது ஶ்ரீதேவியால் மகிழ்ந்து இதயத்தில் வைக்கப்பட்டது. உன் ஒரு பாதத்தினால் மூவுலகமும் வ்யாபிக்கப்பட்டது. முற்றும் துறந்த முனிவர்களால் த்யானிக்கப்படுகிறது. உன்னை வணங்குகிறேன்.
ப்ரணவத்தின் சாராம்சம் நீ. வாக்குக்கு அப்பாற்பட்டவன். ஒன்றே ஆன நீ உன் மாயையால் பலவாகத் தோன்றுகிறாய் . உன் மாயையால் மயக்குண்டவர் உன்னை மானுடனாக எண்ணி உன் மகிமையை அறியார். பெண்ணான என்னால் எவ்வாறு உன் உண்மை ஸ்வரூபத்தை அறிய முடியும்? ஆகவே உன்னை மனப்பூர்வமான பக்தியுடன் நூறு முறை வணங்குவேனாக. எங்கிருந்தாலும் எப்போதும் உன் பதக்கமலத்தில் பக்தி இருக்குமாறு அருள்வாய்.'
" பவபயஹரம் ஏகம் பானுகோடிப்ரகாசம்
கரத்ருத சரசாபம்காலமேகாவபாஸம்
கனகருசிரவஸ்த்ரம் ரத்னவத் குண்டலாட்யம்
கமல விசத நேத்ரம் ஸானுஜம் ராமம் ஈடே
ஸம்சார பயத்தைப் போக்குபவரும், ஆயிரம் சூரியனைப் போல் ப்ரகாசிப்பவரும், கரத்தில் வில்லேந்தியவரும் , நீருண்டமேகம் போன்றவரும், பொன்னிற வஸ்திரம் தரித்தவரும், ரத்தினகுண்டலம் அணிந்தவரும், விசாலமான் அழகிய தாமரைக் கண்ணரும் ஆன லக்ஷ்மணனுடன் கூடிய ராமனை நமஸ்கரிக்கிறேன்,."
No comments:
Post a Comment