*தஸாவதாரம்*
*ஸ்ரீபரசுராமவதாரம்*
*பகுதி 03*
*ராமாவதாரத்தில் பரசுராமர்:* ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.
*மகாபாரதத்தில் பரசுராமர்:*
காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.
பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குருக்ஷேத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயம்புகிறார்.
*கோயில்கள்:* பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம க்ஷேத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீபரசுராமாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment