*தஸாவதாரம்*
*ஸ்ரீநரசிம்மாவதாரம்*
*பகுதி 01*
மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். தேவர்கள் மற்றும் அசுரர்கள் பற்றிய கதைகளை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அசுரர்கள் மனித குலத்தையும், தேவர்களையும் அவ்வப்போது துன்புறுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை காக்கும் நோக்கத்தோடு இறைவன் மற்றும் இறைவி ஒரு அவதாரம் எடுத்து காப்பதும் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதுபோல் ஒரு அரக்கன் தன் சொந்த மகனை அழிக்க நினைத்து அவனே அழிந்த ஒரு சரித்திரத்தை நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.
மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் "நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை" என்பார்கள்.
நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-
சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதாலும், துவாரபாலகர்கள் ஜெய, விஜயர்களின் சாபத்தின் படி அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந் தான்.
*இந்திரனின் செயல்*
இதற்கிடையில், ஹிரண்யகசிபு தன் மக்களை வழிநடத்தவில்லை என்பதை அறிந்து கொண்டார் இந்திர பகவான். இந்த தருணத்தைப் பயன்படுத்தி, அசுரர்களை முற்றிலும் அழிக்க எண்ணினார் அவர். இதனால் தேவர்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து அசுரர்களை தாக்கினர் இந்திர பகவான். அசுரர்கள் போரில் தோல்வியைத் தழுவினர். வெற்றியின் மமதையால், ஹிரண்யகசிபுவின் மனைவி கயாதுவைத் தூக்கிச் செல்ல துணிந்தார் இந்திர பகவான். ஆனால் பக்திமானாகிய அவன் மனைவியை நாரத முனிவர் காப்பாற்றினார். அவளுடைய கற்பைக் காக்கவும், வயிற்றில் இருக்கும் அவள் குழந்தையை பாதுகாக்கவும் தன்னுடைய ஆசிரமத்திற்கு அவளை அழைத்துச் சென்றார் நாரதர்.
கயாது ஒரு அதிபுத்திசாலியாக இருப்பதை அறிந்தார் நாரத முனிவர். எதையும் உடனுடக்குடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவளுக்கு இருந்தது. மாலை வேளைகளில் நாரத முனிவர் ஓய்வெடுக்கும் சமயத்தில், கயாதுவிற்கு பகவான் விஷ்ணுவின் கதைகளைக் கூறினார். இவற்றைக் கேள்விப்பட்ட கயாது , விரைவில் பகவான் விஷ்ணு மீது ஒரு இணைப்பை உணர்ந்தாள். அவள் கருவில் இருக்கும் அந்தக் குழந்தையும் இந்த கதைகளைக் கேட்டபடி இருந்தது. அதனால் அந்தக் குழந்தையும் பகவான் விஷ்ணு மீது தீராத பக்தி கொண்டது.
*பிரம்மாவின் வரம்*
இதற்கிடையில் சொர்க்கத்தில் திடீரென்று காற்று அனலாக வீசத் தொடங்கியது. தேவர்கள் மூச்சு விடவும் சிரமப்பட்டனர். என்ன நடக்கிறது என்று அனைவரும் வியந்தனர். இதற்கான காரணம் என்னவென்று தேடித் பார்க்கையில், ஹிரண்யகசிபுவின் தவம் அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததாக மாறி, சொர்க்கத்தின் காற்றை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஹிரண்யகசிபுவை சந்திக்க பிரம்ம தேவர் சம்மதித்து, அவனைக் காண பூலோகம் புறப்பட்டார்.
பிரம்ம தேவர் பூலோகத்தில் ஹிரண்யகசிபுவை பார்த்து அதிர்ந்துவிட்டார். அவனுடைய ஆழ்ந்த தவத்தின் காரணமாக அவன் மேல் கொடிகள் மற்றும் செடிகள் படர்ந்து இருந்தன. ஹிரண்யகசிபுவின் தவத்தை மெச்சிய பிரம்ம தேவர் அவருடைய கமண்டலத்தில் இருந்து சிறிது நீரை எடுத்து அவன் மீது தெளித்தார். அசுர அரசன் ஹிரண்யகசிபு தன்னுடைய சுயநினைவிற்கு வந்து பிரம்ம தேவர் அவன் கண்முன் நிற்பதை உணர்ந்தான். பிரம்ம தேவர் அவனிடம் விரும்பும் வரத்தை கேட்கச் சொன்னார். உடனடியாக ஹிரண்யகசிபு தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அது இயற்கையுடன் தொடர்பு கொண்ட ஒரு வரம் என்பதால் அதனை அளிக்க பிரம்ம தேவர் மறுத்து விட்டார். அந்த புத்திசாலி அரக்கன் பின்வருமாறு ஒரு வரம் கேட்டான்
*ஜெய் ஸ்ரீநரசிம்மா....*
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீநரசிம்மாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment