Wednesday, June 16, 2021

Adyatma ramayana bala kanda adhyaya3 in tamil

Courtesy:Smt.Dr.Saraoja Ramanujam

அத்யாத்ம ராமாயணம்- பாலகாண்டம் -அத்தியாயம் 3 தொடர்ச்சி

அத்யாத்ம ராமாயணத்தில் ராமனின் குழந்தைப் பருவம் சுருக்கமாகக் காணப்படுகிறது. அதில் கூறியுள்ளதாவது,
தசரதர் சாப்பிடுகையில் ராமனை அழைப்பாராம் . விளையாட்டில் ஈடுபட்ட ராமன் . அரசர் புன்னகையுடன் கௌசல்யையை அனுப்ப அவன் அவள் கைக்கெட்டாமல் போக்குக் காட்டிப் பிறகு தானாகவே புன்சிரிப்புடன் தந்தையிடம் செல்வானாம். தூசி படிந்த தன் கையால் உணவருந்திப் பிறகு மறுபடி விளயாடச்செல்வானாம்

. இது கண்ணனை நினைவூட்டுகிறது என்றால் அடுத்த சம்பவம் கண்ணனையே காட்டுகிறது. வ்யாசர் பாகவதபுராணத்தின் பின்னரே இதை இயற்றி இருப்பாரோ , அதனால் தான் அவர் கண்ணனின் நினைவில் ராமனின் பாலலீலையை சித்தரித்திருப்பாரோ எனத்தோன்றுகிறது.

கௌசல்யை ஏதோ வேலையாக இருக்கையில் ராமன் தனக்கு பசிக்கிறது என்றும் உணவு வேண்டும் என்றும் கூறினான். அவள் அதை கவனிக்கவில்லை .அப்போது கோபம் கொண்டு பால் வெண்ணைக் குடத்தை உடைத்து அதில் இருந்தவற்றை தன் சகோதரர்களுடன் பங்கிட்டானாம்.

கௌசல்யை வருவதை பார்த்து அவர்கள் ஓடவும் கௌசல்யை தட்டுத்தடுமாறி அவர்கள் சென்ற வழியில் சென்று கடைசியில் ராமனைப் பிடித்து விட்டாளாம் , ஆனால் அவன் திருமுகத்தைப் பார்த்ததும் அவளுக்கு கோபமே வரவில்லையாம். ஆனாலும் ராமன் பொய் அழுகை அழ கௌசல்யை அவனைத் தழுவி சமாதானம் செய்கிறாள் என்ற இந்த சம்பவமும் கண்ணனுக்கே பொருநதுகிறது.

சிவபெருமான் கூறுகிறார். ராமனுடைய பாலலீலைகள் பக்தர்களுக்கு மட்டுமே காணப்படும் என்று. அதனால் தானோ என்னவோ துளசி தாசரால் அதை வர்ணிக்க முடிந்த்து போலும்.

நாம் இப்போது துளசியின் வர்ணனையைக் காண்போம்.
ஒரு சித்திரம் .
கௌசல்யை ராமனை தொட்டிலில் இட்டு விட்டுத் தன் பூஜையைச் செய்தாள். நைவெத்தியங்களை சமர்ப்பித்துப் பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்து பார்க்கையில் குழந்தையான ராமன் அவைகளை சாப்பிட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டாள். தொட்டிலில் இருந்தவன் எப்படி அங்கு வந்தான் என்று சென்று பார்க்கையில் அவன் முன்போலவே தொட்டிலில் உறங்கக் கண்டாள்.

மீண்டும் பூஜை அறைக்கு வந்தால் அங்கு ராமன் நைவேத்தியத்தை உண்ணக் கண்டாள். அவள் பயங்து நடுங்கி இது என்ன மாயை என்று திகைக்கையில் ராமன் தன் உண்மை ஸ்வரூபத்தைக் காட்ட அவள் மயங்க மீண்டும் குழந்தையாக மாறினான் .

அதை நம்ப முடியாமல் வியந்த கௌசலயையிடம் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கூறினான். கௌசல்யை அவனைத் தொழுது அவனுடைய மாயை தன் கண்ணை மறைக்காமல் இருக்க வேண்டினாள்.
அத்யாத்ம ராமாயணத்தில் உள்ள லீலைகளையும் துலசி அப்படியே வர்ணிக்கிறார்.

துமக் சலத ராமசந்த்ர என்ற அபங்கத்தில் அவர் ராமன் தவழ்ந்து செல்கையில் அவன் விழுந்து விழுந்து எழுவதை தசரதரின் ராணிகள் அனுபவித்தனர் என்கிறார்.

ராமபக்தரான அவருக்கு எப்படி கண்ணனின் லீலைகளை ராமனுக்குப் பொருத்த முடிந்தது என்பதற்கு ஒரு விளக்கம் தரப் பட்டிருக்கிறது.

அவர் பிருந்தாவனம் வந்தபோது அவருக்கு கண்ணன் ராமனாகக் காட்சி அளித்தானாம்.
பின்னர் ராமனும் மற்ற சிறுவர்களும் உபநயனம் செய்விக்கப்பட்டு குருகுல வாசம் செய்து சாஸ்த்ரங்களையும், மற்ற க்ஷ்த்ரியர்களுக்குரிய கலைகளையும் கற்றுத்தேர்ந்தனர்.

இவ்வாறு ராமனாகிய பரம்பொருள் மனித உருவத்தில் எல்லாம் செய்வது போல் தோன்றினாலும் உண்மையில் அவனுக்கு செய்கையே இல்லை என்று மஹாதேவன் கூறினார்.

  

No comments:

Post a Comment