Saturday, May 8, 2021

Blessing for a marriage - Periyavaa

*'சவரன்  இங்கே  வரன் எங்கே?"*

கல்வியிலும் பண்பாட்டிலும்  ஒழுக்கத்திலும் சிறந்த  ஒரு அரசியல்வாதியை நினைவு கூற   இந்த கட்டுரை தேவைப்படுகிறது.   
ராதாகிருஷ்ணன் என்பவன் டாக்டராக  ஆசைப்பட்டாலும்  மார்க் போதவில்லை.  ஆகவே  விஞ்ஞான முதுநிலைக்கு M.Sc  படித்து அதன்மூலம் டாக்டராக திட்டம். அவனது   தலைமை உபாத்தியாயராக  இருந்து  தகுதி காரணமாக  ராஜா ஐயர் தமிழக மாநில  மேலவை  அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.ராதாகிருஷ்ணனுக்கு  ராஜா ஐயரிடம்  மதிப்பு உண்டு. வந்து வணங்கினான்.
''என்னப்பா  ராதாகிருஷ்ணா, M.Sc  பரிக்ஷை எல்லாம்   எப்படி எழுதி இருக்கிறாய்?''' நன்றாக எழுதி முதலிடத்தில் வருவேன்... இருந்தாலும்....''' ஏன்  என்ன சந்தேகம்?'' 'பரிக்ஷை முடிவுகள்  நாளைக்கு வெளிவருது. மருத்துவ கல்லூரி விண்ணப்பம் சமர்ப்பிக்க  நாளையே கடைசிநாள். எப்படி  விண்ணப்பிப்பது...?' சென்னை போன்ற  நகரங்களில் உடனே பல்கலைக்கழகத்துக்கு சென்று  முடிவு அறியலாம்.  இந்த ஊர்  ராமநாதபுரத்துக்கு ஒரு நாள் தள்ளி தான் முடிவு தெரியும்.....''நீ சொல்வதைப்பார்த்தால்கிராமத்து  மாணவர்களுக்கு இது  சட்டத்துக்கு புறம்பான  அநீதியா?'. ''ஆமாம்  ஸார் ''''நிச்சயமாகவா?''' ஆமாம் ஸார்  '''கவலைப்படாதே. நான் முதலமைச்சரிடம் பேசுகிறேன்.  மருத்துவ கல்லூரி  விண்ணப்ப  கடைசிநாளை தள்ளிப்போட முடியுமா என்று பார்க்கிறேன்.  சாயந்திரம் வந்து பார்'. அப்போதெல்லாம் வீடுகளில் டெலிபோன் கிடையாது. தபாலாபீஸ் போய்  முதலமைச்சர் காரியதரிசிக்கு போன் செய்து  விஷயம் சொல்லி, அவரும் உடனே  முதலமைச்சரிடம் இந்த விஷயம் சென்றது.
ராஜா ஐயர்  சொன்னால் அது நியாயமான விஷயமாக இருக்கும் என்று  முதலமைச்சர்  அன்றிரவு அரசாங்க உத்தரவை ஆணையிட்டு    விண்ணப்பிக்கும் கடைசிநாள் தள்ளிப்போடப்பட்டது. இப்படிப்பட்ட  ராஜா ஐயர்    மஹாபெரியவா பக்தர். தாராள மனசு. எல்லோருக்கும்  வித்யாசம் இன்றி உதவுபவர்.
ராஜா ஐயர் 1974ல்  மறைந்தபோது  அவரது ரெண்டு மகள்களுக்கும்  திருமணமாகவில்லை. பொருத்தமான வரன் கிடைக்கவில்லை.  மஹா பெரியவாளைப் போய் பாருங்கள் என்று நண்பர்கள் சொன்னதால்  அவர் மகன் சூர்யநாராயணன்  கலவைக்கு சென்றார். 
சாயந்திரம் ஐயர் சூர்யநாராயணன் கலவையில் குளத்தருகே  ஒரு பக்கம்  நிற்கிறார்.  கிருதா, சட்டை, மீசையோடு...ரெண்டு சகோதரிகளில் மூத்தவர் குளத்தின் மறுபக்கத்தில் மஹா பெரியவா வருகைக்கு  காத்திருக்கிறார்.  
சூர்யநாராயணன் அருகே   ஒரு  வயசான  மைலாப்பூர்   மடிசார் மாமி.  மஞ்சள் பூசிய முகத்தில் நெற்றியிலும்  வகிட்டிலும்  ஏராளமான சிவப்பு  குங்குமம். கழுத்தில் கனமான தங்கச்சங்கிலி கோர்த்த  தொங்க தொங்க  தாலி, வைர  மூக்குத்தி  பேசரி, அதற்கேற்ப  காதுகளில்  டால் அடிக்கும்  பெரிய தோடுகள்   ''ஜெயஜெய சங்கர  ஹரஹர சங்கர'' என்று  சொல்லிக் கொண்டே  கையில் மூங்கில் தட்டில் பழங்கள் .   மகா பெரியவா  தரிசனத்துக்கு காத்திருக்கிறாள்.
திடீரென்று கூட்டத்தில் ஒரு  சலசலப்பு. இதோ  மின்னல் மாதிரி பெரியவா மூன்று  சிஷ்யர்களுடன் வந்தார்.  அவரது  குரு சமாதியில் பிரார்த்தனை முடிந்து எல்லோரையும்  பார்த்தார். அவர் பார்வை சூர்யநாராயணன் மேல் விழுந்தது.  வார்த்தையால் விளக்க முடியா  அதிர்ச்சி, நடுக்கம் சூர்யாவிற்கு.  பெரியவா நடந்து வந்தவர்  சூரியநாராயணன் அருகே வந்தார். அதே பார்வை  இதயம் வரை ஊடுருவியது.   
பெரியவா சூரியா  அருகே வந்தபோது  ஒரு சிஷ்யன்   பெரியவா ஜாடைகாட்ட   ''நீங்க யாரு?''  என்று விசாரித்தான்.

'' நான் ராமநாதபுரம் எம். ராஜா ஐயர் புள்ளை ' . சூர்யநாராயணன் உரக்க சொன்னது  மஹா  பெரியவா காதில் விழுந்தது.  மஹா பெரியவா  நடந்து உள்ளே சென்றார்.  நேரமாகியது. வெளியே வரவில்லை. காத்திருந்த  வயசான மாமி  பொறுமை இழந்து  சூர்யாவிடம் கேட்டாள் :
'' ஏண்டாப்பா, இன்னிக்கு வெள்ளிக்கிழமை . விசேஷமான நாள்.  நான் பரமேஸ்வரனையே தரிசித்த பாக்யம் கிடைச்சுது.   நீ  எதுக்கு  இந்தமாதிரி பேண்ட்,  சட்டை, கிருதா, மீசையோடு வந்தியோ தெரியல. அவரது தர்சனம் கிடைக்கற நேரத்தில் பெரிசா கத்தறே . இப்படி பண்ணறது நல்லதா?  இது தான்  நீ   பெரியவாளுக்கு தர மரியாதையா? சொல்லு ?''  மாமி குமுறினாள் .

சூர்யாவின் மனைவி அருகே நின்றிருந்தாள் . அவளுக்கும்  மாமி  சொல்வது ஞாயம் என்று பட்டாலும்  கணவனிடம் எப்படி சொல்வது...  தலைகுனிந்து பேசாமல் இருந்தாள்.
 ''இவர் இப்படி கத்தியிருக்க வேண்டாம்'' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
''சரி நாம இங்கிருந்து தூர குளத்தை தாண்டி வாசல் பக்கம் போயிடுவோம்' என்று  சூர்யாவும் மனைவியும்  வெளியே நகரும்போது  உள்ளேயிருந்து  மின்னல் ஒளி மீண்டும் வெளியே வந்தது.
கடகடவென்று ்சூர்யா  சட்டையை கழட்டினார். மெதுவாக நகர்ந்து சுவரை ஒட்டி குற்ற  உணர்ச்சியோடு  நின்றபோது  ஒரு அதிசயம் நிகழ்ந்தது.  இதற்கு அருகே இருந்தவர்கள் சாக்ஷி. சுவரோரத்தில் சூர்யாவை  மஹா பெரியவா பார்த்துவிட்டார். அருகே ஜாடையில் அழைத்து  யார்?  என்று  கேட்டார்.
 '' ராஜா அய்யர் பிள்ளை, ராமநாதபுரம்'  என்று குரலை தாழ்த்தி சூர்யாவின் பதில்.
ஒரு சில நிமிஷ  மௌன கணங்கள்.  கண் மூடி இருந்தார். பிறகு   சில ஜாடைகள் செய்தார். சிஷ்யர்கள் அதை வார்த்தையில் வடித்தார்கள். பெரியவா ஜாடையாக  சொன்னது ராஜா ஐயரைப்  பற்றிய  பெரியவாவின் பழைய நினைவுகள்.  அவற்றை  சிஷ்யர்கள்  வார்த்தைகளில் சொன்னார்கள். முக்கால் மணிநேரம்.  சொன்ன  விஷயங்கள்:
ராஜா ஐயர் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கரங்களில் தேசிய விருது வாங்கியது. மேல் சபையில் ராஜா அய்யர் வழங்கிய, அளித்த பொது நல சேவைகள், அவரது  பெரியவா பக்தி,   பற்றி  கூறினார்கள். பெரியவாளும் சிஷ்யன் விளக்கியதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சூர்யாவுக்கு  மஹா பெரியவா தனது   தந்தையின் பெருமையை நன்றாக ஞாபகம் வைத்துக்  கொண்டு  சொல்லியதை கேட்கும்போது  ஆனந்தக்  கண்ணீர் ஆறாக பெருகியது. குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுதார்.
 ''எதுக்கு இப்போ வந்தே?'  --   ஜாடையில் மஹா பெரியவா கேட்டார். ''என் ரெண்டு சகோதரிகளுக்கும் நல்ல வரன் கிடைக்கலே. கல்யாணம் தள்ளிண்டே  போகிறது. கவலையா இருக்கிறது.   அப்பா  காலத்திலேயே நடக்கணும்னு  ஆசைப்பட்டார்  நடக்கலே. பெரியவாளை   தரிசனம் பண்ணி ஆசீர்வாதம் பெற வந்தோம்.'' பெரியவா சூர்யாவின் அருகே  இருந்த  சகோதரிகளில்  பெரிய  பெண்ணை பார்த்து ஜாடையாக ''இவளுக்கா?'' என்கிறார். ''ஆமாம்''.
பெரியவா சிரித்துக்கொண்டே தன் கழுத்து ருத்ராக்ஷத்தை தடவி காட்டி 'கல்யாணத்துக்கு பெண்ணுக்கு நகையெல்லாம் ரெடியா ?'' என்று கேட்கிறார்.
''ஆமாம் பெரியவா. சவரன்  எல்லாம் ரெடியாக இருக்கு. வரன்  தான் கிடைக்கலே ''
பெரியவா கண்கள் மலர்ந்தன. அருகே இருந்த அந்த பெண்ணை புன்சிரிப்போடு பார்த்தார், தலை அசைத்தார். தெய்வத்தின் கைகள் ஆசிர்வதித்தன. சாயந்திரம் மணி ஆறே முக்கால் ஆகிவிட்டது. வெளியே இருட்டு மயம். சென்னை திரும்பிப்  போக நேரமாயிற்று. எப்படி பெரியவாவிடமிருந்து உத்தரவு வாங்குவது?
''பெரியவா நான் உத்தரவு வாங்கிக்கலாமா?'' தைரியமாக சூர்யா கேட்டார்.
ஜாடையில் பதில் :  "மெட்றாஸ்லேருந்து எப்படி வந்தே?''
''கார்லே வந்திருக்கோம் பெரியவா ''. 
பெரியவா  ஒரு சிஷ்யனிடம் " "சென்னையில்  இன்னிக்கு மழையா?'' என்று ஜாடையில் கேட்கிறார். ''இல்லை'' என்கிறான். சில நிமிஷ மௌனம். ''போகும்போது ஜாக்கிரதை.''  ஜாடை காட்டி  அபய ஹஸ்தம் வாழ்த்தியது தெய்வம்.
என்ன  ஞான திருஷ்டி!  கார் கலவையிலிருந்து கிளம்பி  சிறிது தூரம்   சென்றவுடனே  சில வினாடிகளில் பேய் மழை. காஞ்சிபுரம்  போய்ச்  சேரவே  இரவு 11மணி ஆகியது.  மறுநாள்  05.07.75 காலை ஐந்து மணிக்கு  எப்படியோ  வெள்ளத்தில் சிக்கியவாறு ஜாக்கிரதையாக  ஒருவாறு மெட்ராஸ் வந்து சேர்ந்தார்கள். செய்தித்தாளில் 'காஞ்சிபுரம் இதுவரை முப்பது வருஷங்களில் காணாத பேய் மழை'' என்று கொட்டை எழுத்து. கலவையில்  பெரியவாளைத்  தரிசனம்  செய்த  மூன்றாவது  நாள்.08.07.1975.  சூர்யா சொல்வதை கேளுங்கள்:   ' 
''ரெண்டு வருஷம் முன்னே, 1973ல்  யாரோ ஒரு S K . வைத்யநாதன் M B A வோடு அப்பா  என் சகோதரி  ஜாதக  விஷயமாக   தொடர்பு கொண்டிருந்தவர் இன்று  காலை  'ஹலோ ஹலோ என்று பம்பாயிலிருந்து கத்தி கொர கொர சத்தத்தில் டெலிபோனில்  பேசினார்.
 '' இப்போ தான் என் பொண்ண கல்யாண விஷயமாக கொஞ்சம் மும்முரமா இறங்கி இருக்கேன் . அடுத்த மாசம் இதே தேதி 08.08.1975 மெட்ராஸ் வரேன். ஒரு சின்ன கண்டிஷன். பொண்ணை  எங்கப்பா அம்மா இருக்கிற உடுமலைப்பேட்டைக்கு நீங்க அழைச்சுண்டு வந்து காட்டணும். அவாளுக்கு திருப்தியா   OK சொல்லணும். இன்னொண்ணு. கல்யாணத்துக்கு  ஓஹோன்னு தாம் தூம் னு லாம் செலவு பண்ணவேண்டாம். சிம்பிளாக கல்யாணம் பண்ணினால் போதும். சீதனம் லாம் நாங்க வாங்க மாட்டோம்.' ''அப்புறம் என்ன?  பொண்ணுக்கு  கல்யாணமாகி பம்பாயில்  சௌர்யமாக ரெண்டு குழந்தைகளோடு இருக்கா''.  
சூர்யநாராயணன் சொல்வதைப்  போல்  எத்தனையோ பேர்  உலகம் பூரா மஹா  பெரியவா அனுக்கிரஹத்தைப் பத்தி சொல்றதை  நாமும் கேட்கிறோமே.  வாழ்க்கையில் கண்கண்ட தெய்வம் என்று ஒருத்தரை சொன்னால் அது மஹா பெரியவா தான்.. கோடிக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் அவர் கருணையில் வாழ்கிறோமே.
ஒரு குட்டி போனஸ்  விஷயம்: 
சூரியநாராயணன் பெரிய உத்யோகம் எல்லாம் பெரியவா ஆசிர்வாதத்தால்  பெற்று  இந்தியா திரும்பி அடையாறில் ''சங்கரம் '' என்று ஒரு வீடு கட்டி அங்கே தண்ணீர் இல்லாமல் BORE ரெண்டு தடவையும் பலன் தராமல் வருந்தி கடைசி முயற்சி பண்ணி பார்ப்போம்.   தண்ணீர் வரவில்லையென்றால்  வீட்டை விற்றுவிட்டு எங்காவது செல்லவேண்டியது தான்.... என்ற  நிலையில்   போர் தோண்டிய அன்று '' பெரியவா ஜெயந்தி''  . விடிகாலை 4.30மணிக்கு எழுந்து ஸ்னானம் செய்து பெரியவாளை   த்யானம் செய்தார். ஆட்கள் சப்தமாக போர் தோண்டிக் கொண்டிருக்க தண்ணீருக்கு பதிலாக புஸ் என்று காற்று தான் வந்து கொண்டிருந்தது. இதுவும் வீணா? சூர்யநாராயணன் தியானம் முடிந்து பெரியவா படத்துக்கு நமஸ்காரம் செய்து கொல்லைப்பக்கம் வந்து என்ன ஆச்சு  என்று விசாரித்தபோது அவர் மனைவி 
''ஜெட் பம்ப் வெறி பிடித்து நீரை  வெள்ளமா  கக்கிறது. வந்து பாருங்கோ.  போர் காராளுக்கே  ஆச்சர்யம் ''  என்றாள் . 
தண்ணீர்  வெள்ளத்தைப்   பார்ப்பதற்கு முன்  ஓடிப்போய்  கருணை வெள்ளத்தின் படம் முன் விழுந்து  நமஸ்காரம் செய்தார்  சூர்ய நாராயணன். தண்ணீர் இல்லை என்று அந்த பகுதியில்  அநேகர்  வீ டுகளை விற்றுவிட்டு போன நேரம் அது.  இந்த நிலையில்  சூர்யா வீட்டில்  நிகழ்ந்ததை மஹா பெரியவா   கருணை, தெய்வ அனுக்ரஹம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

No comments:

Post a Comment