Thursday, March 25, 2021

Nama smaran

நாம ஸ்மரணை    J K   SIVAN   

என்   இளவயதில்  சினிமா  ரொம்ப  பார்த்த தில்லை.  ரொம்ப   ரொம்ப  அபூர்வம்.  சினிமா பார்த்து ரசிக்க தெரியாத பிராயத்தில் என் அப்பா அம்மாவோடு   MKT  பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் அழைத்துக்கொண்டு போனபோது என் சந்தோஷம்  நாற்காலிகள் அடியில் நுழைந்து நகர்வதில் என்று அறிந்தேன்.   பாகவதரை ரசிக்கும் வயதா அது?  பிறகு  வடபழனி தெருவில் பயாஸ்கோப் என்று ஒருவன் கொண்டுவந்து  அரையணா ஒரு அணாவுக்கு  சில ரீல்களை பார்க்க வைப்பான். அது பேசாது. அவன் பாடுவான்.  அதில் அடைந்த கொள்ளை இன்பம் இப்போது எங்கே போயிற்று?   அப்போது நான் கண்ட காட்சி அதெல்லாம்.
இப்போது  தினமும்  ஏதாவது ஒரு இதிகாச,  புராண, காவிய  காட்சி காட்டுகிறேன், எழுத்து மூலம், நிறைய நண்பர்கள் இது பிடிக்கிறது என்பதால்  உற்சாகம் தலைக்கேறிவிட்டது.
இதோ ஒரு காட்சி. மனத்திரையில் கண் மூடி பாருங்கள்.
துருபதன் மாளிகை  கோலாகலமாக காட்சி யளிக்கிறது.   ஊரெங்கும்  ரதங்கள்  வந்து குவிந்த வண்ணம்.   வாத்திய கோஷங்கள்  வானைப்  பிளக்கிறது.  அட இதென்ன, தின்பண்டங்கள் இனிப்புகள்  எங்கும்  நிறைந்து  உண்ண  ஆளின்றி  காத்திருக்கிறதே.  பெண் களும்  ஆடவரும்  துருபத ராஜாவின்   மாளிகை யை அடுத்த மைதானத்தில்  திரண்டிருக்கி றார்கள்.  என்ன விசேஷம் இங்கே ?
எத்தனையோ  ராஜாக்கள் துருபதன் மகள்  திரௌபதி  ஸ்வயம்வரத்தில்  பங்கேற்க போகின்றனர்  இன்று.  நடு நாயகமாக  மத்ஸ் யேந்திரம் நிலை நாட்டப்பட் டிருக்கி றதே,. யார்  அதை  வீழ்த்தி திரௌபதியை  கை பிடிக்கபோகிறாரோ ?.
சபை நிறைந்திருக்கிறது.   அங்கே பாருங்                                                 கள்.  கிருஷ்ணனும்  பலராமனும்  கூட  வீற்றிருக்கிரார்களே.  ஏன்  கிருஷ்ணனின்  கண்கள்  அலை பாய்கிறது?.  யாரைத்  தேடுகிறான்  கிருஷ்ணன்?. பலராமன்  ஏதோ  கேட்க  அதில்  கிருஷ்ணனின் கவனமில்லை  என்று   பலராமனும்  புரிந்து கொள்கிறாரே. போட்டி  ஆரம்பித்தா கி விட்டது.
சற்று   தாமதமாக  ஒரு  பிராமணர்கள் கூட்டம்  உள்ளே  நுழைகிறதே!  இங்கென்ன  வேலை  அவர்களுக்கு? நெருக்கி, முண்டி யடித்துக் கொண்டு எப்படியோ  முன்னாலே  இரண்டாம் வரிசையில்  இடம் பிடித்து விட்டார்கள்  அந்த  பிராமணர்கள். மேல்  அங்கவஸ்திரம்,   கட்டு குடுமி, பஞ்சகச்சம்  நெற்றி நிறைய  பளபள வென்று  விபூதி.  வேத விற்பன்னர்கள் போலி ருக் கிறதே.  கிருஷ்ணன்  அவர்களைக்  கவனித்து விட்டான்  புருவம் சுருங்கி விரிந்தது.  எப்போதும் போல   இதழோரத்தில்  புன்னகை  வழக்கம்போல படிந்தது.  கிருஷ்ணன்  பெரு மூச்சு  விட்டான். அதில்  திருப்தி  இருந்தது.
போட்டி நடக்கிறது.   ஜெயிக்கமுடியாமல்  அநேக  ராஜாக்கள்  தலை குனிந்துசென்றனர்.  துரியோதனன்  கர்ணனின்  தோல்வியை  தாள முடியாமல்  துடித்தான்.  சிசுபாலனும்  ஏமாந்தான்.   என்ன இது   யாருமே இல்லையா,  இங்கு  வீரத்தையும்  திறமையும்  காட்ட? . என் பெண்   காத்திருக்கிறாளே!" என்று  துருபதனுக் கு  வியர்த்தது.  பிராமணர்களில் ஒருவன்  கொஞ்சம்  வயதில் பெரியவரின் முகத்தை  பார்த்தான்.  அவர்  தலை அசைக்கவே  எழுந்து நின்றான்.
"யார் நீ  என்ன வேண்டும் உனக்கு?"   திரௌபதியின் சகோதரன்  திருஷ்டத்யும்னன், இளவரசன்  வினவ,  அந்த  இளம்  பிராமணன்
"நான்  போட்டியில்  கலந்து கொள்ள  ஆசைப டுகிறேன்"  என்றான்.
எல்லோரும்  அவனைபார்த்து  "நல்ல  ஜோக்கர்"  என்று  சிரித்தனர்.  திருஷ்டத்யும்னன்  கிருஷ்ணனை  கண்ணால்  பார்க்க  கிருஷ் ணன்  துருபதனிடம் தலை அசைக்க, துருபதன் அந்த பிராமணனை  "சரி  போட்டிக்கு வரச்சொல்லு"  என்றான் .  எல்லோரும்  கை கொட்டி  சிரிக்க   அந்த பிராமண  வாலிபன்  எதையுமே  லட்சியம் செய்யாமல்  நேரே  மத்ஸ்யேந்த்ரம் அருகில்  சென்றான்.  கீழே  இருந்த  வில்லை நமஸ்கரித்தான்.  வலம் வந்தான்.  மனதில்  யாரையோ  ஸ்மரித்தான்,     கிருஷ்ணனின்  ஹஸ்தம் உயர்ந்தது.   வாலிபன்  அலட்சியமாக வில்லை  தூக்கினான்.  நாண் ஏற்றினான்.   மேலே   சுழன்று கொண்டி ருந்த மத்ஸ்ய இயந்திரத்தின்  அசைவை  சரியாக தெளிந்த  நீரில்  கீழே  கணித்தான்.    சரியான தருணத்தில்  நாணிலிருந்து  சரம் மேல் நோக்கி  பறந்தது. அடுத்த  கணம்  மத்ஸ்யம் கீழே  அறுந்து  விழ  சபையோர் வாயடைத்து  மௌனமாய்  நின்றனர்.
துருபதன்  வாலிபனை  நோக்கி  ஓடிச்சென்று  அணைத்து கொண்டான். அவனது  நீண்ட  கால கனவு  நிறைவேறி  விட்டதல்லவா .திரௌபதி  அங்கேயே  அந்த  வாலிபனை  கண்ணால் விழுங்கினாள்.
துரியோதனன்்   கிருஷ்ணன் அருகில்   நெருங்கி நின்றுகொண்டான்.
" கிருஷ்ணா,  எனக்கு   இந்த வாலிபன் ஒரு வேளை  அர்ஜுனனோ என சந்தேகம்"  என்றான்´துரியோதனன். பாண்டவர்கள்   எல்லாமிழந்து  நாடோடிகளாக  வனவாசத்திலிருந்த காலம் அல்லவா?
"துரியோதனா  சந்தேகம் உன் பிறவி குணம் .  எதற்கெடுத்தாலும்  சந்தேகம். பாண்ட வர்கள்  என்றால் எப்போதும் ஐவரும்  சேர்ந்து  இருப்பார்களே.   அங்கு பார் இரண்டு பேர்  தான்  இருக்கிறார்கள்" என்றான் கிருஷ்ணன்.  அர்ஜுனனுக்கு  உதவி  தேவைப்பட்டால்  உதவ  பீமன் அருகில் சகதேவனுடன்   பிராமணனாக அமர்திருந்தான்.
கிருஷ்ணன் துரியோதனனை  மேலே  பேசவிடா மல்
"வா  நாம்  செல்வோம்.  யாரோ  வீர  பிராம ணன்  ஜெயித்தால்  அதைப் போற்றவேண்டுமே  தவிர  பாவம் எவ்வளவு பாடுபட்டு  அஸ்திர வித்தை  கற்று கொண்டானோ.  அதிர்ஷ்டம்  கூட  சிலருக்கு  தக்க  சமயத்தில்  உதவும்.  உன்  கர்ணன்  போன்றவர்க்கு உதவாமலும்  போகும். விட்டுத்  தள்ளு.  விருந்துக்கு போவோம்  வா" என்று கூட்டி சென்றான்.  பலராமனுக்கு  சந்தேகம் வலுக்க  கிருஷ்ணன்  கண்ணால் ஜாடை காட்டி  ''அப்புறம்  பேசலாம்'' என்றான்.
அர்ஜுனன்   வில்லைத்தொடும் முன்னே யாரை  மனஸார  ஸ்மரித்தானோ அந்த  கிருஷ்ணன்  நாம்  ஸ்மரித்தாலும்  உதவுவானே.  விடாமல் ஸ்மரிப்போமா?

No comments:

Post a Comment