Wednesday, March 31, 2021

Kalki avataram

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
           *தஸாவதாரம்* 

          *ஸ்ரீகல்கிஅவதாரம்* 

 *பகுதி 01* 

 *மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:* 

 *ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி* 

 *விளக்கம்* 

கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.       

கலியுகம் என்பது ஒட்டுமொத்தமாக நான்கு லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளாகும். அதில் கலியுகம் பிறந்து தற்போது 5000 வருடங்கள்தான்  ஆகியிருக்கிறது எனவும் அதனால் இந்த பூமியில் கல்கி அவதரித்து அழிப்பதற்கு இன்று சில லட்ச வருடங்கள் ஆகும்.
தசாவதாரங்கள் 9 அவதாரங்களில் ராமாவதாரமும்,கிருஷ்ணாவதாரமும் தான் பூரண அவதாரங்கள் இவை இரண்டும் தான் இதிகாசங்களாக மலர்ந்தன. அவைதான் ராமாயணம், மகாபாரதம். இந்த 9 அவதாரங்களுடன் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் ஓர் அவதாரம் உள்ளது. அது தான் கல்கி அவதாரம். இதைப்பற்றி பவிஷ்ய புராணம் விரிவாக விவரிக்கிறது. பகவான் குதிரை முகத்துடன் யாஸஸ் என்பவருக்கு மகனாக அவதாரம் செய்ய போகிறார். தீமைகளை அழித்து நன்மை செய்யவே பகவான் அவதாரம் செய்வார். கலியுக முடிவில் மக்கள் தீமையே உருவாக உள்ளனர். அவர்களை அழித்து அமைதியும் அன்பும் நிலைநாட்ட கல்கி அவதாரம் நிகழும். அதர்மத்தின் வம்சத்தில் குரோதம், (கோபம்) இம்சை இரண்டும் சேர்ந்து உலகை நாசம் செய்யும். அதுவே கலியுகம் என்பர். கிருதயுகத்தில் பகவான் பிரம்மனுக்கு அந்தராத்மாவாக இருந்து கொண்டு அனைத்தையும் எப்படி படைத்தானோ அப்படியே முடிவான கலியுகத்தில் எல்லாவற்றையும் அழிக்கிறார். கலியுகத்தில் வருணாசிரமங்கள், அவற்றிற்கான ஆசாரங்கள் தலைகீழாக மாறிவிடும். எல்லாமே தருமத்திற்கு மாறாக நடைபெறும். வல்லான் வகுத்ததே வழியாகும். குணத்தைவிட பணமே முக்கியமாக மதிக்கப்படும். வைராக்கியம் இல்லாவிடினும் எல்லோரும் எல்லா ஆஸ்ரமங்களையும் அவரவர் இஷ்டப்படி அனுசரிப்பர். கலி முற்ற முற்ற பொன், மணி, ரத்தினம் போன்றவை அழிந்து போகும். செல்வமுடையவனே எஜமானன். கலியில் நியாயமற்ற வழியில் பணம் குவிப்பர். பசுவையும், பிராமணனையும் உயர்வாகக் கருதமாட்டார். தேவதா பூஜை, விருந்தினர் உபசாரம் நடைபெறாது. மக்களில் பலர் தாழ்ந்த மனப்பான்மை உடையவர்களாக இருப்பர். பெண்கள் கற்பு பற்றிக் கவலைப்படமாட்டார்கள். மன்னன் மக்களை வருத்தி வரி வசூல் செய்வான். பாஷண்டிகள் எங்கும் மலிந்து தோன்றுவர். கலி வளர வளர வாழ்நாள் குறையும். இருபது வயதிலே மரணம் ஏற்படும். மக்கள் மாயையால் மதிமயங்கி ஸர்வேஸ்வரனையும் ஆராதிக்கமாட்டார். மழை, விளைச்சல் குறையும். அதிவிருஷ்டி (மிக அதிகம்), அனாவிருஷ்டி ( மிக இல்லாமை) யாகும். நாள்தோறும் மக்கள் பாவ காரியங்களையே செய்வர். மனம், சொல் செயலில் தூய்மை இராது. 


கலியுகம் முடிவில் வருணங்கள் ஒன்றுக்கொன்று கலந்து பலவிதமாக இருக்கும். துர்க்குணம் உடையவர்கள் அதிகமாவார்கள். சாஸ்திரம் பயின்றாலும் அவற்றை தவறாகத்தான் பரப்புவார்கள். நீசர்கள் தலைமை பொறுப்பேற்று மக்களைத் துன்புறுத்துவார்கள். கலியுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம், சோம்பல், மனவருத்தம், ஹிம்சை செய்தல், பலவீனம், பயம், அறியாமை, அழுகை அதிகமாக இருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற வெறி ஏற்படும். துறவிகள் பணத்தாசையால் அலைவர். இல்லறத்தார் எங்கே எது கிடைக்கும் என்று திரிவர். தாய் வழி உறவினர்களை தவிர்த்து மனைவி வழி உறவினர்களை மட்டுமே மதிப்பார்கள். மனைவிக்கு மட்டுமே கட்டுப்படுவர். சிறிதளவு சொத்துக்கும் உறவினர்களை கொல்வார்கள். பெற்றோர்களைக் காப்பாற்ற மாட்டார்கள். திருமணத்தில் முறை இருக்காது. இவ்வளவு கெடுதல் இருந்தாலும் ஒருவன் சிறிது முயற்சி கொண்டு பகவந் நாம சங்கீர்த்தனம் முதலிய செயல்களால் பெரும் புண்ணியம் பெறுவான், கடுமையான தியானத்தால் கிருதயுகத்திலும், யாகங்களில் திரேதா யுகத்திலும் பூக்கள் கொண்டு செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலனை கலியுகத்தில் கண்ணனின் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே கிடைத்துவிடும். பாவங்களும் விலகிவிடும். கலியுகத்திலும் இதுவே யுகதர்மமாக மாறும். கலியுகத்தில் 3000 ஆண்டுகள் கடந்துவிட்டன என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். கலியுகத்தின் 2000 ஆண்டு கழிந்ததுமே அன்னிய ஆதிக்கம் பரவிவிட்டது. கலியுகத்தின் கேசவனுடைய ஹரி நாமத்தை பாராயணம் செய்வதாலேயே 3 யுகங்களுக்கான புண்ணியம் பெற்று விடலாம். இப்படி மகனீயர்களும் தபஸ்விகளும் தாம் அதர்மத்தை சீர்தூக்கிப் பார்த்து உணர்ந்தாலும் உலகில் தர்மம் சிதைந்து நீதி நேர்மை நசிந்து அராஜகம் தலை விரித்தாடும் போது நல்லவர்களையும் தர்மத்தையும் காக்க கல்கி அவதாரம் நிகழும்.

ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் மகரிஷிகள் கலியுகத்தைப் பற்றி மேலும் பல ஐயப்பாடுகள் எழுப்ப அவற்றைப் பற்றியும் விளக்குகிறார் பராசர முனிவர். (சூத்ர சாது) சூத்ரன் நல்லவன், கலியுகம் நல்லது (கலி சாது) , பெண்கள் நல்லவர் (ஸ்திரி சாது) என்று கூறி தான் கூறியவற்றை விளக்குகிறார். 

1. சிறிய தருமமும் பெரிய பலனை அளிக்கும். இந்த தர்மத்தை எளிதில் அனுஷ்டிப்பவன் சூத்திரன். அவனே அறிவாளியும்கூட. கிருதயுகத்தில் புண்ணிய கர்மாவுக்குப் பலன் பத்து ஆண்டுகளிலும் அதையே திரேதா யுகத்தில் செய்தால் ஒரே வருடத்திலும், துவாபர யுகத்தில் செய்தால் ஒரே மாதத்திலும், கலியுகத்திலும் ஒரே நாளிலும் பலன் தரும். எனவே கலியுகம் சாது அதாவது நல்லதாகும். கலியுகத்தில் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தே அனைத்தையும் எளிதில் பெறலாம். 

2. சூத்திரர்கள் தமக்கு மேற்பட்ட வர்ணத்தினருக்குப் பணிவிடை செய்தே எளிதில் நற்கதி அடைய முடிகிறது. அவர்களுக்கு நியமங்கள் கிடையாது. எதையும் உண்ணலாம், அருந்தலாம். கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எனவே  சூத்திரர்கள் நல்லவர்.

3. பெண்கள் எவ்வித வருத்தமும் இன்றி தம் கணவர்களுக்குப் பணிவிடை செய்து மும்மனத் தூய்மையோடு நடந்து கொள்வதன் மூலம் அவர்கள் அடையும் புண்ணிய லோகங்களை எளிதில் பெறுவதால் பெண்கள் நல்லவர்கள் என்றார்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகல்கிஅவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment