Monday, March 1, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 22 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

கீதாம்ருதம்- அத்தியாயம் 2

22.வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணானி அன்யானி ஸம்யாதி நவானி தேஹீ

ஜீர்ணானி- நைந்த , வாஸாம்ஸி , உடைகளை , யதா- எவ்வாறு , விஹாய – களைந்து , நர: - மனிதன் , அபராணி- வேறு , நவானி- புதியவைகளை , க்ருஹ்ணாதி- எடுத்துக் கொள்கிறானோ , ததா- அவ்வாறே, ஜீர்ணானி – நைந்த சரீராணி – உடல்களை, விஹாய – விடுத்து, அன்யானி –இதர, நவானி- புதிய சரீரங்களை , தேஹீ- ஜீவன் , ஸம்யாதி-அடைகிறான் .

அதாவது மரணம் என்பது பழைய உடலை விட்டுப் புதிய உடல் எடுப்பதே . அது பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடை உடுப்பது போன்று எளிதானதே என்கிறார்.

இது வயதான பின் வரும் மரணத்திற்கு ஒருவாறு சரியாக இருக்கலாம். அப்போது சரீரத்தை ஜீர்ணம் அல்லது நைந்து போனதாகக் கூற முடியும். ஆனால் இளவயதிலோ சிறுவயதிலோ ஏற்படும் மரணத்திற்கு இது எவ்வாறு ஒத்து வரும் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?
மேலும் பழைய உடைகளைக் களைந்து புதியன உடுப்பது என்பது மகிழ்ச்சியைத் தருவது. மரணம் என்பது துன்பமாக அல்லவா இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த உதாரணம் எப்படிப்பொருந்தும்?

ஜீர்ணம் என்பதற்குப் பழையது, நைந்தது என்பதல்ல பொருள். முன்வினைப் பயனாக அந்த சரீரம் எடுத்ததன் காரணம் முடிந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள கர்மாவை கழிக்க இந்த உடல் பயன் படாது என்பதால் ஜீவன் வேறு உடல் எடுத்துக் கொள்கிறது. துன்பம் என்பது ஞானிகளுக்கல்ல.

ஒரு தாய் குழந்தையின் அழுக்கடைந்த ஆடையைக் களைந்து வேறு உடுத்தும்போது அந்தக் குழந்தை அதை விரும்பாமல் அழலாம். ஆயினும் அது அந்தக் குழந்தையின் நன்மைக்காகவே என்று உணர்ந்த தாய் அதைப் பொருட்படுத்த மாட்டாள்.

அதைப்போலவே இறைவனும் இந்த சரீரத்தை எடுத்து வேறு சரீரத்தை நம் கர்மத்தைக் கழிப்பதற்காகக் கொடுக்கிறான்.

இங்கு க்ருஹ்ணாதி ,(ஏற்கிறான்) ஸம்யாதி(சென்று அடைகிறான் ) என்று இரண்டு பதப்ரயோகத்தைப் பார்க்கிறோம். முதல் சொல் ஆடை அணிவதைக் குறிக்கிறது. ஆடையை ஏற்று அணிகிறோம். ஸம்யாதி அல்லது சென்றடைவது என்பது ஜீவாத்மாவுக்குப் பொருந்துமா? ஏனென்றால் ஆத்மா அசைவற்றது, செயலற்றது அல்லவா?

இதற்கு பதில் என்னவென்றால் ஒரு குடத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தில் வைக்கும்போது அதில் உள்ள ஆகாயம் போவதில்லை. ஆனால் போவது போல் தோன்றுகிறது. உண்மையில் குடம்தான் செல்கிறது. அதைப் போலவே ஆத்மா எங்கும் செல்வதில்லை . மனம் புத்தி அஹம்காரம் இவை ஜீவன் எனப்படும் அதுதான் ஒரு சரீரத்தில் இருந்து இன்னொரு சரீரம் வந்தடைகின்றது.

அப்படியானால் ஆத்மா என்பது எவ்வகைப்பட்டது என்று அடுத்து வரும் ஸ்லோகங்களில் விளக்குகிறார்

  

No comments:

Post a Comment