Friday, February 26, 2021

Ramayanam part 11

🚩ராமாயணம்
  (பாலகாண்டம்)
       பகுதி-(11)

(பாலை நிலம்..!)


இதுவரை நடந்து வந்த வழிகளில் எல்லாம் பசுஞ்சோலைகளைக் கண்டவர், இங்கு மட்டும் ஒரு பாலை நிலம் இருப்பது வியப்பைத் தந்தது. செடிகள், கொடிகள், மரங்கள் பிடுங்கி எறியப் பெற்றுச் சருகுகளாக உலர்ந்து கிடந்தன. யாளிகளும், யானைகளும், மானும், மாடுகளும் உலவித் திரிந்த இடம் அது; அவற்றின் வற்றி உலர்ந்த எலும்புக் கூடுகள் அவற்றின் சரிதத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தன; சிங்கமும் புலியும் ஒன்று இரண்டு ஒதுங்கித் திரிந்து கொண்டிருந்தன. அவையும் சினம் அடங்கிச் சிறுமை உற்று இருந்தன. அங்கே வாழ்ந்த உயிரினங்கள் என்ன ஆயின? களப்பலி கொள்ளும் காளி கோயில் முற்றம்போல் இரத்தம் புலர்ந்த தரைகளும், எலும்பின் சிதைவுகளும் புலால் நாற்றம் வீசிக் கொண்டிருந்தன. அழிவுச் சின்னங்கள் அலங்கோலப் பின்னங்கள் அவற்றின் வரலாற்றைக் கேட்க ஆர்வத்தைத் துண்டின.
 
"இவை அரக்கர்களின் அழிவுச் செயலாகத்தான் இருக்க வேண்டும்; இதற்குக் காரணம் யார்?" என்று இளைஞர் வினவினர். மாமுனிவருக்குப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது. எதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரோ அதைச் சொல்லத் தக்கதொரு வாய்ப்புக் கிடைத்தது.
 
"'தாடகை என்னும் தையலாள்தான் காரணம்" என்றார்.
 
"அரக்கி அவள்; இரக்கமில்லாதவள்; இந்தத் தண்டகாருணிய வனமே அவள் கொடுமைக்கு ஆளாகி விட்டது. சிங்கமும் புலியும்கூட அவளைக் கண்டால் அஞ்சி நடுங்கி விடும்; உயிர்களைக் கண்டால் அவள் செயிர் கொண்டு அழிப்பாள்; அவற்றின் குருதியைக் குடிப்பாள்; எலும்புகளை முறிப்பாள், ஆலகால விஷம் போலச் சுற்றுப் புறத்தைச் சுட்டு எரிப்பாள். அவள் இங்கு உலவித் திரிகிறாள்" என்று அவளைப் பற்றிய செய்திகள் அறிவித்துக் கொண்டு இருந்தார்..!

தொடரும்..!

அவள் யார் என்பதை நாளை பார்ப்போம்..!

ஶ்ரீராம ஜெயம்🙏

No comments:

Post a Comment