Monday, February 22, 2021

Can you create fire with Veda mantras - Spiritual story

#வேதத்தின்_கனம்:

இன்னொரு விஷேஸத் திருநாமமும் ராமனுக்கு உண்டு.

தர்ம: 
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்.

தர்மம் எது என்று பார்த்தோமானால், அதற்குப் பல பொருள் சொன்னார்கள்.  ஆனால், தர்மம் என்கிற சமஸ்கருத சொல்லின் பொருளை அப்படியே அடக்கிய இன்னொரு சொல் அகப்படவில்லை.  எந்த மொழியிலும் அகப்படவில்லை!

ஏனென்று கேட்டால், தர்மம் என்கிற சொல்லுக்கு பகவான் என்று பொருள்.  தர்மம் என்கிற சொல்லுக்கு வேதம் என்று பொருள்.  தர்மம் என்கிற சொல்லுக்கு வேதோச்சாரணம் என்றும் பொருள்.  அவரவர் நிலைக்கு ஏற்ப சொல் பிரயோகமாகிறது.

அந்தணர்களின் தர்மம் எது என்று கேட்கிறோம்.  அப்படியென்றால் என்ன..?  பிராமணர்களுடைய தெய்வம் எது.. என்று கேட்பதாகவா அர்த்தம்? கிடையாது!  பிராமண தர்மம் என்று ஆறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. வேதத்தைக் கசடற கற்க வேண்டும் என்பது ஒன்று. இது அவ்வளவு சுலபமான காரியமா?  கிட்டே நெருங்கி உட்கார்ந்து ஆசார்யர் சொல்லிக் கொடுக்கும்போது கஷ்டப்பட்டு கிரஹித்துக் கொள்ள வேண்டும்.  எத்தனையோ கடினமான விஷயங்கள் வேதத்திலே உண்டு.

ஒருத்தர் வித்யாரண்ய சுவாமியிடம் போய், ருத்ர தாண்டவத்தைக் காட்ட முடியுமா? என்று கேட்கிறார். அதற்கு அவர் சொல்கிறார்: "ருத்ர தாண்டவத்தைக் காட்டுவதென்ன?  பார்ப்பது என்ன?  நீர் அத்யயனம் பண்ணியவர்தானே?  வேதத்திலே கனம் சொன்னாலே அந்த ஒலிகளிலே ருத்ர தாண்டவத்தைப் பார்க்கலாமே" என்றார் சுவாமிகள்.

"வேத மந்திரங்களிலே ருத்ர தாண்டவத்தைப் பார்ப்பதோடு நந்திகேசுவரரின் மிருதங்க வாத்திய ஒலியையும் கேட்கலாம்" என்றார் வியாரண்யர்.

அந்த வேதத்திலே இல்லாதது என்பதே கிடையாது.

நீர்  இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.  இந்திரனை ஸ்துதிக்க வேண்டும்.  அவன்தான் மழைக்கு அதிகாரி.  வருணனை ஏவுவான்.  மழையைப் பொழிவிக்கச் செய்வான்.

அதற்காக ஓதப்படும் மந்திரத்தின் ஒலியைக் கேட்டால், மழைகாலத்தில் நிரம்பிய நீர் நிலைகளில் தவளைகள் ஓசை எழுப்புவது போலவே இருக்கும்!  மந்திரத்தின் த்வனியைக் கொண்டே, "ஓஹோ! இவர்களுக்கு நீர் வேண்டும் போலிருக்கிறது, நீர் நிலைகள் மொத்தத்தையும் நிறைத்து விடுவோம்" என்று தேவதைகள் எண்ணமிடுவார்களாம்! இப்படி ஒலியின் பங்கு முக்கியமாய் இருப்பதால் உச்சாரணமும் மிகவும் முக்கியம்.  உச்சாரணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு சரித்திரம் வேதத்திலேயே வருகிறது.

ந்ருமேதர் என்று ஒருத்தர். பருச்சேபர் என்று  இன்னொருத்தர். இரண்டு பேரும் குருகுலவாசம் செய்து ஏக காலத்தில் வேதம் பயின்றார்கள்.

சமயத்திலே அக்னி வளர்த்து, அக்னியை உபாசிக்கும்படியான வித்யை, மந்திரம் கற்றார்கள். 

15 ஆண்டுகள் அதைக் கற்றார்கள்.  15, 17, 21 என்று கூட்டம் கூட்டமாக மந்த்ரங்கள் இருக்கும்.  எல்லாவற்றையும் கற்றார்கள்.  ஆசார்யரும் ஓர வஞ்சனை இல்லாமல், இரண்டு பேருக்கும் சமமாகக் கற்று கொடுத்தார்.

குரு தட்சிணையைச் சமர்ப்பித்து விட்டு இருவருமே புறப்படும் காலம் வந்தது. காட்டின் வழியே நடந்து போனார்கள்.  காட்டைக் கடந்தால் இவர் இவர் ஊருக்கும், அவர் அவர் ஊருக்கும் பிரிந்து போக வேண்டும்.  பிரிய வேண்டிய கட்டம்!  15 ஆண்டுகள் ஒரு குருகுலத்திலே இருந்தவர்களுக்குப் பிரிவு ரொம்ப வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் நாம் இரண்டு பேரும் பரீட்சை பண்ணிப் பார்ப்போம் என்று தீர்மானம் செய்தார்கள். 

இந்த கால பரீட்சைக்கும் அந்தக் கால பரீட்சைக்கும்  வித்தியாசமுண்டு!  இந்தக் காலத்தில், வேதத்தைச் சரியாக சொல்கிறானா?  உச்சாரணம், உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.   அந்தக் காலத்திலோ, வித்யை பரீட்சிப்பது என்றால் தேவதையையே எதிரில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்!

இருவரும் நடந்து வந்த காட்டில் மரங்கள் முறிந்து கீழே விழுந்து விட்டன.  ஒரு கட்டை, ஜலத்திலே நனைந்து கிடந்தது.  "இந்த கட்டையில் நீரும், நானும் கற்ற மந்திரத்தைப் பரீட்சிப்போம்" என்று முடிவு செய்து கொண்டார்கள்.  "இதிலே அக்னியை உண்டு பண்ணி விடுவோம்".

பண்ணலாமா..?
ஆஹா, பண்ணலாம்!

இரண்டு பேரும் ஒன்றாக கைக் கூப்பி மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்கள்.அப்புறம் யோசனை வந்தது.

இப்படி இரண்டு பேரும் ஒன்றாக சொன்னால் யார் சொன்னதற்கு பலன் என்று கண்டுபிடிக்க முடியாது.  எனவே நீர் முன்னே சொல்லும், நான் அப்புறமாக தனித்துச் சொல்கிறேன் என்று முடிவாயிற்று.

தனித்துச் சொல்வதில் ஒரு குணமுண்டு!  எங்கள் ஊர் முக்கூரில் ஒரு சீமந்தம் பண்ணி வைத்துக் கொண்டிருந்தார் என் தாத்தா. அப்போது அஹோபில மடத்து 44வது பீடாதிபதியானவர் பூர்வாசிரமவாசியாய் அங்கு இருந்தார்.

அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் வேத வித்துக்கள் வந்திருந்தார்கள்.  அவர்களுள் ஒருவராக மந்த்ரமே தெரியாத ஒருத்தர்!  மற்றவர்கள் கூட்டமாக வேதம் சொன்னபோது இவர் மட்டும் ஜிகுபுகு ஜிகுபுகு என்று சொல்லிக் கொண்டிருந்தார்!  கடைசியில், ஹரி ஓம் என்று முடித்த பிறகும் ஜிகுபுகு ஜிகுபுகு என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். சபையில் உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் சிரித்து விட்டார்கள்.

பீடாதிபதி சுவாமி மட்டும் சிரிக்கவில்லை.  மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார். "இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை.  15 வருஷம் அத்யயனம்  பண்ணியவர்கள் எந்த இடத்தில் என்ன மந்திரம் சொல்வதென்று உணர்ந்து சொல்வதில் ஆச்சரியமில்லை. இப்படி ஜிகுபுகு ஜிகுபுகு சொல்வதுதான் கஷ்டம். ஒரு இடத்திலே, உட்கார்ந்து இரண்டு மணி நேரம் சொல்லியிருக்கிறாரே!  ஆகையினாலே, மற்றவர்களுக்கெல்லாம் என்ன சம்பாவனையோ அதை விட இரண்டு மடங்காக சம்பாவனை வாங்கிக் கொடுத்து விட்டார்!

கொடுத்து விட்டு, அவரைத் தனியே அழைத்துப் போய்ச் சொன்னார்.  "இப்படி ஒவ்வொரு இடத்துக்கும் நான் வந்து சம்பாவனை வாங்கித்தர முடியுமா?.  அதனால் ஜாக்கிரதையாய் இரும்.  உரிய மந்திரங்களை நெட்டுருவு பண்ணி வையும்".

பிற்பாடு, அவர் பீடதிபதியானபோது, அவரை சேவிக்க இந்த ஜிகுபுகு ஜிகுபுகுக்காரர் போயிருந்தார்.  "உதக சாந்தி வந்து விட்டதோல்லியோ!  இப்போது நான் சந்நியாஸ ஆசிரமத்திலே இருப்பதனாலே முன் போல் வந்து காப்பற்ற முடியாதே" என்று வேடிக்கையாகச் சொன்னார்!  

இதனால் என்ன தெரிகிறது?  பல பேர் உரக்கச் சொல்லும்போது ஒருத்தர் தனியாகச் சொல்லும் மந்திரம் காதில் விழாது!  அதனால்தான் காட்டில் இரு நண்பர்களும் தனித்தனியே மந்திர சக்தியைச் சோதிக்க முடிவு செய்தார்கள்.

முதலில் ந்ருமேதர் கைகூப்பி மந்திரத்தை ஓதினார்.  கட்டையில் இருந்து வெறும் புகை தான் வந்தது!

பருச்சேபர் ஓங்கி, கச்சிதமாக மந்திரத்தை உச்சாரணம் பண்ணி அக்னியை உண்டு பண்ணிவிட்டார்.

"ரிஷி" என்று பருச்சேபரை அப்போது அழைத்தார் ந்ருமேதர்.  ரிஷி என்கிற வார்த்தையே அப்போதுதான் உண்டானது.  

மந்திரத்தை வாயால் சொன்னால் போதாது.  அதன் உள்ளீடான தேவதையை மனத்தால் நினைக்க வேண்டும். மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனை முதலில் ஆராதிக்க வேண்டும் - இவ்வாறு, மந்திரத்தினிடத்திலும், அதை உபதேசித்த ஆசார்யனிடத்திலும்,தேவதையிடத்திலும் சமமான பக்தி யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் மந்திரம் சித்திக்கும்.  அப்பேர்ப்பட்ட சித்தி பெற்றவர்கள் மந்திரம் சொல்லி ஆசீர்வாதம் பண்ணிவிட்டால் அந்த ஆசீர்வாதத்துக்கு மறுப்பு உண்டோ!

இவ்வாறு வேதோச்சாரணம் என்பதிலேயே பெரிய தபஸ் இருக்கிறது!  இந்த வேதம் ஓதும் காரியத்தை அத்தனை தர்மம் என்று சொல்வது.

தர்மம் என்றால் என்ன என்று ஒரு கேள்வி ஆரம்பத்தில் வந்தது.  இவ்வாறு, ஆற்ற வேண்டிய நியமங்களை, கடமைகளை அர்ப்பணத்துடன் ஆற்றுவது தர்மம் என்பது பொருள்.

எல்லாவற்றுக்கும் மேலான தர்மம் என்ன என்று கேட்டால்"பரமாத்மாதான்"!

தர்மத்துக்கே கை, கால் முளைத்து பூமியில் சஞ்சாரம் பண்ணினால், அதுதான் ராமன் என்று விவரித்தார்கள். 

அப்படிப்பட்ட சக்ரவர்த்தி திருமகனுடைய பரிபூர்ண அனுக்ரஹம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment