Monday, February 22, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 11,12 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramanujam

கீதாம்ருதம் அத்தியாயம் 2

ஸ்ரீ பகவான் உவாச
11. அசோச்யான் நன்வசோசஸ்த்வம் ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷசே
கதாசூன் அகதாசூன் ச நானுஸோசந்தி பண்டிதா:

அசோச்யான் – வருந்த வேண்டாதவர்களைக் குறித்து , நனு – அல்லவா , த்வம்-நீ , அசோச: - வருந்தினாய். ப்ரக்ஞாவாதான் ச-அறிஞனைப்போன்று, பாஷசே- பேசுகிறாய். பண்டிதா: - உண்மையான அறிஞர்கள் கதாசூன் – இறந்தவரகளையும் , அகதாசூன்- இருப்பவர்களையும் பற்றி , ந அனுசோசந்தி- வருந்துவதில்லை. அதாவது வாழ்வு சாவு இரண்டையும் ஒன்றாக பாவிக்கிறார்கள்.

உண்மையான கீதை இங்கிருந்து ஆரம்பம். 
இதன் உட்பொருள்: பீஷ்மர் துரோணர் முதலியவர்கள் யார் இறப்பார் யார் இருப்பார் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் கடமையைச் செய்ய பௌத்திரர்களையும் மாணவர்களையும் கூட எதிர்க்க முன்வந்துள்ளனர். அர்ஜூனன் அவர்களை விட அறிஞன் அல்ல என்பது.

அர்ஜுனன் பித்ருக்கடன் , குருமார்களைக் கொல்வது, வருங்கால சந்ததியினரின் நிலை முதலியவைகளைப்பற்றி சாஸ்திரம் அறிந்தவன் போல பேசியதை எள்ளி நகையாடுகிறான் கண்ணன் இந்த ஸ்லோகம் மூலம். 
ஏனென்றால் சாஸ்திரம் அறிந்த பண்டிதர்கள் சர்வாந்தர்யாமியாக உள்ள பகவானுடைய செயலே எல்லாம் என்பதை உணர்ந்து இறப்பது தேகமே ஆத்மா அல்ல என்பதை அறிந்து தங்கள் ஸ்வதர்மத்தை பகவதர்ப்பணமாகச் செய்கின்றனர். .ஸ்வதர்மம் எது ஆத்மாஎன்றால் என்ன என்பதையெல்லாம் விரிவாக கீதை மூலம் விளக்கப்படுகிறது. 
12.நத்வேவாஹம் சாது நாஸம் நத்வம் நேமே நராதிபா: 
ந பூதோ ந பவிஷ்யாம: ஸர்வே வயம் அத: பரம்

ந து அஹம் – நான் , ஜாது எப்போதும், ந து ஆஸம் ந ஏவ – இல்லாமல் இருந்ததில்லை. ந த்வம் –நீயும், நராதிபா: - இந்த அரசர்களும் (அப்படியே) ஸர்வே வயம்- நாம் எல்லோரும் ந து பூத: -இருந்ததில்லை , ந பவிஷ்யாம: - இருக்கப்போவதில்லை என்பது இல்லை.

இதன் மூலம் நாம் ஆத்மாவே தவிர தேகம் இல்லை என்பதை விளக்குகிறார். அதனால் நீ நான் இவர்கள் என்ற வேற்றுமை தேகத்தின் மூலம்தான். ஆத்மா என்றும் அழிவதில்லை ஆதலால் நாம் எல்லோரும் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. என்று கூறிப் பின் ஆத்மாவைப்பற்றி விளக்க ஆரம்பிக்கிறார்.

No comments:

Post a Comment