Tuesday, January 19, 2021

AGNEESWARAR TEMPLE NEAR POONDY RESERVOIR

சித்தர்கள் வழிபடும் அக்னீஸ்வரர் J K SIVAN

நமது தேசத்தில் முனுசாமி, கிருஷ்ணசாமி, சுப்பிரமணி, பாலன், குமரன் கிருஷ்ணன் ராமசாமி, என்று லக்ஷம் பேர் இருக்கிறார்கள். ஊர்களும் ஒரே பெயரில் பல இருக்கிறது. அப்படி ஒரு ஊர் நெய்வேலி. இது பண்ருட்டி பக்கத்தில் நிலக்கரி சுரங்க ஊர் இல்லை. சென்னைக்கருகே திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டி நேர் தேக்கத்தின் அருகே 1 கி.மீ. தூரத்தில் உள்ள அற்புத ஊர். கற்கால ஊர் சமீபத்தில் நமது பார்வைக்கு பட்ட க்ஷேத்ரம்.
சுற்றிலும் கிராமத்தின் லக்ஷணத்திற்கேற்றாற் போல பச்சை பசேல் வயல்கள் எப்பதுமே இருந்ததால் இந்த நெல்வேலி (திருநெல்வேலி அல்ல) நாளடைவில் நெய்வேலி ஆகிவிட்டது. சித்த புருஷர்கள் இன்றும் நடமாடும் அபூர்வ ஸ்தலம். மரங்களில் வண்டுகளாக, பறவைகளாக, பாம்புகளாக அங்கே இன்றும் இருப்பவர்கள். ஒரு பெரிய ஆலமரம். அது காளி குடிகொண்ட இடம். அவள் வனதுர்க்கை என்கிறார்கள்.
இங்கு ஒரு கோவில் 1300 வருஷங்கள் பழைமையான மிகவும் சிதிலமான நிலையில் ரெண்டு பக்தர்களால் பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்பு வெளியே தெரியவந்தது.
2004ல் ரெண்டு பக்தர்கள் பூண்டி நீர் தேக்கம் அருகே உள்ள ஊன்றீஸ்வரர் கோவில் சென்று தரிசனம் செய்து விட்டு வந்துகொண்டிருந்தார்கள். வழியில் அந்தப்பக்கமாக வந்த அந்த ஒரு மாட்டுக்கார சிறுவன்
''ஐயா எங்கூட வாங்க இன்னும் ஒரு பழைய சிவன் கோவில் காட்றேன்'' என்று அழைத்துக்கொண்டு போய் இந்த நெய்வேலி கோவில் இருந்த இடத்தில் விட்டுவிட்டு திடீரென்று மறைந்தான் . செடி கொடி புதர்கள் மரங்கள் மண்டிய அந்த காட்டை நெருங்கவே முடியாது. அங்கே இருந்த பெரிய ஆலமரம் கல்லால மரம் எனப்படும். அதற்கு மற்ற ஆலமரங்கள் போல் விழுதுகள் இல்லை. அந்த கல்லால மரத்தின் அடியில் தக்ஷிணாமுர்த்தி போல் மெளனமாக பல காலம் சிவன் புதையுண்டு இருந்தது தெரியவந்தது.
அந்த மரத்தை ஒட்டி வளர்ந்த காட்டை மெதுவாக உள்ளூர் மக்கள் ஆதரவுடன் ஒத்துழைப்புடன் அழித்து, மண்மேட்டை கரைத்து, மண்ணை தோண்டி சிதைந்த கோவில் சுவர்களுக்கு இடையே இருந்த ஒரு பெரிய லிங்கத்தை வெளியே எடுத்தார்கள். லிங்கத்தை வெளியே எடுக்கும்போது மரத்தில் இருந்த வண்டுகள் படையாக அவர்களை விரட்டியது. தினமும் பூஜை செய்யப்படும் லிங்கம் போன்று அது புத்தம் புதிதாக இருந்தது ஆச்சர்யம் இல்லை. ஏனெனில் சித்தர்கள் தான் தினமும் அபிஷேகம் பூஜை செயகிறார்களே!! பாதி பூஜையில் லிங்கத்தை வெளியே எடுத்தார்களோ? அதால் தான் வண்டினமாக துரத்துகிறார்களோ?
லிங்கம் மெதுவாக அங்கே ஒருவர் வீட்டில் கொண்டு சேர்க்கப்பட்டது. சென்னையிலிருந்து கேரளாவில் இருந்து என்று நம்பூதிரிகள் அழைக்கப்பட்டு ப்ரஸ்னம் பார்த்ததில் அது சித்தர்கள் வழிபடும் சிவன் என்று தெரிந்தது. 18 சித்தர்களில் கரூர் தேவரும், சதாசிவ ப்ரம்மேந்த்ரரும் சூக்ஷ்ம சரீரத்தில் வந்து தொடர்ந்து வழிபடும் அக்னி லிங்கம் என்றது ப்ரஸ்னம் .

அக்னீஸ்வரர் ஆலய சேவா சங்கம் ஒன்று உருவானது. குளம் தூர் வாறப்பட்டு அக்னி தீர்த்தமாகியது. கோவிலின் வடகிழக்கே உள்ளது இந்த தீர்த்தம். நன்கொடை கொஞ்சம் கொஞ்சமாக சேர கோவில் வளர்ந்தது. சிவன் அக்னீஸ்வரர், அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை.
மலையாள தாந்த்ரீக ப்ரஸ்னம் மேற்கொண்டு என்ன சொல்லிற்று? ''கரூர் தேவர், சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இல்லாமல் ஒரு செங்கல் கூட அங்கே கொண்டுசெல்லக்கூடாது. சித்தர்களின் அதிஷ்டானத்தில் வஸ்திரம் சாற்றி அங்கே அவர்கள் பெற்றுக்கொண்ட பிறகு அது தான் உத்தரவு. அது கிடைத்ததும் கோவில் புணருத்தாரண கைங்கர்யம் துவங்கலாம்''
ஸ்ரீ ராமமூர்த்தி எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர். சிறந்த கோவில் கைங்கர்ய சீமான். அவரை சேக்கிழார் கட்டிய பழைய ஒரு சிவன் கோவில் அமராபதீஸ்வரர் (செருகளத்தூர், மறுபடியும் இது சினிமா சம்மந்தப்பட்ட குண்டு செருகளத்தூர் சாமா ஊர் இல்லை, சென்னை பல்லாவரம் வழியாக குன்றத்தூர் சென்று அங்கே மாதா இன்ஜீனீரிங் காலேஜ் தெருவில் செம்பரம்பாக்கம் போகும் வழியில் உள்ள பழைய சிவாலயம். அதை புனருத்தாரணம் செய்யும் பணியில் ஸ்ரீ ராமமூர்த்தி, அடையார் ராஜு போன்ற புண்ய புருஷர்கள் அறிமுகம் கிட்டியது. அவரோடு இணைந்த அணில் கைங்கர்ய பாக்யம் எனக்கு கிட்டியது) இந்த ஆலயம் வெளிவர வெகு முக்கிய காரணம் ஸ்ரீ ராமமூர்த்தி ராஜு, மற்றும் நண்பர்கள் குழாம்.
ஸ்ரீ ராமமூர்த்தி, ஒரு திங்கட்கிழமை அன்று அவர் நண்பர்களுடன் சித்தர்கள் அதிஷ்டானத்தில் வஸ்திரத்தோடு சென்றார்கள். அந்த வஸ்திர தானம் நாமாக செலுத்துவது அல்ல. எவர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளப்பட்டு அனுக்கிரஹம் சித்திக்கும். ஒரு சனிக்கிழமை கரூர் சித்தர் அதிஷ்டானத்தில் வஸ்திரத்தோடு காலையிலிருந்து மதியம் வரை காத்திருந்தும் எவரும் வந்து வஸ்திரம் பெற்றுக்கொள்ளவில்லை. என்ன செய்வது? அக்னீஸ்வரா உன் திருவுள்ளம் என்ன ? சரி சென்றுவிட்டு மறுபடியும் திங்கட்கிழமை வருவோம் என்று எழுந்த போது கோவில் அர்ச்சகர் வெளியே வந்து இங்கே வாங்கோ என்று கூப்பிட்டார்.
கரூர் தேவர் சந்நிதி க்கு அழைத்து சென்ற அர்ச்சகர் எதுவும் கேட்காமலேயே கரூர் சித்தர் மேல் அணிவித்திருந்த வஸ்திரத்தை எடுத்து ராமமூர்த்தி கையில் கொடுத்தார். இது நடந்தது சனிக்கிழமை
''இப்படி யாருக்கும் கொடுத்ததில்லை. என்னவோ எனக்குள் ஒரு வேகம் யாரோ இப்படி செய் என்று வலியுறுத்தி கட்டளை இட்டது போல் தோன்றி இயந்திரமாக நான் செயல்பட்டேன்'' என்றார் அர்ச்சகர். இது நடந்தது சனிக்கிழமை . திங்கள் காலையில் ஒரு அதிசயம்.
யாரோ ஒருவர் ராமமூர்த்தியிடம் வந்து என் பேத்திக்கு கல்யாணம். எல்லோரிடமும் யாசகம் வாங்கி கல்யாணம் பண்ணுகிறேன். என் பேத்திக்கு யாரோ ஒரு புடவை அளித்தார்கள். மாப்பிள்ளைக்கு வேஷ்டி வஸ்திரம் யாராவது கொடுக்க இயலுமா?''
ஆஹா வஸ்திர தானம் கேட்டபோது தான் தானம் செய்யவேண்டும். அதுவே அக்னீஸ்வரர் ஆலய திருப்பணி துவங்க உத்தரவு என்று ப்ரஸ்னம் சொன்னது நிறைவேறுகிறதா? மிக ஆச்சர்யத்தோடு சந்தோஷத்தோடு பயபக்தியோடு கரூர் தேவர் சதாசிவ ப்ரம்மேந்த்ரருக்கு என்று வாங்கி வைத்திருந்த வேஷ்டி அங்கவஸ்த்ரங்களை எடுத்து அந்த பெரியவரிடம் கொடுத்தார் ராமமூர்த்தி.
எனது அருமை நண்பர்ராஜு என்று சொன்னேனே, அவரை நாங்கள் கோவில் ராஜு என்று அழைப்போம் எண்ணற்ற கோவில்களை தரிசித்து அற்புதமாக புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்து ஒரு பெரிய கண்காட்சியை இணைய தளத்தில் நடத்துகிறார். அவரது வலையில் https://shanthiraju.wordpress.com/ சென்று பாருங்கள். எவ்வளவு ஆலயங்களின் விபரங்கள், படங்கள் தத்ரூபமாக காணலாம். அவர் ராமமூர்த்தியோடு நெய்வேலி ஆலயம் சென்றவர். பல கோவில்களுக்கு சென்ற புண்யம் அவரது படங்களில் பெறலாம். . ராஜேந்திரனிடம் (ராஜு) இந்த ஆச்சரிய அனுபவத்தை ராமமூர்த்தி பகிர்ந்து கொண்டார். ''ராஜு, பல வருஷங்களாக ஆலய கைங்கர்யம் செய்த எனக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது இது தான் முதல் முறை'' என்றார் ராமமூர்த்தி. ராஜு தனக்கு நேர்ந்த அதிசயங்களை சொல்கிறார். நிறைய இருக்கிறதே எப்படி ஒரு கட்டுரையில் அவ்வளவும் எழுதுவது? ஒரு நாள் கொரோனா விட்ட பிறகு ராஜுவோடு உட்கார்ந்து விறுவிறுப்பான விஷயங்கள் அத்தனையும் கேட்கவேண்டும்.

Image may contain: tree, plant, sky, outdoor, nature and water
Image may contain: flower, plant and food
Image may contain: outdoor
Image may contain: tree, sky, outdoor and nature
Image may contain: one or more people and people standing

No comments:

Post a Comment