Thursday, November 26, 2020

Bhagavad Gita adhyaya 1 sloka 36 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

கீதாசாரம் - அத்தியாயம் 1 தொடர்ச்சி

36. நிஹத்ய தார்த்ராஷ்ட்ரான் ந: கா ப்ரீதி: ஸ்யாத் ஜனார்தன

பாபம் ஏவ ஆச்ரயேத் அஸ்மான் ஹத்வா ஏதான் ஆததாயின:

ஜனார்தன – ஜனார்தனா, தார்த்ராஷ்ட்ரான் – இந்த திருதராஷ்ட்ரன் புதல்வர்களைக் கொல்வதால் , ந; -எமக்கு , கா ப்ரீதி: ஸ்யாத் , என்ன நன்மை உண்டாகப்போகிறது? ஏதான் – இந்த ஆததாயின: -படுபாவிகளைக் ஹத்வா- கொன்றால், அஸ்மான் – எமக்கு, பாபம் ஏவ-பாவம்தான் ஆச்ரயேத்- வந்தடையும்.

இந்த ஸ்லோகம் அர்ஜுனனின் மனமயக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. பிதாமஹர் ,ஆசார்யர் முதலியோரைக் கொல்வது எப்படி என்று ஆரம்பித்து இப்போது அவர்கள் பாவிகள் என்று ஒப்புக்கொண்டும், துரியோதனாதியரைக் கொல்வது தவறு என்று கூறுகிறான்.

ஆததாயீ என்பது ஆறுவகை படுபாதகத்தைச் செய்தவரைக் குறிக்கும். அவையாவன,

அக்னித:, கரத: சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ர தாராபஹர்தா ச ஷட் ஏதே ஹி ஆததாயின: (வசிஷ்ட ஸ்ம்ருதி )

அக்னித: - நெருப்புவைப்பவன், கரத: - விஷம் கொடுப்பவன், சஸ்த்ரபாணி: - ஆயுதம் கொண்டு கொல்ல வருபவன், தனாபஹ: - சொத்தை அபகரிப்பவன், க்ஷேத்ரதாராபஹர்த்தா- நிலத்தையும் மனைவியையும் அபகரிப்பவன்

இந்த ஆறுவகை பாபத்தில் ஒன்றைச் செய்பவராயினும் அவர்களைக் கொள்வதில் தவறேதும் இல்லை என்பது மனுநீதி.

துர்யோதனனும் அவன் சகோதரர்களும் இவை அனைத்தும் செய்துள்ளனர். அப்படியிருக்க சாஸ்திரம் அறிந்த அர்ஜுனுக்கு ஏன் குழப்பம் என்றால் அதற்குக் காரணம் பந்துக்களைக் கொல்பவன் குலநாசம் என்ற கொடியபாவத்தைச் செய்கிறான் என்று இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருப்பதே.

இதைத்தான் அர்ஜுனன் இந்த அத்தியாயம் முழுவதும் சொல்லப்போகிறான். இது எதைக் குறிக்கிறது என்றால் மனிதன் தன் கருத்துக்கு எது பொருத்தமானதோ அதைமட்டும்தான் நினைக்கிறான். அதற்கு எதிரானது எதுவும் நினைவுக்கு வருவதில்லை.

ஜனார்தனன் என்பது எதிரிகளை அழிப்பவன் என்பதோடு மக்களின் கஷ்டங்களைப் போக்குகிறவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அர்ஜுனன் கண்ணனை இந்த இரண்டாவது அர்த்த்தத்திலதான் ஜனார்த்தனா என்கிறானோ என்று தோன்றுகிறது. அதாவது நீதான் என்னை இந்தக் கஷ்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது.

ஆததாயின: கொடிய பாவிகள் என்ற சொல் அவர்கள் தண்டனைக்குரியவரே . அதனால்தான் கண்ணன் அவர்களை அழிக்கப்போகிறான் என்ற பொருள் புலப்படுகிறது.

No comments:

Post a Comment