கீதாம்ருதம்- அத்தியாயம் 1 தொடர்ச்சி
இது கொஞ்சம் பெரிய பதிவு பொறுமையுடன் படிக்கவும் . விசேஷமாக கடைசிப் பகுதி.
12. தஸ்ய சஞ்சனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
சிம்ஹநாதம் வினத்ய உச்சை: சங்கம் தத்மௌ பிரதாபவான்.
மகாவீரரான பிதாமஹர் பீஷ்மர் துர்யோதனன் இதுவரை கூறியதைக் கேட்டு அவன் மனகுழப்பத்தை அறிந்து அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கத் தன் சங்கத்தை சிம்ஹனாதம்போல் முழங்கினார்.
அது யுத்தத்தை ஆரம்பிக்கும் சைகையைக் குறித்ததாக ஆயிற்று.
13. தத: சங்கஸ்ச பேர்யஸ்ச பணவானககோமுகா:
ஸஹஸ்ரைவ அப்யமன்யந்த ஸ சப்த: துமுலோபவத்
பின்னர் ஆயிர்ககண்க்கான சங்கம்,பேரீ, முதலிய போர் முழக்கங்கள் ஒன்றாக எழுந்தன.
14.தத: ச்வேதை: ஹவ்யை: யுக்தே மஹதீ ச்யந்தனே ஸ்திதௌ
மாதவ: பாண்டவ: சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது:
தத: - அதன் பின் , ச்வேதை: ஹவ்யை: யுக்தே- வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்ட , ச்யந்தனே ஸ்திதௌ- தேரில் இருந்த , மாதவ: பாண்டவ: சைவ- கண்ணனும் அர்ஜுனனும், திவ்யௌ ஸங்கௌ பிரதத்மது:- தங்கள் தெய்வீகமான சங்கங்களை முழங்கினர்.
15. பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீகேச: தேவதத்தம் தனஞ்சய:
பௌண்டரம் தத்மௌ மகாசங்கம் பீம கர்மா வ்ருகோதர:
கண்ணன் பாஞ்சஜன்யத்தையும் அர்ஜுனன் தேவதத்தம் (இந்திரனால் கொடுக்கப்பட்டது) என்ற சங்கையும் பயங்கரமான பராக்ரமத்தை உடைய பீமன் பவுண்ட்ரம் என்ற சங்கையும் முழங்கினர்.
16.அனந்த விஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:
நகுல: சஹாதேவஸ்ச சுகோஷமணிபுஷ்பகௌ
17.காச்யாஸ்ச பர்மேஷ்வாசா: சிகண்டீ ச மஹாரத:
த்ருஷ்டத்யும்னோ விராடஸ்ச ஸாத்யகி:ச அபராஜித:
18.த்ருபதோ த்ரௌபதேயா: ச ஸர்வச: ப்ருதிவீபதே
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு: சங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக்
அதை ஒட்டி யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனற சங்கையும் நகுல சஹாதேவர்கள் முறையே ஸுகோஷம் மணிபுஷ்பக்கம் என்ற சங்கங்களையும் , தொடர்ந்து, காசிராஜா சிகண்டீ, த்ருஷ்டத்யும்னன், விராடன்,ஸாத்யகி, துருபதன், திரௌபதியின் புத்திரர்கள், அபிமன்யு இவர்கள் தங்கள் தங்கள் சங்கங்களை முழங்கினர்.
இதைக்கூறிய சஞ்சயன் மேலும் கூறுகிறான் –
ஸ கோஷோ தார்தராஷ்தரானாம் ஹ்ருத்யானி வ்யதாராயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யனுனாதயன்
ஆகாயம் பூமி இரண்டிலும் பிரதிபலித்த அந்த கோஷமானது கௌரவர்களின் ஹ்ருதய்த்தைப் பிளப்பது போல் இருந்தது.
.
பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீகேச: - இவை பொருள் செறிந்த சொற்களாகும். பகவானுடைய சங்கு முழங்கும்போது அது பக்தர்களுக்கு இனிமையாக இருப்பது ஆனால் பகைவருக்கு இடி முழக்கம் போன்றது ப்ருந்தாவனத்தில் உலகமெல்லாம் மகிழ குழலூதியவன் குருக்ஷேத்ரத்தில் கௌரவர்களை அழிக்க பாஞ்சஜன்யத்தை முழங்கினான்.
பக்வானுடைய சங்கானது ப்ரணவஸ்வரூபமான ஓம்காரம். சப்தத்தின் ஆதாரமான நாதபிரம்மம். ஒமித்யேகாக்ஷரம் பிரம்ம என்கிறது உபநிஷத். துருவனின் கன்னத்தை பாஞ்ச ஜன்யத்தினால் தொட்டதும் அவன் நாவிலிருந்து சொற்கள் பகவானை துதிப்பவைகளாகப் பிறந்தன.
பகவான் பஞ்சஜன்யத்தை ஊதியபோது அது கௌரவர்களுக்கு ஊதிய சங்காக ஆயிற்று. பின்னர் விஸ்வரூப தரிசனத்தில் "நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாகி விட்டது அர்ஜுனா நீ ஓர் கருவியே' என்று கூறுகிறார்.அதனால்தான் மற்றவர்கள் அவரவர் சங்குகளை ஊதியபோது அது கௌரவர்களின் இதயத்தைப் பிளந்தது போல் இருந்தது என்று வியாசர் வர்ணிக்கிறார்.
No comments:
Post a Comment