Monday, September 14, 2020

Tamil Proverb usage - Parakala nayaki

பழமொழியால் பணிந்துரைத்த பாட்டு

2
*நின் கோயில் முன்றில் எழுந்த
முருங்கையில் தேன்*


தன் கோயில் முற்றத்திலுண்டான முருங்கை மரத்தின் தேனை எளிதில் கவருமாப்போலே எளிதாக என் பெண்ணின் கைவளைக் கவர்ந்து கொண்டாயே என்கிறாள் எம்பெருமானிடம் பரகால நாயகியின் தாயார்.

''திருமலையில் நின்றருளின உபகாரகனே! விசாலமான கடல் போன்ற வடிவையுடையவனே! க்ருஷ்ணாவதாரம் பண்ணினாய். குடக்கூத்து ஆடினாய் நாற்சந்திகளிலே பெண்கள் கண்குளிர நின்று குடக் கூத்தாடி ஸ்த்ரீ ரத்னங்கள் பலவற்றையும் மயக்கி ஆண்டு கொண்ட நமக்கு இந்த பரகால நாயகி ஒருத்தி ஒரு சரக்கோ? என்று நினைக்கிறாய் போலும் : கரிய காளைகள் ஏழையும் வலியடக்கி நப்பின்னைப் பிராட்டியை மணத்துகொண்ட நமக்கு இப்பரகால நாயகி ஈடோ? என்று நினைக்கிறாய் போலும்; இந்திரன்கள் மாரி பொழிந்த அக்காலத்திலே இடையர்கள் நடுங்கி நிற்க, ஆநிரைகள் அலறி நிற்க, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி ஆயர்களையும், ஆநிரைகளையும், காத்தருளிள பெருமை வாய்ந்த நமக்கு இவள் ஒருத்தியை உபேக்ஷிப்பதால் என்ன குணக்கேடு வந்திடப்போகிறது? என்று நினைக்கிறாய் போலும்'' என்று எம் பெருமானிடம் திருத்தாயார் கேட்டாள்.

எம்பெருமான் 'வாரீர் பரகால ஜநநியின் தாயாரே! இவளை நான் உபேக்ஷித்ததாகச் சொல்லுவதற்கு யாது காரணம்? எதைக் கொண்டு நான் இவளை உபேக்ஷித்ததாக சொல்லுகிறாய்?' என்றான்.

தாயார் 'எம்பொருமானே! இவள் கையில்வளை நிற்க மாட்டாதுபோல் இளைக்கச் செய்துவிட்டாயே. உன்னுடைய கோயில் முற்றத்திலே உண்டான முருங்கை மரத்தின் தேன் எளிதானாப்போலே இப்பரகால நாயகியையும் எளிதாக நினைத்து இவளுடைய முன் கையிலுள்ள வளையைக் கைக்கொண்டருளினாய். உன் கருத்தை நான் அறிகிறேன்" என்கிறாள்.

No comments:

Post a Comment