தசாவதாரமும் கீதையும்
ராமாவதாரம் - 1
ராமாவதாரம் கீதையின் சாரம். கீதையில் கூறப்போவதை ராமனாக வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். கண்ணன் சொல்படி நட. ராமனை பின்பற்று என்பது அறியாதவர் வாக்கு. இருவரும் ஒன்றே.
பகவான் தன் அனந்த கல்யாண குணங்களை வெளிப்படுத்தினான் ராமனாக. 'ராமோ விக்ரஹவான் தர்ம: ,' என்று கூறப்படுவது போல மற்றவர்க்கு தர்மத்தை உபதேசித்ததும் அல்லாமல் தானே அத்ற்கு உதாரணமாக இருந்து காட்டியது ராமாவதாரம். மனிதனைப் போலவே வாழ்ந்து மனிதர்க்கு உதாரணமாக இருந்தான். க்ருஷ்ணாவதாரத்தில் தான் பகவான் என்பதை உணர்த்தியவாறே இருந்தான்.
தசரதன் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று பார்ப்போம். மேலோட்டமாகப் பார்க்கும்போது பத்து தேரில் உள்ளோரையும் ஒரே சமயத்தில் எதிர்த்து சமாளிப்பவன் என்று பொருள். ஆனால் தச ரதம் என்பது பத்து இந்த்ரியங்களைக் குறிக்கிறது. அவனுடைய மூன்று மனைவியரான கௌசல்யை, கைகேயி, சுமித்திரை இவர்கள் பக்தி, கர்மம், ஞானம் இவைகளைக் குறிக்கிறார்கள். பத்து இந்த்ரியங்களும் கர்மவசப்பட்டால் மன உறுதி இழந்து நாசம் அடையும் என்பதே தசரதனுக்கு கைகேயியிடம் இருந்த மோகத்தின் பொருள்.
கீதையில் 'ஸ்ம்ருதி ப்ரம்சாத் புத்தினாச: புத்தி நாசாத் வினஸ்யதி ,' ( கீ. 2.62/63) என்று மனதோடு புலன்களை அடக்கமுடியாதவன் எப்படி படிப்படியாக நாசம் அடைகிறான் என்பது விளக்கப்படுகிறது. ஆசையினால் விளையும் கர்மத்தில் ஈடுபாடு, மனதை ஞானத்தில் இருந்தும் பக்தியில் இருந்தும் விலக்கி விடுகிறது. அப்போது தர்மம் ( ராமன்) வெளியேறுகிறது. ஆனாலும் மனது அமைதியுறுவதில்லை . தசரதன் ராமனைக் காட்டுக்கு அனுப்பியபின் துன்புற்ரது இதையே குறிக்கிறது.
நான்கு சகோதரர்களில் ராமன் தர்மம் என்றால் லக்ஷ்மணன் அர்த்தம் , ( செல்வம், -லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன: என்கிறார் வால்மீகி). இது என்றால் பொருள் என்பது தர்மத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அர்த்தம் என்பது பொருள் மட்டும் அல்ல. வேண்டுவது எல்லாமே, பதவி புகழ் முதலிய அனைத்தும் அர்த்தம் அல்லது செல்வம்தான். இவை அனைத்தும் தர்மத்தை ஒட்டியே இருக்க வேண்டும். அத்னால்தான் லக்ஷ்மணன் ராமனை விட்டுப் பிரியாமல் இருக்கிறான்.
செல்வத்துள் எல்லாம் அரிய செல்வம் பகவானே. தேசிகர் வைராக்ய பஞ்சகத்தில் சொல்கிறார், 'அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம்,' "இந்த அத்தி கிரி மேல் என்னுடைய முன்னோர்களின் உண்மையான செல்வம் இருக்கிறதே," என்று.
பரதன் மோக்ஷத்தையும், சத்ருக்னன் காமத்தையும் குறிக்கிறார்கள். அதாவது காமம் அல்லது ஆசை என்பது மோக்ஷத்தைக் குறித்தே இருக்க வேண்டும் என்பது. மேலும் பரதன் கீதையில் குறிப்பிட்டுள்ள முற்றும் துறந்த பக்தனை ஒக்கிறான்.
ஸர்வகர்மாணி அபி ஸதா குர்வாண: மத்வ்யபாச்ரய:
மத்ப்ரஸாதாத் அவாப்னோதி சாஸ்வதம் பதம் அவ்யயம் ( கீ. 18. 56)
என்னையே புகலாகக் கொண்டு எல்லா கர்மங்களையும் செய்பவன் எனது அருளால் நிலையான பரமபதத்தை அடைகிறான்
(தொடரும்)
தசாவதாரமும் கீதையும்
ராமாவதாரம் - 2
ராமனும் சீதையும் பரமாத்ம ஜீவாத்ம ஸ்வரூபம். ஜீவாத்மா பரமாத்மாவை விட்டுப் பிரியாமல் இருக்கும்வரை ஆனந்தமாக இருக்கிறது. பொன் மான் மேல் ஆசை என்பது உலகப்பொருள்கள் மீது ஆசையைக் குறிக்கும். அப்போது ஜீவாத்மா இந்தியங்களால் கவர்ந்து செல்லப்படுகிறது.
பத்து தலை ராவணன் பத்து இந்திரியங்களின் உருவகம். பிறகு ஜீவாத்மா இலங்கையாகிய சரீரத்தில் சிறைப் படுத்தப் படுகிறது. சுற்றி உள்ள அரக்கிகள் சம்சாரத்தில் உள்ள துன்பங்கள். ஹனுமான் ஆகிய ஆசார்யன் ஜீவனுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்து பரமாத்மாவுடன் சேர்த்து வைக்கிறான். அக்னிப் பரீக்ஷை என்பது கர்மங்கள் நசித்து ஞானம் ஏற்படுவதைக் குறிக்கும் .
கீதையில் இதையே,
யதா ஏதாம்ஸி ஸமித்த: அக்னி: பஸ்மஸாத் குருதே அர்ஜுன
ஞானாக்னி: ஸர்வகர்மாணிபஸ்மஸாத் குருதே ததா (கீ. 4.37)
அர்ஜுனா, எவ்வாறு கொழுந்து விட்டு எரியும் அக்னி விறகுகளை சாம்பலாக்குமோ அதே போல ஞானம் என்ற் அக்னி கர்மங்களை எரிக்கிறது, என்று பகவான் கூறியுள்ளார்.
ஆனால் ராமனும் சீதையும் நாராயணனும் லக்ஷ்மியும் அல்லவா? அவர்களுக்கு கர்மம் ஏது என்ற சம்சயம் எழலாம். சீதையைப் பிரிந்த ராமனின் சோகமும் , அசோகவனத்தில் சீதையின் சோகமும் எதைக் காட்டுகிறது என்றால், ஜீவாத்மாவைப் பிரிந்த பரமாத்மாவின் தவிப்பு தன்னைப் பிரிந்த ஜீவனின் தவிப்பிற்குக் குறைந்த்தல்ல , இன்னும் சொல்லப்போனால் ஜீவனை விட பகவானே அதிகம் துயருறுகிறான் என்பதைக் காட்டவே நடிக்கப்பட்ட நாடகம். அவதார கார்யத்தை முடிக்க இருவரும் எடுத்த வேஷம் உண்மையாகத் தோன்றும்படி இருவரும் தங்கள் பாகத்தைத் திறம்பட நடித்துக் காட்டினர்.
பரதனும் சத்ருக்னனும் சங்கு சக்கரம் இவற்றின் அம்சங்களாகக் கூறப்படுகிறார்கள். இவை இரண்டும் பகவான் கையில் எப்போதும் இருக்க வேண்டும் என்பது நிச்சயம் இல்லை. ஆனால் சென்றால் குடையாம் இருந்தால் ஆஸனமாம் என்று சொல்லப்படும் ஆதிசேஷன் இல்லாமல் பகவான் இருந்த்தில்லை . லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரம் ஆகையால் ராமனை விட்டுப் பிரிந்ததே இல்லை. கைங்கர்யத்தின் மொத்த உருவமாக விளங்கினான். பரதன் ஞானத்திற்கு உதாரணம் என்றால் லக்ஷ்மணன் பக்திக்கு உதாரணம்.
No comments:
Post a Comment