பெரியவா திருவடியே
சரணம்.
கடவுள் மனம் என்ற ஒன்றைக் கொடுத்து, அதைப் பாவ புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்க வைக்கிறார். தெய்வத்தின் கருணை நமக்கு தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் தெய்வத்தின் அருள்தான். நல்லது - காரணம் இல்லாத அருள். கஷ்டம் - ஒரு காரணத்துக்காக ஏற்படுகிற அருள். நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும், அது பகவானின் அருள் என்று கொள்ள வேண்டும். நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும், வாக்கு தேவியான சரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக தினமும் அரைமணியாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.
பகவானைத் தெரிந்து கொள்கிறவரைத்தான் துவேஷம், விரோதம், வெறுப்பு எல்லாம் இருக்கும். அவரைத் தெரிந்து கொண்ட பின் இவை எல்லாம் மறைந்து எல்லோரிடமும் அன்பு வந்துவிடும். ஜீவகாருண்யம் என்றால் கருணை என்று நாம் அறிவோம். கருணை காட்டுவது என்றால் உதவி செய்பவர் ஒரு படி மேலே போய் நிற்பது போலவும், உதவியைப் பெறுபவர் நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பது போலவும் நாம் நினைத்து விடுகிறோம். ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு எளிமை, அடக்கம், அகங்கார நீக்கம் ஆகிய நல்ல விஷயங்கள் உண்டாக வேண்டும். மாறாக, அவை அகம்பாவத்தை வளர்த்தால், வேலியே பயிரை மேய்ந்த கதை ஆகிவிடும்.
கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. 'நம் கடன்பணி செய்து கிடப்பதே' என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு, ஆர்வத்தோடு, இதயப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.
மேலும், பிறருக்கு உதவி செய்யும் போது "போனால் போகிறது, நம்மிடம் வீணாக இருப்பது தானே, பிறருக்கு உபயோகமாக இருக்கட்டும்' என்ற எண்ணத்துடன் செய்வது நல்லதல்ல. இதனால் நமக்கு தீமையே உண்டாகும். அதனால், ஒருவருக்கு உதவி செய்யும்போது கருணை, காருண்யம் என்று சொல்வதை விட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத்தாழ்வு இருக்காது. அன்பு இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் உண்டாவதாகும். இதில் பிறருக்கு உதவி செய்கிறோம் என்ற சிந்தனைக்கு இடமில்லை. அன்புக்கு நம்மவர், மற்றவர் என்ற பேதமே கிடையாது. அன்பில் ஒருவர் தழைத்து இருந்தால் பிராணிகள் கூட அவரை ஆதரிக்கும்.
No comments:
Post a Comment