Friday, July 24, 2020

Viswa bramana kaarini-Periyavaa

*வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்*

*விச்வ ப்ரமண காரணி*

ஆரம்பத்திலே அசையாத சிவனொருத்தனைப் பராசக்தி அசைவிப்பதாகச் சொன்னவர் முடிக்கும்போது விச்வம் முழுதையும் அவள் அசை அசை என்று அசைத்துச் சுழட்டி வைக்கிறாள் – "விச்வம் ப்ரமயஸி"* – என்கிறார். 

அந்த ஒரு சிவப்ரம்மம்  ப்ரமணமானதும் [சுழற்சியடைந்ததும்] அத்தனை விச்வ ஸ்ருஷ்டியும் ஏற்பட்டு எல்லாம் சுழலுகின்றன, ஸதா சலிக்கின்றன! 

ஒரு அணுவுக்குள்ளே எலெக்ட்ரான் ஸெகண்டுக்கு 1,86,000 மைல் வேகத்தில் சுற்றுவதிலிருந்து, பெரிய பெரிய நக்ஷத்ர மண்டலங்களான காலக்ஸிகள் (galaxy) வரை நம்முடைய பூமி முதலான ஸகல க்ரஹ நக்ஷத்ரங்களும் தங்களைத் தாங்களே சுற்றிக்கொண்டு, அதோடு ஆகாச வீதியிலேயும் ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும்படியாக, சொல்ல முடியாத பவரோடு ஸகலத்தையும் அசை, அசை என்று அசைத்துக் கொண்டிருக்கிறாள்! 

இந்த அத்தனை சலனத்தையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு ஜீவ மனஸும் ஸதா சஞ்சலிக்கிறது! "விச்வம் ப்ரமயஸி" என்று ஸரியாகத்தான் (ஸௌந்தர்ய லஹரி) ஸ்லோகத்தில் (ஆச்சார்யாள்) போட்டார்! 

பகவான் கீதையில் "ப்ராமயன் ஸர்வ பூதாநி" என்று சொன்னாலும், அவர் ஜீவகுலத்தின் சித்தம் ஸதா சலிப்பதை -– [சிரித்து] நம் அத்தனை பேருக்குமே 'சித்த ப்ரமை' என்ற ப்ரமணம் இருக்கத்தான் இருக்கிறது! அதை –- மட்டுமே சொன்னார். ஜீவர்களின் ஹ்ருதயத்திலே இருந்து கொண்டு அவர்களை ஈச்வரன் ஆட்டி வைப்பதை மட்டும் சொன்னார். 
ஆசார்யாள் சேதனம் அசேதனம் எல்லாவற்றையுமே சேர்த்து 'விச்வம்' என்று போட்டு விட்டார்.மஹாமாயையாக இப்படி ஆட்டி வைப்பவள் பரமாநுக்ரஹ ரூபிணியாக இந்த மாயா லோகத்திலேயே பலவித அருள்களைப் பண்ணி முடிவிலே ஆடாத அசையாத பரானந்த ரஸமான சிவமாக -– ப்ரஹ்மமாக -– ஜீவனைப் பண்ணுவதை அடுத்த ச்லோகத்திலேயே தெரிவிக்கிறார்

_ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 165 / நாமம் 889 – விச்வ ப்ரமண காரணி – உலகைச் சுற்றி வரச் செய்பவள்_

_பெரியவா சரணம்!_

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

No comments:

Post a Comment