Tuesday, July 14, 2020

Uddhava gita - Varanasrama dharma in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

உத்தவ கீதை- வர்ணாச்ரம தர்மம்

உத்தவர் கூறினார்
அவரவர்க்குரிய தர்மங்களை எவ்வாறு அனுஷ்டித்தால் மனிதர்களுக்கு உன்மீது பக்தி உண்டாகுமோ அதை எனக்குக் கூறியருள வேண்டும்.

பகவான் கூறியது.
ஆதியில் (கிருதயுகத்தில்)பிரணவம் மட்டுமே வேதமாக இருந்து. நானே தர்மம். மாசற்ற தபஸ்விகள் என்னை ஹம்ச ரூபமாக உபாஸிக்கிறார்கள்.

திரேதாயுகத்தில் ஆதியில் என்னுடைய மூச்சுக்காற்றில் இருந்து வேதம் உண்டாயிற்று. அதிலிருந்து நான் மூன்றுவகையான யக்ஞ ரூபியானேன்.

அப்போது சமம்,(உள்ளடக்கம்) தமம், (வெளி அடக்கம்)தபஸ், சௌசம், மன, உடல் சுத்தம்) சந்தோஷம், க்ஷாந்தி, (பொறுமை) தயை, ஆர்ஜவம் (சத்தியம்) இவை அந்தணரின் இயற்கை குணங்களாயின.

புத்திகூர்மை, தேகபலம், தைரியம், வீரம், பொறுமை, உதாரகுணம், முயற்சி, உறுதி, அந்தண பக்தி, ஆளும் தன்மை , இவை க்ஷத்திரியர்களின் குணங்களாயின.

தெய்வநம்பிக்கை, தானத்தில் ஈடுபாடு, அடக்கம், அந்தண சேவை, பொருள் சேர்ப்பதில் ஊக்கம், ஆகியவை வைசியனின் குணங்கள் ஆயின.

மூன்று வர்ணத்தாருக்கும், பசுக்களுக்கும், தேவர்களுக்கும் கபடம் இன்றி சேவை செய்தல், அதில் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல் நாலாம் வர்ணத்திற்குரிய குணங்களாயின.

அஹிம்சை, சத்தியம், களவின்மை, காமக்ரோதலோபம் இன்மை உயிர்களிடம் அன்பு, , நல்லதை நாடும் எண்ணம் இவை எல்லா வருணத்தாருக்கும் பொதுவான தர்மம்.

பிரம்மச்சர்யாஸ்ரமத்திற்குப் பிறகு குருதக்ஷினை கொடுத்து க்ருஹஸ்தாஸ்ரமத்தையோ , வானப் பிரஸ்தாஸ்ரமத்தையோ அல்லது அந்தணராயின் சந்யாசத்தையோ மேற்கொள்ளலாம்.

முதல் மூன்று ஆச்ரமத்திற்கும் உபநயனம் , குருகுல வாசம், யாகம் அத்யயனம், தானமளித்தல் இவை பொதுவான தர்மங்களாயினும், தானம் வாங்குதல் அத்யயனம் செய்வித்தல், யாகம் செய்வித்தல் இவை பிராமணருக்கு மட்டுமே உரியவை.

வேதாத்யயனம், பித்ருபூஜை, தேவபூஜை, அன்னதானம் முதலியவைகளால், என் ரூபமுடைய தேவர்களையும், ரிஷிகளையும் , பித்ருக்களையும், செல்வத்துக்குத் தகுந்த முறையில் தினந்தோறும் பூஜிக்க வேண்டும்.

முயற்சியின்றியோ, பரிசுத்தமான வழியிலோ கிடைத்த்போருளைக்கொண்டு ஒருவரையும் கஷ்டபடுத்தாமல் யாகங்களை செய்து என்னை ஆராதிக்க வேண்டும். குடும்பப் பற்றை விட்டு, உறவுகள் வழிப்போக்கருக்கு சமானம் என்று உணர்ந்து வீடுகளில் அதிதியைப்போல் வசித்து அஹங்காரமமகாரம் இல்லாமல் த்ன் கடமைகளை ஆற்றி புத்திரர்களிடம் மனைவியை ஒப்படைத்தோ அல்லது கூட அழைத்துச்சென்றோ ஆயுளின் மூன்றாவது பாகம் வரை (முதிய நிலையில்) வனத்திற்குச் சென்று பரிசுத்தமான காய் கிழங்கு பழம் இவைகளால் வாழ்க்கை நடத்த வேண்டும்

.மூப்பினால் தளர்ந்த நிலையில் அக்னியைத் தன்னிடம் ஆரோபணம் செய்து என்னிடம் மனதை செலுத்தி உடலைத் துறக்க வேண்டும்.. அல்லது திடமான வைராக்கியம் ஏற்படும்போது அக்னி கார்யத்தை நிறுத்தி சன்யாசம் மேற்கொள்ள வேண்டும். 
அடுத்து சந்நியாச தர்மம் பற்றிக் கூறுகிறார்

  

உத்தவ கீதை - வர்ணாஸ்ரம தர்மம் தொடர்ச்சி

ஸன்யாசம் செய்துகொள்ள விரும்புபவனுக்கு தேவர்கள் அவன் அக்னிகார்யத்தை விட்டுவிடுவதனால் அவனுக்கு மனைவிமக்கள் மூலம் இடையூறை ஏற்படுத்துவார்கள்.

ஒரு சன்யாசி அவனுடைய தண்டமும் பிக்ஷாபாத்திரமும் தவிர வேறு உடைமைகள் வைத்துக்கொள்ளக் கூடாது. சுத்தமான பூமியில் பாதம் வைக்க வேண்டும். துணியில் வடிகட்டிய நீரையே உபயோகிக்க வேண்டும். இதனால் அஹிம்சை , சுத்தம் இவை வலியுறுத்தப்படுகின்றன.

மௌனமும் ஆசை விடுதலும் (காம்ய கர்ம த்யாகம்) ப்ராணாயாமமும் முறையே வாக்கு,உடல், மனம் இவைகளின் உண்மையான தண்டங்கள். அது இல்லாமல் வெறும் மூங்கில தடிகளால் பயன் ஏதும் இல்லை.

ஏழு வீடுகளில் மட்டுமே பிக்ஷை எடுத்து கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். பற்றற்றவனாகவும், இந்திரியங்களை அடக்கியவன் ஆகவும்,ஆத்மாவிடமே ரமிப்பவனாகவும்,அனைத்திலும் சமநோக்கு உடையவனாகவும் இருக்க வேண்டும். ஞானத்தில் நிலை பெற்று வைராக்யத்தோடு விதிகளுக்கு அப்பாற்பட்டவனாக சஞ்சரிக்க வேண்டும்.

ஞானியாயினும் ஒரு குழந்தையைப்போலவும், உன்மத்தனைப்போலவும், ஜடம் போலவும், சஞ்சரிக்க வேண்டும். வேத வாதங்கள் வறட்டு விவாதங்கள், தர்க்கங்கள் இவைகளில் ஈடுபடக்கூடாது. புகழ்-இகழ் , சுகம் துக்கம் , இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும்.

பிரம்மஞானம் அடையும் வரை பிரம்மநிஷ்டரான ஒரு குருவை ஆச்ரயித்து அதைப் பெற வேண்டும். துறவறம் மேற்கொண்டோர்க்கு முக்கியமானது அஹிம்சையும் மனவடக்கமும். வானப்ரஸ்தருக்கு வேண்டியது விவேகமும் வைராக்யமும். க்ருஹஸ்தரின் தர்மம் ஜீவராசிகளின் நன்மையைக் காப்பதும் யாக யக்ஞங்களும். பிரம்மசாரிக்கு முக்கியமானது ஆசார்ய சேவை.

இவ்வாறு யார் யார் ஸ்வதர்மத்தின் மூலம் என்னை முழுமனதுடன் ஆச்ரயிக்கிறார்களோ அவர்கள் எல்லா உயிர்களிலும் என்னைக் காண்பதுடன் என் சிறந்த பக்தர்களாவார். அந்த பக்தியின் மூலம் உலகநாயகனும், ஸ்ருஷ்டி ஸ்திதி லய கர்த்தாவான என்னை வந்தடைகிறார்கள். 
இந்த வர்ணாஸ்ரம தர்மங்கள் என்னிடம் பக்தியுடன் கடைப்பிடிக்கப்பட்டால் மோக்ஷத்திற்கு அதுவே சாதனம் ஆக அமையும்.

  

No comments:

Post a Comment