உத்தர குருவாயூரப்பன் J K SIVAN
எனக்கு நங்கநல்லூர் பரிச்சயமானது 1968-69ல். திருவல்லிக்கேணி மைலாப்பூர் வாசியாக ஒண்டு குடுத்தனத்தில் வாடகை வீட்டில் இருந்தவன் 1969ல் சொந்த மண்ணில் வீடு கட்ட அருள்பாலித்தவன் குருவாயூரப்பன் கண்ணன் தான். அவனும் அப்போது தனக்கு ஒரு வீடு நங்கநல்லூரில் கட்டிக்கொண்டிருந்தான். அவன் நங்கநல்லூர் வடகிழக்கு பகுதியில் நான் தென் கிழக்கு பகுதியில்.
நங்கநல்லூர் வடகிழக்கு பகுதியில் இருக்கும் ராம்நகர் கிட்டத்தட்ட ஒரு தீவு மாதிரி இருக்கும் மழைநாட்களில் . ஏரிக்கரை. இப்போது ஏரியை காணோம். சாக்கடை கொஞ்சம் ஓடுகிறது. இங்குள்ள குருவாயூரப்பன் ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன். அப்படியே குருவாயூரில் இருந்து பெயர்த்து எடுத்து இங்கே பிரதிஷ்டை பண்ணியது போல் ஒரு தோற்றம். வழிபாட்டு முறை.
எனது நண்பர்கள் காலஞ்சென்ற ஸ்ரீ தியாகராஜன், டாக்டர் சீதாராமனின் தந்தை ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் பலரின் முயற்சியில் இணைந்து உருவான ஆலயம். என் நண்பர் PROF . ரொட்டேரியன், சுந்தரராஜன் அன்றும் இன்றும் இந்த ஆலய முன்னேற்றத்துக்கு உழைப்பவர். அதன் நிர்வாகிகளில் ஒருவராக இன்றும் இணைந்திருக்கிறார். 1975ல் ஏப்ரல் மாதம் 17 அன்று கும்பாபிஷேகம் ஆயிற்று.
நமஸ்கார மண்டபத்தில் பில்வமங்கள் சிலை. பில்வமங்கள் கதை சுருக்கமாக சொல்கிறேன்.
சில சமயம் வேற் கடலை மடித்து வரும் காகிதத்தை கூட அதில் என்ன எழுதி இருக்கிறது என்று விரும்பிப் படிப்போம். காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தில் இல்லாத அலாதி விஷயங்கள் கிழிந்த அந்த அரைபக்கத்தில் இருப்பதாக சந்தோஷம் பொங்கும். கிருஷ்ண பக்தர் சைதன்ய மஹா பிரபு கையில் இந்த மாதிரி ஒரு துண்டு காகிதமோ ஓலைச்சுவடியோ கிடைத்து படிக்கிறார்.
''அடடா, இது அதி அற்புதமாக அல்லவோ இருக்கிறது. இதை யார் எழுதியது?. முழுபுத்தகமும் எனக்கு வேண்டுமே'' என்று சொல்ல சிஷ்யர்கள் எங்கெங்கோ ஓடி கேரளாவில் முழு ஓலைச் சுவடியும் கிடைத்தது. இந்த புத்தகம் சைதன்ய மகா பிரபு கையில் கிடைத்ததால் நம் அதிர்ஷ்டம் இன்று இதை புத்தகமாக படிக்கிறோம். அது தான் லீலா சுகர் (பில்வமங்கள் பெயர் ) கிருஷ்ண கர்ணாம்ருதம்.
பில்வமங்கள் நிறையவே எழுதியிருக்கிறார். குருவாயூரப்பன் மீது அலாதி பிரேமை.'' உன்னி கிருஷ்ணா நீ வாடா'' என்றால் அவர் முன் வந்து நிற்பான்.
ஞாபகம் இருக்கிறதா? MK தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் என்ற படம் மூன்று தீபாவளி பார்த்து சக்கை போடு போட்டதே. அதில் பாகவதர் வேடம் தான் பில்வமங்கள் '' கிருஷ்ணா முகுந்தா முராரே '' 80 வருஷங்களாக இன்னும் மக்கள் பாடும் ஒரு அமர பாடல். அப்படிப் பாட இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை. சிந்தாமணி என்னும் வேசியிடம் மனதை பறிகொடுத்து ஒரு இரவு எப்படியும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற வெறியில் பில்வமங்கள் வெளியே மழையில் செல்ல, வழியில் ஒரு ஆறு வெள்ளத்தோடு குறுக்கிட, அதில் ஏதோ மிதந்துவந்ததை பிடித்துக்கொண்டு அக்கரை சென்று அவள் வீட்டை அடைந்தபோது கதவு தாளிட்டு அவள் மாடியில் படுத்திருக்க மாடிக்கு போக அருகே இருந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கயிற்றை பிடித்து தாவி மாடிக்குள் குதித்து அவள் யார் இந்த நேரம் என்று கதவை திறந்து வெளிவர மேலே ரத்தக்கரையோடு பில்வமங்கள். ''எப்படி ரத்தம் என்று பார்க்கும்போது தான் ஒரு பெரிய பாம்பை அழுத்தி பிடித்து ஏறி அது ரத்தம் கக்கியதும் அவர் ஆற்றைக் கடந்தது ஒரு பிணத்தை பிடித்துக் கொண்டு என்றும் புரிகிறது.
சிந்தாமணி பில்வமங்களிடம் அப்போது நச்சென்று கேட்கிறாள்.
''ஏனய்யா அழியப்போகும் என் உடல் மீது இத்தனை தீவிரம் வைத்த தாங்கள் துளியாவது அழியாத பரம்பொருள் பகவானிடம் வைத்தால் போகும் வழிக்காவது புண்ணியம் சேராதா? ''
அவள் கொடுத்த சாட்டையடி பில்வமங்கள் மனம் மாறிவிடுகிறது. எல்லாவற்றிற்கும் ள்ளோருக்கும் ஒரு நேரம் வரவேண்டும்.
சோமகிரி என்கிற ஞானியிடம் பணிந்து சிஷ்யராகி தீக்ஷை பெற்று தீவிர கிருஷ்ண பக்தர் லீலா சுகர் ஆகிறார்.பிருந்தாவனம், கோகுலம், மதுரா எல்லாம் செல்கிறார். கிருஷ்ணன் தரிசனம் தருகிறான். கிருஷ்ண கர்ணாம்ருதம் நமக்கு கிடைக்கிறது.
''இந்த சுட்டிப் பயல் கிருஷ்ணன் ஒரு அவதாரம் என்றே வைத்துக்கொண்டாலும் மற்ற பகவானின் அவதாரங்களை விட சிறந்தவன்.எப்படி?
மற்ற அவதாரங்களில் அவர் கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும், நிறைய ஆபரணங்கள், கிரீடம், எல்லாம் இருக்கும். பெரிய ராஜ, பிராமண குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். குதிரை யானை, அரண்மனை .... இப்படி ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால் இந்த கிருஷ்ணன் பயலைப் பாருங்கள். ஏதோ ஒரு மயில் இறகை தலையில் செருகி, அதுவே அவன் கிரீடம். சாதாரண மக்கள் வீட்டில் வளர்ந்து, பழகி, மண்ணில் விளையாடி, நீரில் குதித்து, வெண்ணை திருடி....... சாதாரண மானவனாகவே இருக்கிறான். பாமரர்க்குள் பரமன்.
குருவாயூர் அப்பன் பேரில் ஒரு அற்புதம் இருக்கிறதே யோசித்தீர்களா?. அவன் குழந்தை. மலையாளத்தில் உண்ணி என்பார்கள். அந்த உன்னிகிருஷ்ணன் குருவாயூரில் தவழ்கின்றவன் அப்பன் எப்படி? ஆமாம் தந்தை தான் குடும்பத்தில் ஜீவனோபா யத்திற்கு காப்பவன். அப்பா. அம்மா தாய் பராமரித்து வளர்ப்பவள் . ஆகவே உண்ணியாக இருந்தாலும் குருவாயூரில் அந்த கிருஷ்ணன் குருவாயூரப்பனாக லோக ரக்ஷகன்.
குருவாயூருக்கு வடக்கே உள்ள குருவாயூரப்பன் என்பதால் அவனுக்கு உத்தரகுருவாயூரப்பன் என்று நங்கநல்லூரில் பெயர். நங்கநல்லூர் குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் நிர்வாகத்தில் அற்புதமாக பராமரிக் கப்படும் ஆலயம். அவசியம் இதுவரை தரிசிக்காதவர்கள் தங்கள் க்ரிஷ்ணானு பவத்தை இங்கே பெறலாம்.
இந்த ஆஸ்திக சமாஜம் பணியாற்றும் இடத்தை தானமாக கொடுத்தவரும் ஒரு ''கோபால கிருஷ்ணன்'' ஒரு வங்கி அதிகாரி யாக இருந்தவர்.
ஆரண்யமாக இருந்த நங்கநல்லூர் தற்போது ஒரு ஆலயங்கள் நிறைந்த ஊராக மாறியது அவன் அருளால் தான்.
No comments:
Post a Comment