Thursday, May 21, 2020

Vedartha sangraham part 10 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

வேதார்த்தசங்க்ரஹம்-1௦

ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

ராமானுஜரின் விளக்கத்தின்படி,

தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய

பிரம்மம் பலவாக ஆக சங்கல்பித்தது.

ஸ்வாம்ச ஏகதேசாதேவ வியதாதி பூதானி ஸ்ருஷ்ட்வா

தன்னுடைய ஒரு அம்சத்தினாலேயே ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களை தோற்றுவித்தது.,

சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை.

அங்கே 'தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,' அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.

அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
'அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி' (சாந்தோக்ய உப.)

இதன் பொருள், 'இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.'

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

இப்போது ஜடவஸ்துக்களின் உளதாம் தன்மை (existence) அவற்றின் உள் பிரம்மம் அந்தர்யாமியாக இருப்பதனால் தான் என்று அறிகிறோம்.

இப்போது புலன் உணர்ச்சி கொண்ட உயிர்களும் உலகத்தில்(sentient) உள்ளவைதானே ? அவைகளுக்கும் பிரம்மமே ஜீவனாக இருக்கிறது அல்லவா? அத்தகைய ஜீவராசிகள் பிரம்மத்தின் உடலாகவும் பிரம்மமே அவைகளின் உயிராகவும் உபநிஷத் வாக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

'எது ஜீவாத்மாவின் உள் இருந்துகொண்டு அதை நடத்துகிறதோ, எதை ஜீவாத்மா அறியவில்லையோ,எதற்கு ஜீவாத்மா சரீரமாக உள்ளதோ அதுதான் உண்மையானஆத்மா, அந்தர்யாமியாகவும் நித்யமாகவும் இருக்கிறது. அதுதான் ப்ரஹ்மம்.'(brhd.up. 5.7)

அதனால் எல்லாவற்றிற்கும் பிரம்மமே அந்தராத்மா என்று அறிகிறோம். 'ப்ரம்மாத்மகானி தானி ஸர்வாணி.'

ஆகையால் தேவர், மனுஷ்யர், யக்ஷர், ராக்ஷசர், பசு, ம்ருகம், பக்ஷி, வ்ருக்ஷம், கோடி, கட்டை, கல், புல், பானை, துணி, முதலிய எல்லா சொற்களும் அதனதன் உருவம், குணம் இவைகளால் அவற்றின் மூலமான பிரம்மத்தையே சுட்டுகின்றன.

இதை எளிதாக விளக்கலாம். இது ஒரு பசு என்று சொல்லும்போது நாம் அதன் உருவத்தை மட்டுமா குறிப்பிடுகிறோம்? அதன் குணங்கள், தன்மை மேலும் அதை ஒரு உயிருள்ள ஜந்துவாக அல்லவா காண்கிறோம்? அதே போல இவன் தான் ராமசாமி அன்று சொல்லும்போது அவன் உருவம் மட்டுமா நம் மனதில் தோன்றுகிறது? அதற்கு அவன் படமே போதும். அவன் யார் எப்படிப்பட்டவன் என்ற எல்லா விஷயங்களும் நம் மனதிற்கு வருகின்றது.

மேலும் அவனுடைய தேகத்தைத் தாண்டி அவன் ஒரு உயிருள்ள மனிதன் என்னும்போது தேகம் மனம் புத்தி எல்லாவற்றிற்கும் மேல் அவன் உயிர் அல்லது ஆன்மா என்பது தானே உண்மை. இல்லாவிட்டால் அவன் என்பது பொய் அது என்றாகிவிடுமே. அதனால் பெயர் உருவம் குணம் மற்ற சம்பந்தங்கள் எல்லாவற்றிற்கும் மேல் ஆன்மா என்பதே முக்கியம் ஆகிறது. அந்த ஆன்மாவிற்குள் அந்தராத்மாவாக இருப்பதே பிரம்மம்.

\அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே .

,
'க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ச ஜகத் தஸ்ய சரீரம். ' 
'அதனால் பிரம்மம்தான் அகில உலகத்துக்கும் ஆத்மா. அகில உலகமும் பிரம்மத்தின் சரீரம் ' 'த்வம்' என்னும் சப்தத்தால் கூறப்படும் 'நீ' பிரம்மத்தினுடைய படிவமே. இதனால் எல்லாம் பிரம்மத்தையே ஆத்மாவாகக் கொண்டவை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

'தத் த்வம் அஸி' என்ற மஹாவாக்கியத்தின் பொருள், நீ என்ற ஜீவன் உன் அந்தராத்மாவான பிரம்மமே என்பது.

இந்த சரீர சரீரி பாவம்அதாவது பிரம்மம் தான் ஆத்மா ஜீவன் , ஜகத் இவை அதன் உடல் என்பதை பின்னும் விவரிக்கிறார் . அதைப் பின்னர் காண்போம்.

  

No comments:

Post a Comment