வேதார்த்தசங்க்ரஹம்- ஸ்ரீ ராமானுஜர்
உபநிஷத்துக்களில் மூன்று வகையான உரைப்பகுதிகள் காணப்படுகின்றன. ஒன்று அபேதஸ்ருதிஎனப்படும் அத்வைத விஷயமான வாக்கியங்கள். அடுத்தது பேத சுருதி எனப்படும் த்வைத வேதாந்தபரமான வாக்கியங்கள்.
இவற்றைத்தவிர சில பகுதிகளில் எங்கும் நிறைந்து எல்லாப்பொருளிலும் அந்தர்யாமியாக விளங்கும் இறைவனைப் பற்றிய வாக்கியங்கள். இவற்றை ராமானுஜர் கடகஸ்ருதி என்று குறிப்பிடுகிறார். அவர் சொல்வது என்னவென்றால் உபநிஷத் வாக்கியங்கள் எல்லாமே முக்கியம் வாய்ந்தவையாகும். அவைகளில் ஒருபகுதியை மட்டும் எடுத்துக் கொள்வது முறையல்ல. இந்த கோட்பாட்டின்படி உருவானதே விசிஷ்டாத்வைதம்.
இவ்வாறு விசிஷ்டாத்வைதம் இரண்டு முனைகளாகிய அத்வைதம் த்வைதம் என்ற இரு சித்தாந்தங்களையும் இணைக்கும்பாலம்ஆக இருக்கிறது என்றே சொல்லலாம். இப்போது நாம் அந்த இருமுனைகளையும் ஆராய்வோம்.
சங்கரர் நிலைநிறுத்திய அத்வைத சித்தாந்தத்தின்படி ஜீவப்ரம்ம ஐக்கியம் சொல்லப்படுகிறது. "பிரம்ம சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரம்மைவ நாபர:" அதாவது பிரம்மமே உண்மை உலகம் மாயை, ஜீவன் பிரம்மத்தைத் தவிர வேறில்லை.இதை உணர்ந்து பிரம்மத்தில் ஐக்கியம் ஆவதே முக்தி. இதுதான் அத்வைத சித்தாந்தம்.
இதைக்குறிக்கும் ஸ்ருதிவாக்கியங்கள் 'நேஹ நானா அஸ்தி கஞ்சன', சர்வம் கலு இதம் ப்ரம்ம, தத் த்வம் அஸி' முதலியவை.
அத்வைதம் சங்கரரால் உபதேசிக்கப்பட்டதற்கு சரித்திர பின்னணியில் காரணம் உள்ளது. அதே போல விசிஷ்டாத்வைதம் ராமனுஜரால் உபதேசிக்கப்பட்டதற்கும் அன்றைய சரித்திரப் பின்னணியே காரணம். அதைப்பிறகு பார்க்கலாம்.
மத்வரின் த்வாத சித்தாந்ததத்தின்படி ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு வேறு . நாராயணனே பரப்ரஹ்மம். ஜீவன் அவனுக்கு தாசன். அவனை வணங்கி முக்தி பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோள்
ராமானுஜர் சித்தாந்தத்தின்படி இரு முனையையும் இணைக்கும் கொள்கை எனப்படுவது விசிஷ்டசஸ்ய அத்வைதம் அல்லது விஸிஷ்டயோ: அத்வைதம். ஜீவனுக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஒன்றிய நிலை என்னவென்றால் சரீரத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள சம்பந்தம் . இதை விரிவாகப் பிறகு பார்க்கலாம். இந்த உண்மையை நூலின் ஆரம்பத்திலேயே மங்களச்லோகத்தில் கோடி காட்டி விடுகிறார்.
No comments:
Post a Comment