*எனக்கு ஏதேனும் ஒரு கைங்கர்யம் செய்வதற்குப் பெரியவா உத்தரவிட்டால் தேவலை".*
ஈச்சங்குடி கணேசய்யர், இவர் இஞ்சினியராக இருந்து ஒய்வு பெற்றவர். தன் மனைவியுடன் ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்கு வந்தார்.
"எவ்வளவு தொகை செலவானாலும் பரவாயில்லை. எனக்கு ஏதேனும் ஒரு கைங்கர்யம் செய்வதற்குப் பெரியவா உத்தரவிட்டால் தேவலை".
இப்படி கணேசய்யர் பிரார்த்தித்துக் கொண்டார். ஸ்ரீ பெரியவா மற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு இவரிடம் சொன்னார்.
"கும்பகோணத்தில் நிறைய பிள்ளையார் கோயில் இருக்கு. அரசமரத்தடி, ஆற்றங்கரை இங்கெல்லாம் மேற்கூரை இல்லாத பிள்ளையார்கள் அதிகம். கும்பகோணம் டவுனைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் வரையில் உள்ள எல்லா பிள்ளையார்களுக்கும் – கோவிலில் இருந்தாலும், குளத்தங்கரையில் இருந்தாலும், எண்ணெய் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனப் பொட்டு வைச்சு, ஊதுவத்தி ஏத்தி வைச்சு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, நைவேத்யம் செய்து விடு, அது போதும்".
கணேசய்யர் என்ற பெயர் கொண்ட பக்தருக்கு கும்பகோணதிலுள்ள அத்தனை கணேசருக்கும் பூஜை செய்விக்க உத்தரவானதில் பேரானந்தம்தான்.
இருந்தாலும் "எனக்கு இந்த பூஜை புனஸ்காரமெல்லாம் பழக்கமில்லை. இருப்பத்திநாலு வருஷமா வடக்கே போய் செட்டில் ஆயிட்டேன். அதனாலே உள்ளூரிலே யாரிடமும் பரிச்சியம் கிடையாது" என்று தன் இயலாமையை முறையிட்டார்.
ஸ்ரீ பெரியவா, ஸ்ரீ பாலு அவர்களை அழைத்து "கும்பகோணம் பழக்கடைத் தியாகுவுக்கு ஒரு லெட்டர் எழுதிப்போடு. அவன் எல்லா உதவியையும் செய்வான்" என்று அனுப்பினார்.
கூடவே இந்தக் கைங்கர்யம் நிறைவேறியவுடன் அவரையும் கணேசய்யரோடு வரச் சொல்லியும் எழுதச்சொன்னார்.
அதன்படிப் பழக்கடைத் தியாகு என்ற அன்பர் தன் மனைவியோடு கணேசய்யர் இல்லத்திற்கு வந்தார். உடனடியாக ஸ்ரீ பெரியவாளின் உத்தரவை ஆரம்பித்தார்கள். மூன்று நாட்களுக்கு ராஜா வேதபாடசாலையின் வேன் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஸ்ரீ மடம் வாசற்புறம் அமைந்திருந்த கருங்கல் தூணிலுள்ள பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து எங்கெல்லாம் பிள்ளையார் தென்படுகிறாரோ அங்கெல்லாம் தேடித் தேடி ஒரு பிள்ளையாரையும் விட்டு விடக் கூடாதென்ற சிரத்தையோடு கிட்டத்தட்ட நூற்று அறுபத்தெட்டுப் பிள்ளையார்களைக் கண்டுபிடித்து பூஜைக்கான ஏற்பாடுகள் செய்துவிட்டனர். கிட்டத்தட்ட ஐந்து டின் நல்லெண்ணெய், அரைக்கிலோ சந்தனம், ஒரு கிலோ கற்பூரம், ஐம்பது பாக்கெட் ஊதுபத்தி இவைகளைக் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு அந்தந்த சிவாசார்யார்களிடம் கொடுத்தும், வெளியே இருந்த பிள்ளையார்களுக்கு அவர்களாகவே தெரிந்த மட்டும் அபிஷேகம் பூஜைகளையும் செய்தனர்.
கை, கால் உடைந்து பின்னமாக இருக்கும் சில பிள்ளையார்களை விட்டு விடலாமா என்று சந்தேகம் வந்தது. அது பற்றி ஸ்ரீ மடத்தில் கூறி ஸ்ரீ பெரியவாளிடம் கேட்டப்போது "ஏன் கை, கால் உடைந்த மனிதர்கள் உலகில் உயிர் வாழ்வதில்லையா? அதுபோல் தான் இதுவும்" என்று ஸ்ரீ பெரியவா அருளியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே பின்னமான பிள்ளையார்களும் விடுபடாமல் பூஜைகளை ஏற்றுக் கொண்டனர்.
இப்படி ஒரு பிள்ளையாரையும் விடவில்லை என்ற உறுதியோடுதான் இவர்கள் ஸ்ரீ பெரியவாளின் உத்தரவை நிறைவேற்றிவிட்டதாகக் கருதி இதை ஸ்ரீ மகானை தரிசித்து அவரிடம் தெரிவிக்கச் சென்றனர்.
அப்போது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கர்நூல் அருகே ஒரு கிராமத்தில் அருளிக்கொண்டிருக்க, தியாகுவும், கணேசய்யர் குடும்பமும் அங்கு தரிசிக்கச் சென்று இதை சமர்ப்பித்து நின்றனர். அத்தனை விபரங்களையும் கேட்டுக்கொண்ட அந்த நடமாடும் தெய்வம் இவர்களை திகைக்க வைக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.
"இன்னும் ஆறு பிள்ளையார்கள் இருக்கே? எப்படி விட்டுப்போச்சு?"என்று ஸ்ரீ பெரியவா கேட்டபோது இவர்கள் வியப்பில் ஒன்றும் கூற இயலாமல் நின்றனர். இப்படித் தேடித் தேடி மூலை முடுக்கிலெல்லாம் இருந்த பிள்ளையார்களுக்கு அபிஷேக ஆராதனை முடித்துவிட்டு வந்ததாக எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, இங்கிருந்தபடியே சரியாக ஆறு பிள்ளையார்கள் விட்டுப்போனதாக ஸ்ரீ பெரியவா கூறுவது மிகவும் ஆச்சர்யத்தை அளித்தது.
ஸ்ரீபெரியவா தானே அதற்கும் விடை சொல்லும் வகையில் "சாக்கோட்டை பக்கம் ஒரு பிள்ளையார், சுவாமிமலை போகும் சாலையில் ஒரு வினாயகர், குடியானவர்கள் தெருவில் அவர்கள் கோலாகலமாகக் கொண்டாடும் ஒரு பிள்ளையார், அரசலாற்றங்கரைப் பிள்ளையார், மரத்தடிப் பிள்ளையார்" என்று சரியாக ஆறு பிள்ளையார்களை ஸ்ரீ பெரியவா கூற அவைகள் அவர்கள் கண்ணுக்கு விடுப்பட்டிருப்பது அப்போது புரிந்தது..
"அதனாலே பரவாயில்லே. ஊருக்குப் போனதும் இந்த ஆறு பிள்ளையாருக்கும் அபிஷேக ஆராதனை பண்ணிடு" என்று தன்னுடைய அபூர்வ மகிமையை மறைத்து ஸ்ரீ பெரியவா இவர்களைத் திசைத் திருப்பினார்.
கும்பகோணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து எல்லா இடங்களையும் தெரிந்தவராக இருந்தாலும், நூற்று அறுபத்தெட்டுப் பிள்ளையார்களுக்கும் மேல் ஆறு பிள்ளையார்கள் விடுபட்டதைக் கூறுவதென்பது சாத்யமாகுமா என்ன?
சர்வக்ஞராக ஈஸ்வர பெரியவாளுக்கு மட்டுமே இது சாத்யமான ஒன்று. இதனை பரிபூர்ணமாக அன்று கணேசய்யரும், தியாகுவும் உணர்ந்த ஆனந்தத்தோடு பரமேஸ்வரரை நமஸ்கரித்துச் சென்றனர்.
-ஜெகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
ஹர ஹர ஹர சங்கரா!
ஜெய ஜெய ஜெய சங்கரா!
சிவ சிவ சிவ சங்கரா!
*குருவே சரணம்*
*குருவே துணை*
*குருவே போற்றி!.*
No comments:
Post a Comment