Thursday, May 14, 2020

Chandrasekaramrutam - Periyavaa

Today's Sri Chandrasekaramrutham - பரோபகாரம்: தமிழ் நாட்டு வள்ளல்கள் 
     தமிழ் தேசத்திலும் வள்ளல்கள் என்று இவர்களைத் தெய்வத்துக்கு சமானமாகக் கொண்டாடுகிற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. "முதலெழு - இடையெழு - கடையெழு - வள்ளல்கள்" என்று குமணன், அதியமான் முதலான 21 பேரை ஸ்லாகித்துச் சொல்லியிருக்கிறது.
     காரி, ஒரி, பாரி என்றெல்லாம் 7 பேரைக் கடையெழு வள்ளல்கள் என்பார்கள். பாரி வள்ளல் முல்லைக் கொடி படருவதற்காகத் தன் தேரையே கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். இன்னொருத்தன் [பேகன்] மயில் குளிரில் நடுங்குகிறதே என்று தன் உத்தரீயத்தையே எடுத்து அதற்குப் போர்த்தினானாம்.
     அதியமானுக்கு சிரஞ்சீவித்வத்தைத் தரக்கூடிய நெல்லிக்கனி கிடைத்தது. 'நாம் சிரஞ்சீவியாக இருந்து என்ன சாதிக்கப் போகிறோம்? ஒளவைப் பாட்டி இருக்கிறாளே, சதாவும் லோக க்ஷேமத்தை பண்ணிக்கொண்டு, ஊர் ஊராக ஓடிக் குழந்தைகளுக்கு உபதேசம் செய்து வருகிறாளே, அவள் திடகாத்ரத்தோடு எத்தனை ஆயுசு இருந்தாலும் அது தான் லோகத்துக்கு நல்லது' என்று அவன் நினைத்து அவளுக்கே அந்த நெல்லிக்கனியை தானம் பண்ணிவிட்டான்.
        'அதியமான் பண்ணியது புத்திசாலித்தனமாக இருக்கிறது. ஆனால் முல்லைக்குத் தேராவது? மயிலுக்கு எங்கேயாவது குளிருமா? அதற்குப் பட்டுப் பீதாம்பாரத்தைப் போர்த்துவாவது? இதெல்லாம் புத்தி இல்லாத காரியமாக அல்லவா இருக்கு?' என்று கேட்கலாம். என்னைக் கேட்டால், இப்படி புத்திக்கு வேலையே இல்லாமல் முட்டாள்தனம் மாதிரி கூடத் தோணுகிற காரியங்களைச் செய்வது தான் நிஜமான அன்பை, நிஜமான த்யாகத்தைக் காட்டுகிறது என்பேன்.
     அன்பு பீறிட்டுக்கொண்டு வருகிறபோது மூளையினால் அதற்கு நியாய அநியாயங்கள் பார்க்க முடியாது. இப்படித்தான், நாயன்மார்களைப் பார்த்தால் பெண்டாட்டியையே ஒருத்தர் தானம் பண்ணினார்; இன்னொருத்தர் பிள்ளையையே கறி பண்ணிப் போட்டார் என்கிற போது, இதெல்லாம் மூடத்தனம், உணர்ச்சிக் கட்டுப்பாட்டில்லாத காரியம் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படிப்பட்ட தியாக சிந்தனை இருந்தது என்பது தான் முக்கியம்.
     மூளையால் சமாதானம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் உருட்டிப் புரட்டிக்கொண்டு வந்துவிட்ட தியாகம் தான் நிஜமான தியாகம் என்பது என் அபிப்பிராயம். இம்மாதிரி ஆவேசமாகப் "பரோபகாரம்" பண்ணின பெரியவர்கள் நம் தேசத்தில் ஆதி காலத்திலிருந்தே அவிச்சின்னமாக [தொடர் முறியாமல்] வந்து கொண்டே இருந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment