Friday, April 3, 2020

Marriages in those days

கொரோனாவும் கல்யாணமும் J K SIVAN

சமீபத்தில் கொரோனாவால் நின்று போன கூட்டங்கள், பண்டிகைகள், விழாக்கள், திருமணங்கள் அதிகம். திருமணங்கள் அதிகபக்ஷம் ஒன்றரை நாள் தான் இப்போது. சிலது சில மணி நேரங்களில் முடிகிறது. வருவது, சாப்பிடுவது, மொய் எழுதுவது, தேங்காய், சாத்துக்குடி கொடுத்தால் காகிதப் பையோடு பறந்து விடுவது என்று ஆகிவிட்டது. மந்திரங்கள் , சம்பிரதாயங்கள் எல்லாம் பண்ணி வைப்பவர் களுக்கே மறந்து போய்விடும் அளவுக்கு சுருங்கி விட்டது. கல்யாணம் என்பது பிள்ளையையோ பெண்ணையோ விற்கும் வியாபாரமாகி விட்டதாள் இப்படி ஆகிவிட்டதோ?

இதில் எதற்கு இன்னமும் ''......... ஜகத்குரு/ஆச்சார்யர்கள் .. . பரிபூர்ண அனுக்கிரஹத்தோடு.''. என்று உள்ளே செருக வேண்டும்...

ஒரே நாளில் ரெண்டு மூன்று கல்யாணங்கள் கூட சென்று பங்கேற்க முடிகிறதே. ஒரே மண்ட பத்தில் கீழே ஒன்றும், முதல் மாடி, ரெண்டாம் மாடி என்று கல்யாணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டு நடக்கிறதே.

வெட்கக்கேடு, வெகுநாளைய உத்யோக கால பழைய நண்பர் வீட்டு கல்யாணத்துக்குப் போக கிளம்பி வேறு ஒரு கல்யாணத்தில் முன் பின் தெரியாதவர்கள் கல்யாணத்தில் நுழைந்து, '' என்ன இது நமக்கு தெரிந்தவர்கள் யாரும் காணோமே'' என்று அதிசயித்து, மொய்யெழுதி விட்டு, சாப்பிட்டும் வந்தேன்.. பிறகு நண்பர்
களிடம் இது பற்றி பேசியபோது பலருக்கும் இந்த மாதிரி ஆள் மாறாட்ட அனுபவம் இருப்பது தெரிந்தது.

என்னவோ இன்று ஒரு வேலையுமில்லாமல் வீட்டில் 144ல் முடங்கி கிடக்கும்போது பழைய கல்யாண பத்திரிகை ஒன்று கண்ணில் பட்டது. சும்மா இருக்கும் நேரத்தில் தானே பழசை எல்லாம் களையவேண்டும் . அதைப் பார்த்ததும் பழைய கால கல்யாண ஞாபகங்கள் வந்தது.

++
கல்யாணத்தில் மைசூர் ரசம் தவிர நவரசமும் உண்டு, ஹாஸ்யம், கேலி, பிள்ளை வீட்டார் சிலர் தங்கள் வீம்பு, பொட்டை அதிகாரத்தை காட்ட கோபமாக மிரட்டுவார்கள். குரல் எழுப்பு வார்கள். பெண்வீட்டார் பணிந்து ஒடுங்கி அவர்களை சமாதானம் பண்ண அவர்கள் கை குரல் எல்லாம் ஓங்கும். சங்கீதம் வாத்யம் ஓசை தூள்பறக்கும். பண டிமாண்டுகள் பேச என்றே சிலர் ஆணிலும் பெண்ணிலுமாக இருப்பார் கள். அவ்வப்போது பணம் பையை விட்டு இறங்கினால் தான் அடுத்த சடங்கு என்று பிடுங்குவதும் உண்டு. பெண் வீட்டார்கள் இதெல்லாம் தெரிந்தவர்கள் ஆதலால் தயார் நிலையில் சிலர் உதவியோடு சமாளிப்பார்கள்.
முன்பு எல்லாம் கல்யாணம் வேறே மாதிரி நடந்தது. கல்யாணத்துக்கு முன்பு சுமங்கலி பிரார்த்தனை நடத்தி அவர்கள் ஆசி, தீர்க்க செளமங்கல்யம், தாலிப்பிச்சை, ஆசிர் வாதம் பெறுவார்கள். செட்டிநாட்டு பக்கம் வீடுகள் பழைய மண் சட்டி பானைகளில் பழைய சுமங்கலிப் பாட்டி புடவை, மாங்கல்யம் எல்லாம் ஜாக்கிரதையாக தீட்டுப்படாமல் வைத்திருப்பார்கள். அது பிரார்த்தனை பூஜையில் பங்கேற்கும். பழைய புடவை எடுபட்டு புது புடவையை மொடமொடவென்று கொசுவி மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மணையில் பாட்டி போல அமர்ந்திருக்கும். பெண் பிள்ளை குடும்பத்தை சேர்ந்த சுமங்கலிகள் தலை வாழை இலையில் பரிமாறிய உணவை முதலில் பாட்டி சாப்பிட ''பாட்டி வயிறார சாப்பிடுங்கோ, மஞ்சள் குங்கமத்துக்கு பஞ்சமில்லாமல் எங்களை காப்பாத்துங்கோ, தெரிந்து தெரியாமலும், அறிந்து அறியாமல் செய்த தப்பெல்லாம் மன்னிச்சுடுங்கோ. அபச்சாரங்களை புறக்கணித்து கல்யாணத்தை நன்றாக நடத்திக் கொடுங்கோ''

சில தெலுங்கு குடும்பங்கள் 20 சுமங்கலிகள் போல் அழைத்து மடியாக தாம்பாளங்களில் பால், மஞ்சள் ஜலம் வைத்து சுற்றி அமர்வார்கள். பாடுவார்கள். பிரதான புடவையை கோவிலில் அம்மனுக்கு சார்த்திவிடுவார்கள். மற்ற சுமங்கலிகளுக்கு கல்யாணத்தன்று காலை புடவை, ரவிக்கை துண்டு தாம்பூலம் , மஞ்ச ளோடு சேர்த்து கொடுப்பார்கள்.

கல்யாணம் என்கிற சேதி பல மாதங்கள் முன்னாடியே பல குடும்பங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரவர் பிரயாண ஏற்பாடுகள் செய்து கொண்டார்கள். அம்பிகா 777 திடீர் அப்பளம், ஊறுகாய், தின்பண்டங்கள் தெரியாது. அம்மாமிகள் கூடி உட்கார்ந்து அப்பளம், வடம், எல்லாம் இடுவார்கள். வெயில் இருக்கும்போதே இதெல்லாம் ரெடியாகி விடும். எல்லா
உறவினர்களும் அவரவர் பங்குக்கு இழுத்துப் போட்டுக்கொண்டு காரியங்களை பிரித்துக் கொள்வார்கள். ஒருகல்யாணத்தில் நான்கு ஐந்து கல்யாணங்கள் நிச்சயமாகிவிடும். பெண் பிள்ளை ஜாதகங்கள் பரிமாறிக் கொள்வார்கள். சில பெண்கள் பிள்ளைகள் நேரிலேயே பார்க்கப்பட்டு விவரங்கள் பிடித்து போய்விடும். லௌகீக பேச்சுகள் குடும்ப பூர்வோத்தரம் எல்லாம் முடிந்து கல்யாணம் தேதி, இடம் எல்லாம் முடிவெடுப்பார்கள். கல்யாண மண்டபங்கள் கிடையாது. பெண் வீட்டார் வீட்டு தெருவே சுற்றி மடக்கிப் போடுவார்கள் ஊருக்கே அன்று சாப்பாடு. ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம் இது தான். கல்யாணங்கள் ஐந்து நாள் குறையாமல் நடக்கும். ...... '' தாங்கள் தங்கள் குடும்பத்
தோடும், நண்பர்களோடும் முன்னதாகவே வந்திருந்து...'' உண்மையிலேயே கடைப்பிடிக்கப்பட்டு மூன்று நாள் முன்னதாகவே வாசலில் வண்டி வந்து நிற்கும் . தூங்கும் கிராமம் விழித்துக் கொள்ளும். உறவினர்கள் எல்லோரும் வந்து இறங்கி டிக்கானா போடுவார்கள். கொண்டாட்டம், கேளிக்கை, சீட்டாட்டம் ஜமா, சதிர், (டான்ஸ்) கச்சேரி,, சண்டை எல்லாம் இருக்கும். தோட்டங்களில் கொல்லைகளில் விதவிதமான காய்கறிகள், வாசலில் கோட்டை அடுப்பு, சமையல் வாசனை தெருக்கள் எல்லாமே மணக்கும். டிவி வீடியோ, போட்டோ எதுவுமே கிடையாது. போட்டோ எடுத்தால் ஆயுசு கம்மி என்ற பயம் வேறு.

பந்தக்கால் நடுவதே பலே ஜோர். பாக்கு, வாழை தென்னங்கன்றுகள் , கட்டி, புஷ்ப அலங்காரத்தோடு, தீபங்கள் ஒளிர, மாவிலை தோரணங்களோடு எல்லோரையும் முதலில் வரவேற்கும். அதற்கு தான் முதலில் கற்பூர ஹாரத்தி, பூஜை மணியோசை எல்லாம். சுமங்கலிகளை விட்டு களிமண் பிசைந்து மண்ணில் சதுரமாக கல்யாண படி ரெண்டு போட்டு செம்மண் பார்டர் border கட்டி, வண்ணக் கோலங்கள் போட்டு லட்சுமி கல்யாணம், கௌரி கல்யாணம் பாடுவார்கள். படிக்கு பக்கத்தில் அணையா தீபம் ஒரு பலகையில் விடாமல் எரியும். அதை கவனிப்பதற்கு முறை போட்டுக்கொண்டு சிலர் பொறுப்பெடுப்பார்கள். சிலர் பெரிய குத்து விளக்குகள் பூச்சுற்றி, அலங்கரிக்கப்பட்டு ஐந்து முகங்களோடு தீப ஒளி பரவச்செய்வது வழக்கம்.

சுமங்கலிப்பெண்கள் அனைவருக்கும் குடும்பத்தில் மஞ்சள் குங்கும நலங்கு இடுவார்கள். இப்போது மெஹந்தி போல அப்போது.
கூட்டமாக வந்த உறவினர்கள் நண்பர்களை ஊரார் வீடுகளில் தங்க வைத்து மூன்று வேளை எல்லோருக்கும் சாப்பாடு உண்டு. ஹோட்டல்கள் சப்படுவாளோ, தங்கவோ இல்லாத காலம். பல வீட்டு திண்ணைகளில் முட்டு முட்டாக வெளியூர் தலைகள் தெரியும். தெரிந்தவர் தெரியாதவர் என்று இல்லாமல் எல்லோரும் ஒன்றாக கூடி பழகுவார்கள். நண்பர்களாவார்கள். மாப்பிள்ளை வீட்டார்கள் வரும் சேதி அறிந்து கிராம எல்லையிலேயே கூட்டமாக பூர்ண கும்பத்தோடு, மாலை மரியாதைகளோடு நாதஸ்வர வாத்ய கோஷ்டியோடு காத்திருந்து மாட்டு வண்டிகள் வந்து இறங்க வரவேற்று வணங்கி மாலையிட்டு, சந்தனம் குங்குமம், புஷ்பங்கள் கல்கண்டு கொடுத்து ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.
அடேயப்பா இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல... பிறகு சொல்கிறேன்.

Image may contain: 3 people

No comments:

Post a Comment