Friday, March 27, 2020

Story of NO MAN

நோ மேன் கதை. J K SIVAN
கரோனாவால் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி விட்டோம். தெருவில் no man . அட இந்த பெயர் எங்கோ எப்போது கேட்ட ஞாபகம் வருகிறதே.
துரைவேலு முதலியார் இங்கிலிஷ் பைத்தியம் என்று சொல்வார்கள். நிறைய இங்கிலிஷ் கதைகள், கவிதைகள் எல்லாம் பற்றி சொல்வார். இலக்கணமும் சொல்லிக்கொடுப்பார். ஒன்பதாவது வகுப்பு ஆங்கிலம் சரித்திரம் பாடம் பீரியட் period எப்போது வரும் என்று காத்திருப்போம்.

இன்று அவர் சொன்ன ஒருவன் ஞாபகத்துக்கு வந்தான். அவன் கிரேக்க சரித்திர புருஷன். நமது பாரதம் ராமாயணம் புராணம் போன்றவைகள் போலவே ரொம்ப ரசமாக கிரேக்க கதைகள் நகத்தை கடித்து தின்னும் விறுவிறுப்போடு இருக்கும் என்பது

முதலியார் மூலம் 14-15 வயதில் புரிந்தது. வீட்டில் புஸ்தகம் படிக்கும் வழக்கம் அப்போது இல்லை. குழந்தைகள் கதை புத்தகம் என்று எதையும் யாரும் வாங்கி கொடுக்க மாட்டார்கள். பாட்டி அத்தைகள் சில தாத்தாக்கள் மாமாக்கள் தான் லைப்ரரி. நிறைய விஷயம் வைத்திருப்பார்கள். அவர்கள் சொல்வது தான் புராணம் இதிகாசம் எல்லாம்.

பத்து வருஷம் ட்ரோஜன் யுத்தம் நடந்து கிரேக்க வீரன் ஒடிஸ்ஸியஸ் படகில் தனது வீரர்களோடு தீவுக்கு மிதக்கிறான்.. காற்றில் ஆடி அசைந்து செல்லும் கப்பல் நினைத்தபடி போக வேண்டிய இடத்துக்கு போய் சேராது. வழி தப்பி ஒரு தீவுக்கு செல்கிறது. ஒடிஸ்ஸியஸ் அந்த புது தீவில் படகை விட்டு இறங்கி செல்கிறான். அது ஒற்றைக்கண் ராக்ஷஸர்கள் வாழும் தீவு. மனிதர்கள் கிடைத்தால் விருந்து. ஒடிஸ்ஸியஸ் அவன் வீரர்களோடு ஒரு குகையை பார்க்கிறான். உள்ளே நல்லவேளை நிறைய உணவு, தண்ணீர் இருக்கிறது. நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்குகிறார்கள். அந்த குகைக்காரன் சைக்ளோப்ஸ் நாளிரவு திரும்புகிறான். நிறைய ஆடுகள் கொண்டுவந்து அவைகளை குகையில் விட்டு ஒரு பெரிய பாறையை வைத்து குகையை மூடினான்.

தன் குகையில் ஒடிஸ்ஸியஸ் ,மற்றும் அவன் கூட்டாளிகளை பார்த்ததும் ஆச்சர்யம். ரெண்டு பேரை தூக்கி பாறையில் மண்டையை துவைத்து அப்படியே சுகமாக விழுங்கி விட்டு சைக்ளோப்ஸ் தூங்கி விட்டான்.

மஹா பலசாலி , அதோடு அவன் மூடிய பாறையை நகர்த்தினால் தான் குகையை விட்டு வெளியேற முடியும். ஆகவே பாறையை நகர்த்த அவன் அவசியம். என்ன செய்யலாம்? ஒடிஸ்ஸியஸ் கெட்டிக்காரன். மறுநாள் காலை இன்னும் ரெண்டு பேரை காலை உணவாக சாப்பிட்டுவிட்ட சைக்ளோப்ஸ் குகையின் வாசல் பாறையை நகர்த்தி ஆடுகளை வெளியே விட்டான். இது மாதிரி சந்தர்ப்பத்துக்கு ஒடிஸ்ஸியஸ் காத்திருந்தான். இரவே ஒரு நீள மான தடியை எடுத்து ஒரு முனையை கூராக சீவி வைத்திருந்தார்கள். சாயந்திரம் சைக்ளோப்ஸ் குகைக்கு வந்தான். பாறையை நகர்த்தி ஆடுகளை உள்ளே விட்டான். பாறையை நகர்த்தி குகையை மூடிய கையோடு ரெண்டு ஆட்களை பிடித்து பாறையில் மண்டையை உடைத்து இரவு உணவு முடித்துக் கொண்டான்.

''அண்ணே இந்தாங்க உங்களுக்காக கொண்டுவந்தேன் '' என்று ஒடிசியஸ் சைக்ளோப் ஸி டம் தான் கொண்டுவந்த அதிக போதை தரும் ஒரு மது குடுவையை கொடுத்தான். சைக்ளோப்ஸ் இதுவரை குடித்ததே இல்லை. ஆகவே சந்தோஷமாக முழு குடுவையும் காலி செய்துவிட்டான்.

பரவாயில்லையே நீ இவ்வளவு நல்லவனா? உன்னை கடைசியில் தின்கிறேன். அதற்குள் உன் பேர் என்ன சொல்லு ?''என் பெயர் '' மனிதன் இல்லை'' no man .''சரி. குடி போதையில் சைக்ளோப்ஸ் கீழே படுத்து தூங்கிப்போனான்.சீக்கிரம் சீக்கிரமாக ஒடிஸ்ஸியஸும் மீதி சாப்பிடப்படாத ஆட்களும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த பெரிய மரத்தடியின் கூரான முனையை நெருப்பில் கொளுத்தி பழுக்க காய்ச்சிய நெருப்பாக அந்த தடியின் முனையை சைக்ளோப்ஸ் நெற்றியில் நடுவில் இருந்த பெரிய ஒரே கண்ணில் பாய்ச்சி விட்டார்கள். . எரிச்சல் வலி தாங்கமுடியாத சைக்ளோப்ஸ் அலறிக் கொண்டு எழுந்தான். கோபம் வேறு. ஆனால் கண் குருடாகிவிட்டதே.

தட்டு தடுமாறி குகைவாயில் வந்து பாறையை புரட்டி தள்ளி சைக்ளோப்ஸ் கத்திக்கொண்டே ஓடினான். தீவிலிருந்து மற்ற சைக்க்ளாப்ஸ் கள் அவன் அலறலைக் கேட்டு யார் உன் கண்ணைக் குருடாக்கியது என்று கேட்கிறார்கள்.''நோ மேன் '' no man''நம்பாமல் சிரித்துக்கொண்டே போய்விடுகிறார்கள். மறுநாள் காலை ஒடிஸ்ஸியஸ் ஒவ்வொரு ராக்ஷஸ ஆடு வயிற்றிலும் ஒருவனை கட்டி அத்தனைபேரும் ஆடுகள் வெளியே போக காத்திருக்கிறார்கள்.

கண்தெரியாத சைக்ளோப்ஸ் ஒவ்வொரு ஆட்டையும் முதுகில் யாரவது இருக்கிறார்களா என்று தடவிப் பார்த்து விட்டு ஆடுகளை வெளியே அனுப்புகிறான். ''இதென்ன அக்கிரமம் புதிதாக வயிற்றில் ஏதோ தொங்குகிறதே'' என்று ஆடுகள் தலைதெறிக்க ஓடுகிறது. கடற்கரை அருகே வந்ததும் ஒடிஸ்ஸியஸ் அவன் ஆட்கள் ஆடுகளை விட்டு தரையில் குதித்து தங்களது கப்பலை தயார் செய்து கொண்டு கடலில் நகர்கிறார்கள். சைக்ளோப்ஸ்

ஓடி வந்து விட்டான். ஆடுகளின் சத்தம், ஏதோ கப்பல் கடலில் நகரும் சத்தம் கேட்கிறது. '' டேய் நோ மேன் நோ மேன்'' என்று கத்துகிறான்.

நான் ''நோ மேன் இல்லை ஒடிஸ்ஸியஸ் . உன்னை குருடாக் கியவன்'' என்று உரக்க பதிலளிக்கும்போது கடலில் கப்பல் கொஞ்ச தூரம் சென்றுவிட்டது..

நான் அஹிம்சையாக கதையை சுருக்கி சொல்லும்போது கதை சுவைக்காது. சைக்ளோப்ஸ் போடும் சப்தங்கள், அவன் உருவம், அவன் ஒவ்வொரு மனிதனையும் எப்படி நசுக்கி, அடித்து, பிளந்து, பிய்த்து, தோலுரித்து உயிரோடு கடித்து சாப்பிட்டான் என்று துரைவேலு சைவ முதலியார் நேரில் இருந்து பார்த்தது போல் கதை சொல்லும்போது நிறையபேர் எங்களது அரை நிஜார் ஈரமாகி விட்டிருக்கிறது.

அதற்கப்புறம் மேல் நாட்டு கதைகள் படிக்கும் ஆர்வம் பெருகியது. இன்னும் அப்பப்போ சிலது சொல்கிறேன்.

Image may contain: one or more people

No comments:

Post a Comment