ஸ்ரீம்த்பாகவதம்- தசமஸ்கந்தம்
அத்தியாயம் 39/40
அத்தியாயம் 39
க்ருஷ்ணர் அக்ரூரரிடம் கம்சன் மற்றும் உற்றார் உறவினர் இவர்களின் நலன் பற்றியும் விசாரிக்க அக்ரூரர் தான் எதற்காக அனுப்பப்பட்டார் என்பதையும் கம்சனின் உள்நோக்கம் பற்றியும் தெரிவித்தார்.
க்ருஷ்ணனும் பலராமனும் அதைக்கேட்டு சிரித்து நந்த கோபரிடம் கம்சனின் கட்டளையை தெரிவித்தார்கள். நந்த கோபர் உடனே கோபர்களிடம் பால் தயிர் மற்ற அரசருக்கான காணிக்கைகளை எடுத்துக் கொண்டு மதுரைக்குச் செல்ல வண்டி பூட்டும்படி கட்டளை இட்டார் .
இந்த செய்தியைக் கேட்ட கோபியர் மனம் உடைந்தனர். அவர்கள் மனிதரை சினேகத்தால் கூட்டிவைத்துப் பிறகு பிரிக்கும் ப்ரம்மதேவனின் கருணையற்ற உள்ளத்தை நிந்தித்தனர். அக்ரூரர் என்ற பெயரில் வந்த குரூரர் என்று எண்ணினர். நெஞ்சில் ஈரமில்லாமல் கிருஷ்ணன் தேரில் ஏறி உட்கார கோபர்களும் அவனை அவசரப்படுத்துவதைப் பார்த்து பெரியோர்களும் தங்களுக்கு விரோதமாக நடப்பதாகவும் தெய்வமும் ப்ரதிகூலமாக இருப்பதாகவும் எண்ணி உரக்க கோவிந்தா, தாமோதரா, மாதவா என்று கதறினர்.
அவர்கள் துயரத்தைக் கண்டு கண்ணன் சீக்கிரமே வருவதாக ஆறுதலளித்தார்.. அவர்கள் கிருஷ்ணன் இனித் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இல்லாமல் அவர் லீலைகளைப் பாடிக்கொண்டு ஒருவாறு மனம் தெளிந்து திரும்பிச்சென்றனர். பகவானும் வாயுவேகம் கொண்ட தேரில் ஏறி பலராமனுடனும் அக்ரூரருடனும் பாவத்தைப் போக்கும் யமுனையை அடைந்தார்.
யமுனையை அடைந்ததும் அக்ரூரர் அவர்களைத் தேரில் உட்கார வைத்துவிட்டு யமுனையில் இறங்கி ஸ்னானம் செய்தார். பிறகு நதியில் மந்திர ஜபம் செய்து நீரில் மூழ்கையில் அங்கு பலராமனையும் க்ருஷ்ணனையும் கண்டார் . தேரில் இருந்தவர்கள் இங்கு எப்படி வந்தனர் என்று முழுகி எழுந்து பார்க்கையில் அவர்கள் முன் போலவே தேரில் அமர்ந்திருக்கக் கண்டார். அது பொய்யா என்று பார்க்க மறுபடி நீரில் மூழ்கியபோது அங்கு ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் நான்கு புஜங்களுடன் கூடிய நாராயணனைக் கண்டு அவரை துதிக்கலானார்.
அத்தியாயம் 40
அக்ரூரர் பகவானைப் பின் வருமாறு துதித்தார்.
ஸ்ரீ மன்நாராயணனான நீர் இந்த உலகத்தின் காரணம் . ,பரமபுருஷனும் சகல ஜீவராசிகளுக்கும் ஆத்மாவான உம்மை ஞானிகள் ஞான ஸ்வரூபமாக அறிகிறார்கள்.
ப்ரலய சமுத்திரத்தில் மத்ஸ்யரூபத்திலும், மதுகைடபரை அழிக்க ஹயக்ரீவராகவும், ஆமை வடிவில் மந்தரமலையைத் தாங்கியவரும், வராஹமாக வந்து பூமியை வெளிக் கொணர்ந்தவரும், பக்தனைக் காக்க அற்புத ஸிம்ஹமாக தோன்றியவரும், வாமனராக வந்து மூவுலகளந்தவரும், பரசுராமராக க்ஷத்ரியர்களை வேரறுத்தவரும், ராமனாக ராவணனை வதம் செய்தவரும் ஆன உமக்கு நமஸ்காரம்,.
வாசுதேவரும்,ஸங்கர்ஷணனும், ப்ரத்யுமனனும், அனிருத்தனும் யாதவ பதியும் ஆன உம்மை நமஸ்கரிக்கிறேன்.
எல்லாஜீவராசிகளும் உமது மாயைக்குட்பட்டு 'நான்' 'எனது' என்ற துரபிமானத்தால் கவரப்பட்டு கர்ம வசப்படுகிறார்கள்.
நானும் கனவுக்கொப்பான உடல், மனை, மனைவி, சுற்றம் இவற்றை உண்மையென நம்பி சம்சாரத்தில் உழலுகிறேன். உம்மைச்சரணடைந்த என்னைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment