204. ஸந்திமதே நமஹ (Sandhimathe namaha)
நாதமுனிகள் எப்போதும் ஒரு வாசகத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார்.
"குளப்படியில் மழை பெய்தால் குருவி குடித்துப்போம். வீராணத்தில் மழை பெய்தால் நாடெல்லாம் விளையும்" என்பதே அந்த வாசகம்.
இவ்வாசகத்தின் பொருள் என்ன? ராமாநுஜரை வீராணம் ஏரியோடும், மற்ற குருமார்களைக் குளத்தோடும் ஒப்பிட்டு
இவ்வாசகத்தைக் கூறியுள்ளார் நாதமுனிகள்.
ராமாநுஜருக்கு முன் இருந்த குருமார்கள், சீடர்களுக்கு உபதேசம் செய்யும் முன் பலவகைகளில் சீடர்களைச் சோதித்துப் பார்த்து,
அதன்பின் தான் உபதேசம் செய்வார்கள்.
குளத்தில் பெய்யும் மழை எப்படி சில பேருக்குத் தான் பயன்படுமோ, அதுபோல் அத்தகைய குருமார்களிடம் உள்ள கருத்துக்களும்
ஒரு சில சீடர்களையே சென்றடையும்.
ஆனால் ராமாநுஜரோ, எந்த ஏற்றத்தாழ்வும் பாராமல் ஆசையுள்ள அனைத்து சீடர்களுக்கும் உபதேசம் செய்யும்
காரேய் கருணை நிறைந்தவர். வீராணத்தில் பெய்யும் மழைநீர் எப்படி பல்லாயிரக்கணாக்கான மக்களுக்குப் பயன்படுமோ,
அதுபோல் ராமாநுஜரிடம் உள்ள கருத்துக்கள் அனைத்துப் பாமர மக்களையும் சென்றடையும்.
நாதமுனிகள் யோக சக்தி நிறைந்தவராகையால், ராமாநுஜரின் அவதாரத்துக்கு முன்பே ராமாநுஜரின் பெருமையை அறிந்து
இவ்வாசகத்தைக் கூறியுள்ளார்.
இவ்வாசகத்தைத் தமது சீடரான உய்யக்கொண்டாருக்கும் உபதேசித்தார் நாதமுனிகள்.
"இதன் பொருள் என்ன?" என்று கேட்டார் உய்யக்கொண்டார்.
"நீ உன் சீடர்களுக்கு இதை உபதேசம் செய். புரிய வேண்டிய நேரத்தில், புரிய வேண்டிய நபருக்கு இதன் பொருள் புரியும்!" என்று சொன்னார் நாதமுனிகள். உய்யக்கொண்டார் இதைத் தமது சீடரான மணக்கால் நம்பிக்கு உபதேசித்தார். "இதன் பொருள் என்ன?" என்று மணக்கால் நம்பி கேட்டபோது,
"எனக்குப் பொருள் தெரியாது. எனது குரு சொன்னதை அப்படியே உனக்குச் சொல்லி விட்டேன்.
நீயும் உன் சீடர்களுக்கு இவ்வாசகத்தைச் சொல்!" என்று கூறினார் உய்யக்கொண்டார்.
மணக்கால் நம்பி தமது சீடரான ஆளவந்தாருக்கும், ஆளவந்தார் தமது சீடரான பெரிய நம்பிக்கும் இதை உபதேசித்தார்கள்.
ஆனால் இவ்வாசகத்தின் பொருளைப் பற்றி அவர்கள் ஆராயவில்லை.
பெரிய நம்பி, தமது சீடரான ராமாநுஜருக்கு, "குளப்படியில் மழை பெய்தால் குருவி குடித்துப் போம்.
வீராணத்தில் மழை பெய்தால் நாடெல்லாம் விளையும்!" என்ற இவ்வாசகத்தை உபதேசித்தார்.
"ராமாநுஜா! இதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியாது. எனது குருமார்கள் சொன்னதை உனக்கும் சொன்னேன்!" என்றார் பெரிய நம்பி.
ராமாநுஜரோ, "குருவே அடியேனுக்கு இதன் பொருள் புரிந்து விட்டது!" என்றார்.
"என்ன பொருள்?" என்று கேட்டார் பெரியநம்பி. இவ்வாசகம் தனது பெருமையைச் சொல்வதாக அமைந்துள்ளபடியால்,
அதன் விளக்கத்தைத் தன் வாயால் சொல்ல விரும்பாத ராமாநுஜர்,
"இதைப் பற்றி விளக்கம் தருவதில் நேரம் செலவிடுவதை விட, இந்த வாசகம் கூறும் கட்டளையை உடனடியாக
நிறைவேற்றப் புறப்படுகிறேன்!" என்று சொல்லிவிட்டு, காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரியை நோக்கிப் புறப்பட்டார்.
வீராணம் ஏரியில் எழுபத்து நான்கு மதகுகள் வழியாகத் தண்ணீர் பிரிந்து சென்று நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுவதைக் கண்டார் ராமாநுஜர்.
அவ்வாறே தன்னிடம் உள்ள கருத்துக்களும் எழுபத்து நான்கு சீடர்கள் வழியாகச் சென்று பாமர மக்களை அடையவேண்டும்
என்பது நாதமுனிகளின் கருத்து என்று புரிந்து கொண்டார்.
தனது எழுபத்து நான்கு சீடர்களை சிம்மாசனாதிபதிகளாக நியமித்தார்.
அவர்கள் மூலம் வைணவ சம்பிரதாயம் பரவும்படி வழிவகை செய்தார் ராமாநுஜர்.
அந்த எழுபத்து நால்வருக்கும் நரசிம்ம விக்கிரகங்களை வழங்கிய ராமாநுஜர், நரசிம்ம மந்திரத்தையும் அவர்களுக்கு உபதேசித்தார்.
"நரசிம்மர் எப்போதும் அடியார்களோடு துணையாக நிற்பவர். அந்த நரசிம்மர் உங்கள் எழுபத்து நால்வரோடும் துணைநின்று
இந்தச் சம்பிரதாயத்தை வளர்த்துக் கொடுப்பார்.
உங்களிடம் ஆசையுடன் வரும் அனைத்துச் சீடர்களுக்கும் எந்த ஏற்றத்தாழ்வும் பாராது நீங்கள் நற்கருத்துக்களை உபதேசிக்க வேண்டும்!" என்று
சிம்மாசனாதிபதிகளிடம் கூறினார். இன்றும் ராமாநுஜரால் நியமிக்கப்பட்ட எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளும்
நரசிம்மரின் அருளால் இந்த வைணவ நெறியை வளர்த்து வருகிறார்கள்.
இவ்வாறு எப்போதும் தன் பக்தர்களோடு கூடவே இருந்து அவர்களுக்கு அருள்புரிவதால், நரசிம்மர் 'ஸந்திமான்' என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 204-வது திருநாமம்.
நரசிம்மர் எப்போதும் பக்தர்களோடு இருப்பது போலவே, பக்தர்களும் எப்போதும் அவரோடு இருக்கிறார்கள்.
அதனால் தான், நரசிம்மர் கோயில்களில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம்.
காடு, மலைகளைக் கடந்து அஹோபிலத்திலுள்ள ஒன்பது நரசிம்மர்களைக் காணக் கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வதைக் காணலாம்.
அவ்வாறே சோளிங்கரில் 1300 படிகள் ஏறிப் பெருந்திரளான மக்கள் நரசிம்மரைத் தரிசிக்கச் செல்கிறார்கள்.
"ஸந்திமதே நமஹ" என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எப்போதும் நரசிம்மர் துணையாக நிற்பார்.
No comments:
Post a Comment