பேசும் தெய்வம் 3ம் பாகம் J K SIVAN
மஹா பெரியவா தமிழ் ஆர்வம்
வெள்ளைக்காரன் அழையாத விருந்தாளியாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த கதையாக கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை ஆக்கிரமித்து, அதிகாரம் கைக்குள் கொண்டு வந்து நம்மையே அடிமைகளாக ஆட்டிவைத்தபோது நாம் பட்ட நஷ்டங்கள் இன்னும் ஈடு செய்யப்படாதவை.
நமது தமிழ் மொழியில் பல நூற்றாண்டுகளாக சில அளவுகள் வழக்கத்தில் இருந்தது. அது ஒரு தமிழ் பாட்டை படித்து கொஞ்சம் அறிவோம். மஹா பெரியவா அளித்த விளக்கம் மூலம்.
மஹா பெரியவா எதையும் விட்டு வைப்பதில்லை. அவருடைய சாஸ்திர விஷய ஞானத்துக்கு அளவே இல்லை. மஹா சமுத்திரம் அவர். அவருக்கு இந்த தமிழ் பாட்டும் நன்றாக தெரிந்து அர்த்தம் தெரியும்.
காஞ்சி மடத்திலேயோ அல்லது வேறு எங்கேயோ தமிழ் பேரறிஞரும் , தமிழ் தாத்தா உ.வே. சாமி நாதையர் சிஷ்யனுமான ஸ்ரீ கி.வா. ஜெகநாதன் மகா பெரியவாளை சந்திக்கிறார். தமிழ் பற்றி பேச்சு செல்கிறது.
' கி. வா. ஜ. அது சரி தமிழ் என்றால் என்ன?" என்று பெரியவா கேட்கிறார்.
கி. வா. ஜ . ஒரு வினாடி அமைதியாக கையை கட்டிக்கொண்டு பெரியவாளை பார்க்கிறார். பெரியவா தொடர்கிறார்.
"சமஸ்கிருதம் என்றால், செம்மையான, அழகாக , பண்பட்ட, பண்ணப்பட்ட, மொழி என்று அர்த்தம். தமிழ் என்று எப்படி அந்த மொழிக்கு பெயர் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா. தெரிந்தால் சொல்லுங்களேன் ?'' என்கிறார் பெரியவா.
''பெரியவாளே சொன்னால் புரிந்து கொள்கி றேன், தெரிந்து கொள்கிறேன்!"
'' எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து 'ழ' இந்த சிறப்பான '' ழ'' சம்பந்த பட்ட எந்த வார்த்தையும் அழகானது, இனிமையானது.
அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதாகவே அவை இருக்கும். உதாரணமாக மழலை, குழல், அழகு , குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி 'ழ' வருகிற எல்லாமே எவ்வளவு அற்புதமான வார்த்தைகள். நமக்கு பிடித்த சமாச்சாரங்கள் . ஆகவே இனிமையான 'ழ'வைத் ''தம்மிடத்தில்'' வைத்துக் கொண்டது தமிழ். ''தம்+ ழ்'' -- இப்படி சொல்லலாமில்லையா? என்று குழந்தை போல் கேட்டார் பெரியவா.
"பெரியவா, யாராலும் இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியாது. இனி எல்லா மேடைகளிலும் நான் இதை எடுத்துச் சொல்லுவேன்!" -- கி. வா. ஜ.
சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ஒரு பாடல் "யாமா மாநீ யாமா மா" என்ற மாற்றுமாலைப் பதிகம் . பல்லை உடைக்கும் சொல் கட்டு. அர்த்தம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பதம் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்தி அர்த்தம் சொன்னபோது கி.வா. ஜ. சிலையாக நின்றார். கூடியிருந்த அநேக வித்வான்கள் பெரியவா விளக்கத்தை கேட்டதும் பிரமித்துப் போனார்கள்.
பெரியவா உற்சாகமாக தொடர்ந்து பேசினார்:
''இது மாதிரி காளமேகம் என்கிற ஒரு புலவர் கூட பாடி இருக்கிறார் தெரியுமா?
'' முக்கால், அரை,கால், அரைக்கால், இருமா ,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்து கொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதினது. உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டு விட்டு சுற்று முற்றும் பார்க்கிறார். எல்லோரும் பேசாமல் இருக்க பெரியவா தானாகவே அதை ஒப்பிக்கிறார்:
''முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது....''
இதுக்கு அர்த்தம் : "முக்கால்னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூணாவது காலாகப் பயன்படுத்துகிறோமே.....அந்த நிலை வருவதற்குள், '''' முன்னரையில் வீழாமுன்: ...நரை வருவதற்கு முன்னாலேயே '' விக்கலும் இருமலும் வருவதற்கு முன்..''.யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்.....
'' ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்...காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!"
எவ்வளவு அழகா காளமேகம் எழுதி இருக்கார் பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்து ஒரு அற்புதமான ஸ்துதி பண்ணி இருக்காரே'' என்று சொல்லி மகிழ்ந்தார்.
எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளுவார் மஹா பெரியவா. அவர் சொல்லி காதாலே கேட்டவர்கள் பாக்யசாலிகள்.
No comments:
Post a Comment