ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம்
அத்தியாயம் 36
ஒரு சமயம் அரிஷ்டன் என்ற அசுரன் காளை வடிவம் கொண்டு கோகுலத்தில் புகுந்து கொழுத்த திமிலுடன் கூடிய பெரிய உருவத்துடன் எல்லோரையும் நடுங்கச் செய்தான். எதிர்த்து வருகின்ற அவ்வசுரனை க்ருஷ்ணன் கொம்புகளால் பிடித்து பூமியில் தள்ளி காலால் மிதித்துக் கொன்றார்.இவ்வாறு அரிஷ்டாசுரன் கண்ணனால் கொல்லப்பட்டபின் நாரதர் கம்சனிடம் வந்து க்ருஷ்ணனே தேவகியின் எட்டாவது பிள்ளை என்ற உண்மையைக் கூறினார். (அதாவது கம்ச வதத்திற்கான காலம் வந்துவிட்டது என்பதை உணர்த்த)
அதைக் கேட்ட கம்சன் வசுதேவரைக் கொல்ல முயற்சிக்கையில் நாரதரால் தடுக்கப் பட்டான். பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தேவகியையும் வசுதேவரையும் மீண்டும் சங்கிலியால் கட்டினான் . அதன் பின் கேசி என்பவனைக் கூப்பிட்டு கருஷ்ணனையும் பலராமனையும் கொல்லும்படி ஏவினான்.
ஆனாலும் கேசியாலும் ஒருவேளை கண்ணனைக் கொல்லமுடியாமல் போனால் அதற்கும் வழி தேடுவான் போல் முஷ்டிகன் சாணூரன் என்ற மல்லர்களை அழைத்து க்ருஷ்ணனும் பலராமனும் மதுரைக்கு கொண்டுவரப்பட்டபோது அவர்களை ,மல்யுத்தத்தில் கொல்லும்படி கூறி கண்ணன் பலராமனுடன் நந்தகோபர் முதலியவர்களையும் மதுரைக்கு வரும்படி செய்யும் திட்டத்துடன் தனுர்யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தான்.
பிறகு அக்ரூரரை அழைத்து கோகுலத்திற்குப் போய் அவர்களை தனுர்யாகத்திற்கு அழைக்கும்படி கூறினான். அவன் திட்டம் என்னவென்றால், வசுதேவர் உட்பட எல்லோரையும் கொன்றுவிட்டு ஜராசந்தன் , நரகன் , பாணன் , சம்பரன் முதலிய அதர்ம வழி செல்லும் நண்பர்களுடன் எதிரிகள் இன்றி ஆளுவதேயாகும்.
அதை அறிந்த அக்ரூரர் , விதிப்படியே எல்லாம் நடக்கும் என்ற எண்ணத்தில் கோகுலம் செல்பவதாகக் கூறினார்.
அத்தியாயம் 37
இதற்கிடையில் கேசி பெரிய குதிரை வடிவு கொண்டு கோகுலத்திற்கு வந்தான். எல்லோரையும் பயமுறுத்தும் அவன் முன் க்ருஷ்ணன் நின்று எதிர்த்தார்,. பிறகு அவன் வாயில் பாம்பு நுழைவது போல் தன் இடக்கையை விட்டார். அப்படி விட்டதும் பெருக்க ஆரம்பித்த அந்தக் கையினால் சுவாசம் அடைபட்டு அவன் உயிர் துறந்தான்.
அப்போது நாரதர் யாரும் காணாமல் கண்ணனிடம் வந்து பின்னர் மதுரையில் நடக்கப்போகும் அனைத்தையும் கூறி அதன் பின் யவனன், நரகன் முதலியவர்களையும் அழித்து தேவலோகத்திலிருந்து பாரிஜாத மரத்தைக் கொண்டுவரப்போவதையும் கூறி க்ருஷ்ணனைத் துதித்தார்.
அவர் கூறியது,
விசுத்த விஞ்ஞாந கனம் ஸ்வ ஸம்ஸ்தயா
ஸமாப்தஸர்வார்த்தம் அமோகவாஞ்சிதம்
ஸ்வதேஜஸா நித்யநிவ்ருத்தமாயா
குணப்ரவாஹம் பகவ்ந்தம் ஈமஹி(பா. 37.23)
நிர்மலமான ஞானஸ்வரூபியும் நிலைபெற்ற ஆத்மானுபவத்தால் அனைத்தையுமடைந்தவரும் ஸத்ய ஸங்கல்பம் உடையவரும் ஸ்வபாவதேஜஸ்ஸால் எப்போதும் மாயையை கடந்து நிற்பவரும் பகவானுமாகிய உம்மைச் சரணமடைகிறேன். "
இவ்வாறு கூறி கண்ணனை வணங்கி அவரிடம் விடைபெற்று நாரதர் திரும்பிச் சென்றார்.
அடுத்து அக்ரூரர் கோகுலம் வருகை.
No comments:
Post a Comment