Tuesday, February 18, 2020

Srimad Bhagavatam skanda 10 adhyaya 34 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம்- தசமஸ்கந்தம்

அத்தியாய ம் 34

ஒரு சமயம் நந்தரும் மற்றவர்களும் அம்பிகையை உபாசிக்க அம்பிகா கானனம் சென்றனர். அங்கு பூஜையை முடித்து பொருள், வஸ்திரம் ,உணவு இவைகளை அந்தணர்களுக்கு தானம் செய்து அன்றிரவு அங்கேயே தங்கினர். அப்போது ஒரு மலைப் பாம்பு நந்தரை விழுங்க ஆரம்பித்தது. கோபர்கள் அதைக் கல்லால் அடித்தும் நெருப்பு கொண்டு எரிக்கபார்த்தும் அது அசையவே இல்லை . நந்தர் க்ருஷ்ணனை நோக்கி கூக்குரலிட அங்கு கண்ணன் வந்து அதைக் காலால் தொட அது ஒரு வித்யாதரனாக மாறியது.

தான் செல்வத்தினால் மதம் கொண்டு ரிஷிகளை அவமதித்ததாகவும் அங்கிரஸ் முனிவரால் சபிக்கப்பட்டு மலைப் பாம்பாக மாறியதாகவும் பகவானின் பாதஸ்பரிசத்தால் சாபம் நீங்கியதாகவும் அதனால் அந்த சாபமே தனக்கு வரமாக அமைந்தது என்றும் கூறினான்.

பிறிதொரு சமயம் பலராமனும் கண்ணனும் கோபியருடன் இருக்கையில் குபேரனின் பணியாளனான சங்க சூடன் பெண்களைக் கவர்ந்தான். அப்போது க்ருஷ்ணன் அவனைத் துரத்திச் சென்று அவனைக் கொன்று அவன் முடியில் இருந்த ரத்தினத்தை பலராமனிடம் கொடுத்தார்.

அத்தியாயம் 35.

கோப்ய: க்ருஷ்ணே வன்ம யாதே தமனுத்ருத சேதஸ:
க்ருஷ்ண லீலா: ப்ரகாய்ந்த்ய: நின்யு: து:கேன வாஸரான்
க்ருஷ்ணன் காட்டிற்குச் செல்லும்போதெல்லாம் கோபியர் அவன் பிரிவால் வருந்தி அவன் லீலைகளைப் பாடிக்கொண்டே பகள் பொழுதைக் கழித்தனர் . இது கோபிகா யுகள கீதம் எனப்படுகிறது.

இதன் சாராம்சம் என்னவென்றால் ,
க்ருஷ்ணன் குழலூதுகையில், அவனுடைய இடது கன்னம் இடது தோளுடன் சேர அவனுடைய புருவம் அழகாக அசைய அப்சர ஸ்த்ரீகள் அதில மயங்கி தங்கள் ஆடை நழுவுவதைக் கூட கவனியாமல் மேலே நின்றனராம்.

இதையே பெரியாழ்வாரும் கூறுகிறார் –
'இடவணரை இடத்தோளொடு சாய்த்து இருகை கூட புருவம் நெறிந்தேற' என்று.

'ப்ருந்தசோ வ்ரஜவ்ருஷா ம்ருக காவோ வேணு வாத்யஹ்ருதசேதஸஆராத்
தந்த தஷ்ட கவளா த்ருதகர்ணா நித்ரிதாலிகித சித்ரமிவாஸன் ' (பா. 35.5)

குழல் இசையில் மயங்கி காளைகளும் மான்களும் பசுக்களும் புல்மேய்வதை மறந்து மேய்ந்த புல் கடைவாயில் நிற்க , செவியாட்டல மறந்து எழுதிய சித்திரங்கள் போல நின்றனவாம்.

'கோவிந்தன் குழல் கொடூதினபோது கறவையின் கணங்கள்
கால் பரப்பிட்டு கவிழ்ந்திறங்கி செவியாட்ட கில்லாவே', (பெரியாழ்வார் திருமொழி-3.6.8)
'மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும்
கடைவாய் வழி சோர---எழுது சித்திரங்கள் போல நின்றனவே (பெரியாழ்வார் திருமொழி-3.6.9)

'வனலதாஸ்தரவ ஆத்மனி விஷ்ணும் வ்யஞ்சயந்த்ய இவபுஷ்பபலாட்யா:
ப்ரணதபார விடபா மதுதாரா: ப்ரேமஹ்ருஷ்ட தனவ:ஸஸ்ருஜு: ஸ்ம'( பா. 35.9)

காட்டிலுள்ள செடிகளும் கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கும் காய்கள் பழங்கள் இவைகளின் சுமையால் தலை குனிந்து உள்ளிருக்கும் பகவானை வணங்குவது போல் நின்று ப்ரேமை மேலிட்டு தேனை தாரையாகப் பொழிந்தன.

'மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்' ( (பெரியாழ்வார் திருமொழி-3.6.10)

அவருடைய துலசி மாலையை சுற்றி ரீங்கரிக்கும் வண்டுகள் குழலிசையை அனுசரிப்பது போல் உள்ளன. ஓடையில் உள்ள பக்ஷிகளும் அன்னங்களும் கண்மூடி அவரை த்யானிப்பதுபோல் இருந்தன.

அவர்மேல் கவிந்த நீருண்ட மேகங்கள் குடை பிடிப்பது போல ம நின்று மலர் சொரிவதைப் போல சிறு நீர்த்துளிகளைப் பொழிந்தன. இடி கூட வேணு நாதத்திற்கு இசைந்தாற்போல மெல்ல சப்தித்தன.

கண்ணனின் வேணுகானம் கேட்டு இ ந்திரன் சிவன் ப்ரும்மா இவர்களும் மயங்கினர். என்று இப்படி பலவாறாக யசோதையிடம் கண்ண்னைப் புகழ்ந்தனர். அப்போது கண்ணன் குழலூதிக் கொண்டே வருவதைக் கண்டவர் வெப்பத்தால் பகல் முழுவதும் வருந்தினோர்க்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் சந்திரன் எனக் கருதினர்.

சுகர் கூறினார்.
ஏவம் வ்ரஜஸ்த்ரியோ ராஜன் க்ருஷ்ணலீலானுகாயதீ:
ரேமிரே அஹஸ்ஸு தச்சித்தா தன்மனஸ்கா மஹோதயா:
"அரசே, கோபிகள் தினமும் பகலில் தங்கள் ப்ராணபதியான க்ருஷ்னனின் லீலைகளை இவ்வாறு பாடிப் பாடி அவரையே சித்தத்தில் கொண்டு பேரின்பம் பெற்றனர்.
.
இதோடு ப்ருந்தாவன லீலை முடிவுற்றது. அடுத்து அக்ரூரர் வருகையும் கண்ணன் மதுரை செல்வதும் காணலாம்.

No comments:

Post a Comment