Monday, February 3, 2020

Srimad Bhagavatam skanda 10 adhyaya 29 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம்- தசகம் 10

அத்தியாயம் 29

அத்தியாயம் 29
சரத்ருதுவில் மலர்ந்த மல்லிகைகளுடன் கூடிய இரவுகளில் பகவான் யோக மாயையின் உதவியால் லீலை புரிய எண்ணினார். கிருஷ்ணனின் வேனூகானத்தைக் கேட்டு கோபியர் தாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை அப்படியே பாதியில் விட்டு அங்கு வந்தனர். வீட்டினுள் அகப்பட்டு வெளியே வர இயலாத கோபியர் கிருஷ்ணனையே த்யானித்து அந்த ஆனந்தத்தால் கர்ம வினை நீங்கப்பெற்றனர்.

பரீக்ஷித் வினவினார்,
"கிருஷ்ணனிடம் காதல் கொண்ட பெண்கள் அவரை ப்ரப்ரம்மமாகக் காணவில்லையே. அப்படி இருக்க அவர்கள் எவ்வாறு கர்ம வினை நீங்கப் பெற்றனர்?'

சுகர் பதிலுரைத்தார்.
"சிசுபாலனைப்போல விரோதம் கொண்டதனாலேயே நற்கதி அடையபெற்றால் அவனிடம் அன்பு கொண்டவரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ!

கோபியரைப்போல ப்ரேமை, சிசுபாலனைப் போல பகை , கம்சனைப் போல பயம், யசோதையைப் போல புத்ரவாத்சல்யம், பாண்டவர்களைப் போல உறவு, நாரதர் முதலியவரைப் போல பக்தி, இவற்றில் எதையாவது ஒன்றை நிலையாக பகவானிடம் வைப்பவர்கள் அவனுடன் இரண்டறக் கலத்தலை அடைகிறார்கள்."

தன்னருகில் வந்த கோபியரிடம் பகவான் அவர்கள் நோக்கத்தை அறியாதவர் போலக் கூறினார்-
"உங்கள் வரவு நல்வரவாகுக. கோகுலத்தில் எல்லோரும் க்ஷேமம்தானே ? நீங்கள் இங்கு வரக் காரணம் என்ன? கொடிய மிருகங்கள் சஞ்சரிக்கும் இந்தக்காட்டில் நீங்கள் இருப்பது தகாது .வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்."

பெண்களுக்கு கணவனுக்கும் அவரைச் சேர்ந்தவர்க்கும் பணிவிடை செய்வதுதான் கடமையாகும். ச்ரவணத்தாலும், தர்சனத்தாலும், தியானத்தாலும்,கீர்த்தனத்தாலும் என்னிடம் பக்தி உண்டாவது போல என் பக்கம் நெருங்குவதால் உண்டாவதில்லை. ஆகவே திரும்பிச் செல்லுங்கள். "

இதற்கு அவர்கள் அளித்த பதில் கண்ணனை புன்முறுவல் பூக்க வைத்தது. அவர்கள் கூறியது,

" எல்லாவற்றையும் துறந்து உமது பாத மூலம் அடைந்தோம் . எங்களைக் கைவிடுதல் தகாது. உடல் படைத்த உயிர்களுக்கெல்லாம் பிரியமிக்க பந்துவான உமக்கு சேவை செய்வது மற்ற எல்லோருக்கும் செய்வதற்கொப்பானதே. உம்மால் கவரப்பட்ட மனமும் உடலும் எங்கள் வசம் இல்லை. ஆதலால் ஓரடிகூட எடுத்துவைக்க இயலாமல் இருக்கிறோம். நாங்கள் எங்ஙனம் கோகுலம் செல்வோம்!"

யோகேஸ்வரனான கிருஷ்ணன் அவர்களிடம் கருணை கொண்டு மனமிரங்கி அவர்களோடு ராசலீலை செய்யத் தொடங்கினார். அப்போது கோபியருடன் நக்ஷத்திரங்கள் சூழ விளங்கும் சந்திரன் போலத் தோன்றினார் . தங்கள் விருப்பம் நிறைவேறியதால் தாங்களே பாக்கியசாலிகள் என்று கர்வம் கொண்டனர். கோபியரின் தற்பெருமையையும் கர்வத்தையும் கண்டு பகவான் அவர்களிடம் இருந்து மறைந்தார்.

இதன் சாராம்சம்
கடமைகளை எல்லாம் செய்யச் சொல்பவனே அவைகளை உதறிவிட்டு அவனை நாடும்படி செய்கிறான். (ஸர்வதர்மான் ப்ரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ). கோபியரே ஜீவர்கள். கல்லும் முள்ளும் இருளும் நிறைந்த காடு என்பது சம்சாரம். இதில் அவனைக் காணும் இச்சையைத் தோற்றுவித்துப் பின் மறைந்து விடுகிறான். அவனைக் காணாது தவிக்கும்போது நம் பாவம் தேய்கிறது. கண்டுவிட்டால் புண்ணியமும் தேயும் . அதுவே முக்தி.

( கண்ணனின்மாயையால் கோபியர் வீட்டில உள்ளதுபோலவே மற்றவர் உணர்ந்தனர் என்று சுகர் பின்னொரு அத்தியாயத்தில் கூறுகிறார்.

No comments:

Post a Comment