Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் - ராசக்ரீடை-உட்பொருள்
பாகவதம் சொல்கிறது, கோபியர் கிருஷ்ணனைத் தேடி இரவில் யமுனைக்கரைக்குப் போகின்றபோது அவரவர் வீட்டில் அவர்கள் இருக்கின்றது போலவே தோன்றிற்று. அதாவது அவர்கள் யோக சரீரம் அங்கே சென்றது.
தண்டகாரண்ய ரிஷிகள் தான் கோபியராக உருவெடுத்தனர் என்று ஒரு கொள்கை உள்ளது. அவர்கள் ராமன் அழகில் மயங்கினர் அவனைத்தழுவ ஆசை கொண்டனர். அடுத்த பிறவியில் உங்கள் ஆசையை நிறைவேற்றுவேன் என்று ராமன் கூறினான் என்பது ஓரிடத்தில் காணப் படுகிறது.
நிற்க, ராஸக்ரீடையின் உள்ளர்த்தத்தை இப்போது பார்க்கலாம்.
நம் மனதில் ஆயிரம் எண்ணங்கள். அவை எல்லாம் இறைவனைக் குறித்தே இருக்குமே ஆனால் நம் மனதில் நடப்பது ராசக்ரீடை. ஒவ்வொரு எண்ணமும் ஒரு கோபி. எல்லாம் கண்ணனைப் பற்றியே. அதனால் அவைகளின் நாடு நாயகமாய் இருப்பது அவனே. ஒவ்வொரு எண்ணமும் கண்ணனையே பற்றி நிற்பதால் ஒவ்வொரு கோபியின் இடையில் ஒரு கண்ணன். லீலாசுகர் சொல்கிற மாதிரி, 'அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவோ ---' அப்போது எழுவது இனிமையான் குழலோசை 'ஸந்ஜகௌ வேணுனா தேவகி நந்தன:'
இதைப்பற்றி என் சிந்தனையில் உதித்தஸ்லோகம்,
एकैकमनोरथे माधवे विषयंभूते यदि
भवति तत् रासलीलागोपीकृष्णसहस्रैः|
मनोरथानां गोपिकानां वल्लभो नारायणः
तेषां समाहतिरेव राधा सा हरिवल्लभा
ஏகைக மநோரதே மாதவே விஷ்யம்பூதே யதி
பவதி தத் ராஸலீலா கோபீ கிருஷ்ண சஹஸ்ரை:
மனோரதானாம் கோபிகானாம் வல்லபோ நாராயண:
தேஷாம் சமாஹதிரேவ ராதா ஸா ஹரிவல்லபா
ஏகைக மனோரதே – ஒவ்வொரு எண்ணமும்
மாதவே – மாதவனை
விஷயம்பூதே ஸதி- பற்றியே இருக்குமானால்
தத் – அது
கோபீக்ருஷ்ண ஸஹஸ்ரை : - பல கோபிகளும் பல கிருஷ்ணர்களும் ஆனா ராஸலீலா- ராசக்ரீடை பவதி – ஆகிறது.
மனோரதானாம் – எண்ணங்கள் என்கிற கோபிகானாம் – கோபிகைகளுடைய
வல்லப:- பிரியன்
நாராயண: - நாராயணன் ஆன கண்ணன்.
தேஷாம் – அவைகளுடைய
சமாஹதி: ஏவ- ஒருமைப்பாடுதான்
ராதா- ராதை
ஸா – அவள்
ஹரிவல்லபா-ஹரிக்குப் பிரியமானவள்.
எவ்வாறு சிறிய மீன்களை பெரிய மீன் விழுங்குகிறதோ , எவ்வாறு சிறிய அலைகள் பெரிய அலையுடன் கல்க்கின்றனவோ அவ்வாறு எல்லா எண்ணங்களும் சேர்ந்து அவனை அடையும் ஒரே எண்ணமாய் மாறுகிறதோ அதுதான் ராதை. ஜீவாத்மா பரமாத்ம சங்கமம்தான் ராதாக்ருஷ்ண தத்துவம்.
முனிவர்கள் எல்லா உயிர்களும் பகவானுடன் கைகோர்த்து உள்ளன என்று கருதுகிறார்கள். இதையே பகவான் கீதையில்,
மத்த: பரதரம் ந அன்யத் கிம்சித் அஸ்தி தன்ஞ்சய
மயி சர்வம் இதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ (ப.கீ. 7.7)
'அர்ஜுனா, என்னிலும் வேறான மற்றைய பொருள் இல்லை .இவ்வுலகனைத்தும் நூலில் மணிகளைப் போல என்னில் கோக்கப்பட்டுள்ளன ,' என்று கூறுகிறார்.
அவ்வாறு பார்க்கின் இந்த உலகமே ப்ருந்தாவனம். அதில் பகவானுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி, அம்ஹாரம் என்னும் லீலையே ராஸக்ரீடை,
பாகவதபுராணம் பகவானின் சரீரம் எனப்படுகிறது. அதில் ராஸ்க்ரீடையை சித்தரிக்கும் ஐந்து அத்தியாயங்கள் ப்ராணஸ்தானமாகக் கருதப்படுகிறது.
அடுத்து ராசக்ரீடையை அநுபவிப்போம்
No comments:
Post a Comment