சித்தர்கள் மஹான்கள் J K SIVAN
அழுகணி சித்தர்
இவரைத் தெரியுமா?
''இவன் அழுகுணி அடிக்கிறான். இவனை ஆட்டத்தில் சேர்த்துக்காதேடா. '' அரசியலில் அழுகுணி ஆட்கள் நிறையவே உண்டு. இருந்தாலும் யாரோ ஒரு சித்தர் அழுகுணி ஆசாமி என்றால் கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை வேறு யாரோ சிலர் பாடல்களை தனது என்று அழுகுணி அடித்திருப்பாரோ என்று சந்தேகம் வந்தால் அது ரொம்ப தப்பு. பாவம் அந்த சித்தர். அவர் பெயர் அழகு அணிச் சித்தர். அதை அக்ரம மாக அழுகுணி ஆக்கி விட்டோம்.
இவர் பாடல்களில் விசித்திரம் என்ன தெரியுமா? ஒரு வார்த்தைக்கு முற்றிலும் வேறே அர்த்தம் கொண்ட ரெண்டு பொருள் வரும்படியாக எழுதுவது. உதாரணமாக பணம் வேண்டுமென்றால், பலரிடம் கைகட்டி தலையை சொரிந்துகொண்டு, பல்லி ளித்து கெஞ்ச வேண்டி இருக்கிறது. இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை பிரார்த்திக்கும் பாடல்.
இவருக்கு அப்பா அம்மா வைத்த பெயர் வழக்கம் போல் நமக்கு தெரியாமல் போய்விட்டது. இவர் எழுதிய எளிய நடை பாடல்கள் அணி ரொம்ப அழகாக அமைந்திருக்கும் என்பதால் இந்த சித்தருக்கு அழகு அணி சித்தர் என்று பெயர் வந்தது. யோகம் ஞானம் பற்றிய கருத்துக்கள் அபாரம்.
அர்த்தம் புரியாவிட்டாலும் ரயில் வண்டி தண்டவாளத்தில் ஓடுவது போல் சீராக சந்தம் அமைந்திருப்பதால் படிப்பவனுக்கு குஷி.
மாதிரிக்கு ''ஒன்று சொல்கிறேன்.
''ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா!
உன் பாதஞ் சேரேனோ''..
''அடியே, கண்ணம்மா, உனக்கு புரியும்படி சொல்கிறேன் கேள். இந்த மண் பானையை பாத்தாயா, எப்போது வேண்டுமானாலும் அழியும், அதற்கு முன் விரியும், உடையும், தண்ணீர் கசியும், ஆயிரம் தொந்தரவு கொடுக்கும், உப்பு கொட்டி வைத்தி ருந்த பாத்த்ரம் உப்பு கரைந்து போய் விட்டது. இதை எப்படி வேறே பாத்திரமாக மாற்றுவது என்ற வித்தை தெரியவில்லையடி. நீ சொல்லிக்கொடுத்து எனக்கு அது தெரிந்தால் எப்போதோ இந்த உப்பு கசியும் பாத்திரத்தை விட்டு உன்னை கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பேனே.
இதற்கு வேறு அர்த்தம் - நமது உடல் பசி பிணி, மூப்பு, திரை, வியாதி, காம க்ரோதம் கர்வம், அகம்பாவம் பொறாமை என்று கெட்ட விஷயங்கள் நிறைந்த அழுகி மடியும் தன்மைகொண்டது. அதனுள் ஜீவாதாரமாக இருக்கும் ஆன்மா பற்றி அறியவில்லையே. அதை அறிந்து கொண்டால் இந்த இறப்பு பிறப்பு வியாதி நீங்கி எப்போதோ உன் திருவடியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருப் பேனே'' என்று சரணாகதி லக்ஷணத்தை எளிமையாக அறிவிக்கும் அற்புத பாடல்.
இன்னொரு பாடல் சொல்லி நிறுத்திக் கொள்கி றேன்.
புல்லரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ
''என்ன வாழ்க்கை இது, ஹே, கிருஷ்ணம்மா. பொழுது விடிந்தால் பட்டினி வயிற்றோடு உலகிலேயே முக்கியமான அயோக்கியர்களை தேடி வாசலில் காத்திருந்து உள்ளே சென்று அவர்களை போல் உலகில் நல்லவர்களே இல்லை என்று பொய் , புறம், கூறி பல்லை இளித்து நாலு காசு சம்பாத்திக்க எங்கே அவர்கள் கிடைப்பார்கள் என்று பரக்க பரக்க விழிக்கிறேனே. இப்படி வாழும் வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலை கொடடி. மானத்தை மரியாதை, எல்லாம் விட்டு எண் சாண் உடலை குறுக்கி காசுக் காக கையேந்தி பல்லைக் காட்டி பரக்கப் பரக்க விழிக்கும் நிலையிலிருந்து உன்னை நினைக்கும் படி செய். வேண்டுதல் வேண்டாமை வேண்டும் . அதை எனக்கு அருள்வாயாக. அவர்களிடம் போகாமல் உன்னிடம் வந்த எனக்கு பொருளுக்கு பதிலாக அருளைத் தரவேண்டும் என்று சத்தியை வேண்டுகிறார்''
சித்தர் எப்படி?. இன்னும் படிக்கலாமா?
No comments:
Post a Comment