Friday, January 24, 2020

Will you come to my house Radha?

சூர் சாகரம் சூர் தாஸ் J K SIVAN

''அன்று கண்டதும் அதே நிலா.''..

இந்த உலகத்தில் அப்பப்பா, எத்தனையோ கோடி பேர் எத்தனையோ காலமாக பிறக்கிறோம். இதில் ஒருவராவது நான் இன்னாருக்கு பிறக்கவேண்டும் என்று தீர்மானித்து மற்றொருருவருக்கு பிள்ளையாக, பெண்ணாக பிறக்க முடியுமா? எங்கோ ஒரு இடத்தில், நேரத்தில், வழியில் பார்த்து, பிடித்து, சேர்ந்து கொண்டு குடும்பமாகிறோம். சிலது எலியும் பூனையும். சிலது ஜோடி கிளிகள். அதது அவரவர் கொடுத்து வைத்தது. அதிர்ஷ்டம். பாக்யம். கிளிகளை பார்த்து எலி-பூனை ஜோடிகள் பொறாமைப் படும். படட்டும். அது அது வந்த வழி பலன் அது அதற்கு .

கிருஷ்ணனை ராதை பார்த்தாள். ராதையை கிருஷ்ணன் பார்த்தானா? யாரை யார் முதலில் பார்த்து விரும்பியது... அண்ணலும் நோக்கினான். இதயங்கள் ஒன்றில் மற்றொன்று இடம் பிடித்தது.... இது ஏற்கனவே இருந்த தெய்வீக உறவு. வைகுண்ட உறவு . வ்ரஜ பூமியில் தொடரக்கூடாதா? கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடியது. எத்தனையோ பக்கங்கள் பாராக்கள், பேசியது. அத்தனையிலும் அடிநாதம் பிரேமை. உணர்வு ஒன்றாக கலந்த பின்னர் வார்த்தைக்கு அங்கே என்ன வேலை?

எந்தெந்த ஜென்மத்தில் என்னவாய் இருந்தோம். என்னென்ன பேசினோம். என்னென்ன பரிமாறிக் கொண்டோம் ??

பிறவிகள் அடுத்து அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக கூட்ஸ் வண்டியை போல் வரிசையாக வருகிறதே. நான் சின்ன வயசில் கூட்ஸ் வண்டி யை கோடம்பாக்கம் சூளைமேடு வீட்டில் இருந்தே முதன் முதலாக. என் வீட்டுக்கும் ரயில்வே பாதைக்கும் அரைமைல் தூரமாக வாவது இருக்கும். நடுவே வீடுகள் கிடையாது. நடுவே வயல்கள் , பனை மரங்கள், அங்கே ஒன்று இங்கே ஒன்று என சில சிறிய தனித்தனி கலர் வீடுகள். ஆகவே ரயிலை வீட்டிலிருந்தே அது கத்திக்கொண்டு ஓடுவதை பார்க்க முடிந்தது. இப்போது ஐந்து அடி தூரத்தில் இருக்கும் எதையும் கூட பார்க்க முடியாத அளவு கான்க்ரீட் வீடுகள், கூடுகள்.
அப்போதெல்லாம் கூட்ஸ் வண்டியின் வித வித வர்ண உருவ பெட்டிகளை எண்ணுவேன். நூற்றுக்கும் மேலே கூட போகும். மெதுவாக ஊர்வது ஒரு மரவட்டை நேராக நகர்வது போல் இருக்கும். பாம்பும் பூரானும் வளைந்து வளைந்து ஓடும். மழைக்காலத்தில் வீட்டு சுவர்களில் வாசலில், கொல்லைப்புறத்தில் தரையில், மரவட்டைகள் நூறு கால்களோடு நேராக சீராக நகர்வது ஒரு தனி அழகு.

ஒவ்வொருவர் மனத்திலும் தமது முன் ஜென்மத்தின் தொடர்புகள் அலை அலையாக முடிவின்றி எழுப்புவதை ராதையும் ரசித்தாள் கண்ணனும் சிரித்து தலையாட்டினான். மனம் பேசியது. மனங்கள் என்று நான் சொல்லவில்லை. ரெண்டும் தான் ஒன்றாகிவிட்டதே. பன்மை ஒருமையாகியது.

'' ராதா, வா, என் வீட்டிற்கு ''
'' உன் வீடு எங்கே என்று சொல்லாமல் வா என்றால் எப்படி வருவது ?''
''உனக்கு தான் எல்லாமே தெரியுமே என்று நான் சொல்லவில்லை. இந்த பிருந்தாவனத்தில் நந்தகோபன் வீடு என்று யாரை வேண்டு மானாலும் கேள்.. நேராக உன்னை என்னிடம் தான் கொண்டு வந்து விடுவார்கள்.''
''அவ்வளவு பெரிய ஆளா நீ? உன் பேர் என்ன ?
''கிருஷ்ணன் கண்ணன்,முகுந்தன், என்று ஏதேதோ பெயரில் கூப்பிடுவார்கள். யார் எந்த பேர் சொல்லி கூப்பிட்டாலும் நான் வருவேனே''
''ஓ சரி ''
''நீ எங்கே இருக்கிறாய் என்று சொல்லவில்லையே ராதா?
''ரொம்ப தூரத்தில் இருக்கிறேன்...''
'''உன் வீடு எங்கோ தூர இருக்கிறது என்று சொல்கிறாய். உன் ஊர் சப்தம் இங்கே கேட்கிறதே?'' என்றான் கிருஷ்ணன்
''கேட்கும், கேட்கும்... நீ மனது வைத்தால் எங்கெங்கோ யார் யாரோ பேசுவது, உன்னை கூப்பிடுவது கூட இங்கேயே உனக்கு கேட்கும் என்று எனக்கும் தெரியும் ''.
''நீ என் வீட்டுக்கு வருவாயா? உன் அப்பா யார்? அவர் பெயர் என்ன ராதா?'
''விருஷபானு -எங்கள் ஊரிலும் எல்லோருக்கும் அவரை தெரியும்.''
''ஓ, அப்படியென்றால் அவ்வளவு பெரிய மனிதர் பெயரில் நீ சத்தியம் செய், என்னை பார்க்க என் வீட்டுக்கு வருவேன் என்று ''
''அவர் பெயரில் சத்தியம் செய்யாமல் உன் தலையில் அடித்தே சத்தியம் செயகிறேனே. வருகிறேன் உன் வீட்டுக்கு, போதுமா '
''காலையிலும் வரவேண்டும். தினமும் மாலையிலும் வருகிறாயா''
''அப்படியென்றால் மத்தியானத்தில் வரக்கூடாதா கிருஷ்ணா ?'
மரங்களில் பக்ஷிகள், விலங்குகள், யமுனை நதியின் நீரோட்டம், காற்று, மலர்கள் எல்லாமே குலுங்கி குலுங்கி சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி பிரவாகமாக ஓடியது.
சூர்தாஸ் கண்ணின்றி மனதுக்குள் இந்த காட்சியை கண்டு, ரசித்து ஆடினார் பாடினார்.
அந்த பாட்டு எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு சொல்ல....இது போதாதா....

  

No comments:

Post a Comment