பிரும்மயஜ்ஞம்
முன்னுரை:
பொதுவாக அனுஷ்டானத்தில் மாத்யாந்ஹிக (வந்தன) த்திற்குப் பிறகு பிரும்மயஜ்ஞம் செய்கின்றனர். மாத்யாந்ஹிகத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. முன்னரும் செய்யலாம். காலையில் செய்வதானால் ஒளபாஸனத்திற்குப் பிறகு பிரும்மயஜ்ஞம் தேவ பூஜை. மத்தியானம் செய்வதானால் மாத்யாந்ஹிகம், பிரும்மயஜ்ஞம், தேவபூஜை; மாத்யாந்ஹிகம், தேவபூஜை, வைச்வதேவம், பிரும்மயஜ்ஞம் என்றும் செய்யலாம். பித்ரு தர்ப்பணம், சிராத்தம் நேருகிறபோது மாத்யாந்ஹிகம், சிராத்தம் அல்லது தர்பணம் பின் பிரும்மயஜ்ஞம், வைச்வதேவம் என்று வரிசை.
பிரும்மயஜ்ஞம் என்ற பெயரால் இரண்டு தனிப்பட்ட கர்மாக்கள் இணைத்துக் கூறப்படுகின்றன. இரண்டும் தனித்தனியே. முதலாவது வேதம் ஓதுதல் அதற்குத்தகுதிபெற விதிகளும். அது பிரம்மயஜ்ஞம். இரண்டாவது தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம். இவை இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. சிரார்த்தம், தர்ப்பணம் செய்கின்ற தினங்களில்கூட காலையில் பிரும்மயஜ்ஞம் செய்து சிராத்தத்திற்குப் பின் தேவர்ஷிபித்ரு தர்ப்பணம் வைத்துக்கொள்பவரும் உண்டு.
அவரவர் குலாசாரப்படி தன் வேதசாகையைத் தினமும் ஓதிக்கொண்டிருக்கவேண்டும். தினமும் ஒரு காண்டம் அல்லது ஒரு பிரச்னம் அல்லது ஒரு அனுவாகம் அல்லது ஒரு ருக்காவது சொல்ல வேண்டும். அல்லது நான்கு வேதங்களின் ஆதி மந்திரங்களையாவது (வேதாதியையாவது) சொல்ல வேண்டும். இது பிரும்மயஜ்ஞம். இது முடியும்வரை காலையுணவு ஏற்கக்கூடாது. இதனை ஆறு, குளக்கரையில் மேற்கூரை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும். அங்கு வேதத்தை உரக்கச் செல்லலாம். வீட்டில் செய்வதானால் வேதபாராயணம் பிறர் காதுகளில் படாதபடி சொல்ல வேண்டும். வேதம் ஓதக்கூடாத நாட்களில் கூட (அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாஸ்யை, பிரதமை, மேகம் மூடிய நாள் போன்ற அனத்யயன நாட்களில்) இதனைச் செய்ய வேண்டும். தேகசுத்தி செய்ய இயலாத போதும், தேசத்தில் கொந்தளிப்பு உள்ளபோதும் செய்ய வேண்டியதில்லை. உபநயனமான பிரும்மசாரி, முதல் உபாகர்மா நடைபெறும்வரை வேதம் ஓத தகுதி பெறுவதில்லை. அந்நிலையில் காயத்திரியையே கூறி நிறைவு செய்கின்றனர்.
(ஒவ்வொரு வேத சாகையும் முதலில் பல காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காண்டத்தின் உட்பிரிவு ப்ரச்னம் அல்லது பிரபாடகம் எனப்பெறும். பிரச்னத்தின் உட்பிரிவு அனுவாகம். அதன் உட்பிரிவு பஞ்சாசத் (பஞ்சாதி). இன்று வேதாதி மட்டும் சொல்வது பழக்கத்தில் உள்ளது. அக்னி மீடே, இஷேத்வா, அக்நஆயாஹி, சந்நோதேவீ என்ற நான்கு வேதங்களின் ஆதியை (வேதாதியை) மட்டும் கூறி நிறைவு செய்கின்றனர்.)
சூரியோதயத்திற்கு முன்னும் இரவிலும் பிரும்மயஜ்ஞம் செய்யக்கூடாது. வேதம் முழுதும் ஓதியவனாயினும் முறைப்படி அதனைச் சொல்ல இயலாதவன் புருஷஸூக்தம் ஸ்ரீருத்ரம் போன்றவற்றை யாவது சொல்லி வரலாம். சூரிய நமஸ்காரத்தை முறைப்படி வேத மந்திரங்களால் செய்பவர் இதனையடுத்து பிரும்மயஜ்ஞம் செய்யலாம்.
📚📖📖📚
No comments:
Post a Comment