ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம்
அத்தியாயம் 26
ஏழுவயதே ஆன கண்ணனின் செயற்கரிய செயல்களைக் கண்டு வியந்த கோபர்களிடம் நந்த கோபர் அவரிடம் கர்க மஹரிஷி கூறியதை தெரிவித்தார் .
சுக்லோ ரக்த; ததா பீத: இதானீம் க்ருஷ்ணதாம் கத:
பஹூனி ஸந்தி நாமானி ரூபாணி ச ஸுதஸ்ய தே
தஸ்மாத் நந்த குமாரோ அயம் நாராயணஸமோ குணை:
இக்குழந்தை கடந்த மூன்று யுகங்களிலும் முறையே வெண்மை, சிவப்பு, மஞ்சள் நிறம் கொண்டிருந்தது. இப்போது கருமை நிறத்தில் உள்ளது.இவனுக்கு அவனது குணங்களுக்கும் , செயல்முறைகளுக்கும் ஏற்ப பல பெயர்களும் வடிவங்களும் உண்டு.
இவன் உங்களுக்குப் பற்பல நன்மைகளை செய்யப்போகிறான். இவனை அண்டியுள்ளவர்களை விஷ்ணுவின் அடியார்களைப் போல யாராலும் தீங்கிழைக்க முடியாது. இவன் குணத்திலும் பெருமையிலும் ஸ்ரீமந்நாராயணனுக்கு ஒப்பானவன்.
(கர்கமுனிவர் நாராயணன்தான் கண்ணன் என்னும் தேவ ரகசியத்தைக் கூறாமல் நாராயணனுக்கு ஒப்பானவன் என்றார்.)
இவ்வாறு கர்கர் கூறினார் என்று நந்த கோபர் விளக்கினார்.அதைக்கேட்ட கோபர்கள் மனமகிழ்ந்து வியப்பு நீங்கினர்.
அத்தியாயம் 27
கிருஷ்ணனின் மகிமையை நேரில் கண்ட இந்திரன் தன் கர்வம் அழிந்தவனாய் பகவான் முன் வந்து கை கூப்பியவனாய் , உல்கத்திற்கே ஈசனான அவருடைய மகிமை அறியாமல் ஐஸ்வர்ய ம்த்ம் கொண்டு தான் செய்த தீங்கை மன்னித்தருளி தனக்கு இனி இப்படி கெட்ட புத்தி வராமல் இருக்க அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தான். அதற்கு பகவான் இனி கர்வம் கொள்ளாமல் தன் கடமையை செய்து வருமாறு பணித்தார்.
(விந்தை என்னவென்றால் இவறு கூறிய இந்திரன் மறுபடி கண்ணன் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தை தேவலோகத்தில் இருந்து கொணர்கையில் எதிர்த்தான். பதவி மோகம் யாரை விட்டது!)
பிறகு இந்திரன் தேவர்களாலும் தாயான அதிதியாலும் ப்ரேரணை செய்யப்பட்டு கண்ணனுக்கு அபிஷேகம் செய்து கோவிந்தன் என்ற பட்டம் சூட்டினான். காமதேனுவின் பாலினாலும் ஐராவதம் துதிக்கையில் கொணர்ந்த கங்கை நீராலும் கண்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது நதிகள் பெருக்கெடுத்து ஓட ,மரங்கள் தேனைப் பெருகவிட, தானியங்களும் செடிகொடிகளும் உழுது பயிர் செய்ய்ப்படாமலேயே வளர்ந்தன. பிறவியிலேயெ பகை கொண்ட பிராணிகளும் பகையொழிந்தன.
பிறகு தேவேந்திரன் விடைபெற்றுக்கொண்டு தேவலோகம் சென்றான்.
விரிவுரையளர்கள் கோவிந்த பட்டாபிஷேகத்தை ராமபட்டாபிஷேகத்தை விட உயர்வாகப் போற்றுகின்றனர். ஏனென்றால் வால்மீகி, வசிஷ்டரால் செய்யப்பட்ட ராம பட்டாபிஷேகம் தேவர்கள் இந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்தது போல இருந்த்து என்கிறார் . ஆனால் இங்கு இந்திரனே வந்து பட்டாபிஷேகம் செய்தான் அல்லவா!
No comments:
Post a Comment