Monday, January 20, 2020

Mukunda malai part6,7 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

முகுந்தமாலை

6. திவி வா புவி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம்
அவதீரித சாரதாரவிந்தௌ
சரணௌ தே மரணே அபி சிந்தயாமி

எனக்கு நரக வாஸமோ ஸ்வர்க்க வாஸமோ கிட்டட்டும். ( அதைப்பற்றி நான் கவலையுறவில்லை) . நரகாசுரனை கொன்றவனே , சரத்காலத் தாமரையைப் பழிக்கும் உன் பாதங்களையே மரணத்தறுவாயிலும் நினைப்பேன்.

மரணத்தறுவாயில் அவன் தாள் நினைந்தால் மரணத்தைப் பற்றியும் அதற்குப் பின் நரகமோ ஸ்வர்கமோ கிட்டுவதைப் பற்றியும் பயமில்லை. ஏனென்றால் அவன் நரகாந்தகன். இங்கு இந்தச் சொல்லில் நரகனைக் கொன்றவன் என்றும் நரகத்தை விலக்குபவன் என்றும் இரு பொருள் தொனிக்கிறது.

அதாவது பக்தனுக்கு நரகம் ஒருபோதும் வாய்க்காது என்று அர்த்தம். நரகம் வாய்க்காது அதனால் அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் ஸ்வர்கத்திலும் ஆசையில்லை. ஏனென்றால் ஸ்வர்கத்திற்குச் சென்றாலும் அவன் நாமஸ்மரணையே இருக்குமே தவிர அந்த போகங்களை அனுபவிக்க இச்சை இருக்காது.

ஆயினும் மரணத்தருவாயில் அவன் பாதம் நினைக்க முடியாவிட்டால் என்ன செய்வது என்ற பயம் ஆழ்வாருக்கு வந்ததோ என்னவோ அடுத்த ச்லோகத்தில் அதை உறுதி செய்கிறார்.

7. க்ருஷ்ண த்வதீய பத பங்கஜ பஞ்சராந்த:
அத்யைவ மே விசது மானஸராஜஹம்ச: 
ப்ராணப்ரயாணஸமயே கபவாதபித்தை: 
கண்டாவரோதனவிதௌ ஸ்மரணம் குத: தே

கிருஷ்ணா, என் மனமாகிய ராஜ ஹம்சம் உன் பதமாகிய கூட்டினுள் இப்போதே புகுமாக. பிராணன் போகும் சமயம் என் உடல் வாத பித்த ச்லேஷ்மங்களால் அல்லலுறும்போது உன்னை நினைப்பதெங்கே?

இதே கருத்தை பெரியாழ்வார் பாசுரத்திலும் காணலாம். 
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே
ஒப்பிலான் ஆகிலும் உன்னை அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் 
எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே

கண்ணன் சொல்கிறான் ,
அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா களேபரம் 
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர சம்சய: (ப. கீ. 8.5)

இதன் பொருள், அந்திமகாலத்திலும் என்னை யார் ஒருவன் நினைக்கிறானோ அவன் என்னை அடைகிறான்.

இங்கு அந்திமகாலே ச (அந்திமகாலத்திலும்) என்று சொல்வதன் மூலம் எப்போதும் பகவானை நினைப்பவன்தான் அந்திமகாலத்திலும் நினைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ஆழ்வார் இங்கு இப்போதே என் மனம் உன் பாதத்தில் நிலை பெறட்டும் என்று கூறுகிறார்.

ஹம்சம் அல்லது அன்னப்பறவை பாலில் இருந்து நீரைப் பிரிக்கும் திறனுடையதாக சொல்லப்படுகிறது. இங்கு மனமானது ராஜஹம்சத்துடுடன் ஒப்பிடப்படுகிறது. அதாவது உயர்ந்த வகை ஹம்சம். ஆத்மஞானிகள் பரமஹம்சர் என்று கூறப்படுகிறார்கள். ஹம்ஸ என்ற சொல் வேதத்தில் பிரம்மத்தைக் குறிக்கிறது . 'ஹம்ஸஸ்ஸோஹம்ஹம்ஸ: ' , 'நானே பிரம்மம்,' என்கிறது உபநிஷத். அதனால் ராஜஹம்ஸம் என்பது பக்தியின் உயர்நிலையைக் குறிக்கும்.

உன்பாதம் என்ற கூண்டு என்பதன் மூலம் பகவான்தான் நம்மைப் பிடித்து பக்தியாகிய கூண்டில் அடைக்க வேண்டும் என்று பொருள்.

ஆழ்வார் போன்ற பக்தர்களுக்கு அந்திம ஸ்மரணையைப் பற்றி சந்தேகமே வர வாய்ப்பில்லை. ஏனெனில் வராஹப்பெருமான் 
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர: 
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாம் அஜம்
தத: தம் ம்ரியமாணம் து ள் காஷ்ட பாஷாண ஸந்நிபம் 
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்

" உடலும் மனமும் நல்ல நிலையில் உள்ளபோது எவன் ஒருவன் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அந்த என் பக்தனை அவன் மரணத் தருவாயில் செயலற்று கல்லைப்போலவோ கட்டையைப் போலவோ நினைவற்று இருந்தாலும் நான் அவனை நினைக்கிறேன் அவனுக்கு நல்ல கதியை அளிக்கிறேன்.. " என்கிறார்.

  

No comments:

Post a Comment