Friday, January 17, 2020

Srimad Bhagavatam skanda 10 adhyaya 24 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம்

அத்தியாயம் 24

அந்தணர்களுக்கு தாம் செய்யும் கர்மானுஷ்டானங்களினால் ஏற்பட்ட கர்வத்தைப் போக்கியபின் , தேவர்களுள் இந்திரனின் கர்வத்தை அடக்குவதன் பொருட்டு பகவான் நிகழ்த்திய திருவிளையாடல் கோவர்தனோத்தாரணம்.

ஒரு சமயம் இந்திரனைக் குறித்து யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கண்ட கண்ணன் அது எதற்காக என்று தந்தையிடம் வினவினார். அதற்கு நந்தர் ,மேகங்களின் அதிபதியான இந்திரனை அவன் பொழியச்செய்த மழையால் விளைந்த பொருள்களைக் கொண்டு யாகம் செய்து அவனை ஆராதிக்கிறோம் என்று கூறினார்.

அதற்கு பகவான் மழை இயற்கையாக வருகிறது . இதில் இந்திரன் செய்வதென்ன என்று கூறி காடுகளிலும் மலைகளிலும் வசித்து வருவோரான தங்களுக்கு மழை பெய்வது கோவர்தன மலையிருப்பதால் தான் என்று கூறி ஆகவே அத்ற்கு பூஜை செய்வதே தகுந்தது என்று கூறினார்.

அந்தணர் முதலிய எல்லா வருணத்தாருக்கும் திருப்தி அளிக்கும்படி உணவளித்து பசுக்களுக்கு புல் கொடுத்து மலைகளுக்கு பலி கொடுக்கும்படி கூறினார். பிறகு அதுவே தன் அபிப்பிராயம் , இஷ்டமிருந்தால் அவ்வாறு செய்யலாம் என்று கூறினார்.

பகவானுடைய மாயையால் அவர்களும் அதை ஒப்புக் கொண்டு இந்திரயாகத்திற்கு சேகரிக்கப்பட்ட பொருள்களால் கோவர்தன பூஜை செய்தனர். பகவான் மலையின் அபிமான தேவதை என்ற உருவம் கொண்டு நைவெத்தியம் செய்யப்பட்ட அனைத்தையும் உண்டார். மேலும் , இந்த மலை தேவரூபத்தில் வந்து அருள் செய்தது என்று கூறி மற்றவர்களுடன் தானும் வணங்கினார்.

இந்த சம்பவத்தை வர்ணிக்கும் அத்தியாயம் யாதவாப்யுதயத்தில் சித்ர ஸர்கம் எனப்படுகிறது. ஒரே எழுத்து அல்லது ஒரே பதம் பல பொருளில் திரும்பத் திரும்ப வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.உதாரணத்திற்குச் சில.

இரண்டு எழுத்துக்களால் அமைக்கப்பட்டது.
சாருசாரீ ருசா ரோசீ ருருசாரைரசர்சரு:
சிரோச்சரோ சிரசரோருசிரொ ருசிராசர:

ஒரே எழுத்தாலானது.
நானாநானா நானாநானா நானாநானா நானாநானா
நானாநானா நானாநானா நானாநானா நானாநானா
இதற்கு நான்கு வித அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

ப்ரதிலோமம் எனப்படும் வகை ஸ்லோகங்கள் .
நயாநயாநயா நயாநயாநயா நயாநயா
நயாநயாநயாநயா நயாநயாநயாநயா

இதற்கு ப்ரதிலோமம்
யாநயாந யாந யாந யாநயாந யாந யாந
யாநயாந யாந யாந யாநயாந யாந யாந

ஸர்வதோ பத்ரம் எனப்படும் அணியானது, ஒரு பதத்தை திருப்பிப் போடுவது.
மாயாபாஸா ஸாபாயாமா யாஸூதாயா யாதாஸூயா
பாதாயாயா யாயாதாபா ஸாயாயாகே கேயாயாஸா

இது போல ஆறாவது சர்கம் பூராவும் காணப்படுகிறது. இது கண்ணன் கோவர்தன மலையின் சிறப்பைப் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.

இந்த ஸர்க முடிவில் தேசிகர் கூறுகிறார்,
பதினாயிரக்கணக்கான சித்திரங்கள் ( அற்புதங்கள்) இந்த மலையில் உள்ளன. ஆயினும் முக்கியமாக செய்ய வேண்டியது, மற்ற எண்ணங்களை பக்வான் ஹரியை இந்த மலையின் ரூபத்தில் ஆராதிப்பதேயாகும்.

இதன் மூலம் தேசிகர் குறிப்பிடுவது என்னவென்றால், அவரால் இதைவிட பல மடங்கு சித்ரஸ்லோகங்கள் எழுத இயலும். ஆனால் பகவானின் பெருமையை மட்டும் சித்தரிக்கும் ஆவலால் இதனுடன் நிறுத்திக் கொண்டதாகப் பொருள் .

அடுத்து இந்திரனின் கோபமும் கோவர்தனோத்தாரணமும்.

No comments:

Post a Comment