ஶ்ரீமத்பாகவதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 22
மார்கழி மாதத்தில் இளம் கோபியர் பாவை நோன்பு அனுஷ்டித்தனர். அதிகாலையில் எழுந்து யமுனைக்குச் சென்று மணலில் காத்யாயனி தேவியின் உருவம் செய்து 'காத்யாயனி மஹாமாயே மஹாயொகின்யதீச்வரி நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம: ' என்ற ப்ரார்த்தனையுடன் பூஜை செய்தனர்.
தினந்தோறும் அவர்கள் விடியற்காலையில் தங்கள் தோழிகளை எழுப்பிக்கொண்டு கிருஷ்ணனுடைய பெருமையைப் பாடிக்கொண்டு யமுனையில் நீராடச்செல்வார்கள் . இதுதான் திருப்பாவையில் கூறப்பட்ட தாகும்.
ஒரு சமயம் அவர்கள் ஆற்றின கரையில் ஆடைகளை வைத்துவிட்டு ஆனந்தமாக நீராடினர். அப்போது அவ்ர்களின் அபிப்பிராயத்தை அறிந்த கண்ணன் அவர்கள் வ்ரதத்திற்கு சித்தியளிக்கும் பொருட்டு அங்கு வந்து அவர்கள் உடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த மருத மரத்தின் மேல் ஏறி அவர்களைப் பார்த்து பரிஹாச வார்த்தைகளைக் கூறினான்.
"பெண்களே நீங்கள் இங்கு வந்து உங்கள் ஆடைகளை வாங்கிக்கொள்ளுங்கள் ," என்றவனைப் பார்த்து குளிர்ந்த நீரில் நடுக்கத்துடன் நின்ற அவர்கள் அவனிடம்,
" நாங்கள் உன் அடிமைகள். நீ சொன்னதைச் செய்வோம். ஆடைகளை கொடுத்துவிடு," என்றார்கள் . " கண்ணன், "அப்படியானால் இங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள்," என்றான். அதன்பின் அவர்கள் குளிரால் நடுங்கிய வண்ணம் தங்கள் அறையை கைகளால் மறைத்துக் கொண்டு நீரில் இருந்து வெளியேறினர்.
(இதிலிருந்து அந்த பெண்கள் சிறுமியர் , படங்களிலும் நாடகங்களிலும் காண்பிப்பது போல் கன்னியர் அல்லர் என்று தெரிகிறது. )
அவர்களைப் பார்த்து சிரித்த கண்ணன் "நீங்கள் வ்ரதம் அனுஷ்டிக்கையில் ஆடையின்றி குளிப்பது தவறு. ஆகவே இங்கு வந்து தலைமேல் கைகளைக் கூப்பிக்கொண்டு நமஸ்கரித்து ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் ,"என்று கூற அவர்கள் ஒரு கையால் அறையை மறைத்துக் கொண்டு ஒரு கையால் வணங்க , கண்ணன் கூறினான்.
" ஒரு கையினால் வண்ங்குவது தர்ம விரோதமாகும் . அப்படிச் செய்பவரின் கையை வெட்டுவதே த்ற்குரிய தண்டனை என்று சாஸ்திரம் கூறுகிறது. இருகைகளாலும் வணங்க வேண்டும் ," என்று கூற அவர்கள் அவ்வாறே செய்து ஆடைகளைப் பெற்றுக்கொண்டனர். அதைக்கண்ட கண்ணன் அவர்களுடைய பக்தியில் மகிழ்ந்து அவர்கள் இச்சை நிறைவேறும் என்று அனுக்ரஹித்தான்.
"என்னிடம் மனம் வைத்தவருக்கு வறுத்த விதைகள் எவ்வாறு முளைப்பதில்லையோ அவ்வாறே உலக இச்சை ஏற்படாது ," என்று கூறினான்.
இங்கு சற்று தேசிகரின் வர்ணனையையும் அதற்கு உத்தமூர் ஸ்வாமியின் வ்யாக்யானத்தையும் பார்க்கலாம்.
யாதவாப்யுதய ஸ்லோகம்
நிசாத்யயே ஸ்னானமுத்யதானாம்
நிக்ஷிப்தம் ஆபீரகுமாரிகானாம்
கூலாதுபாதாய துகூலஜாலம்
குந்தாதிரூடோ முமுதே முகுந்த:
கோபசிறுமியர் அதிகாலையில் யமுனையில் நீராடச்சென்றபோது வெண்மை பட்டாலான தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தனர். அப்பபோது கிருஷ்ணன் அவைகளை எடுத்துக்கொண்டு மகிழ்வுடன்குந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.
உத்தமூர் ஸ்வாமி இதை விளக்கையில் கூறுகிறார். ' கூலதுகூல ஸங்கமாத் பர: குந்த முகுந்த ஸங்கம: ' அதாவது முதலில் கூல (கரை) துகூல (பட்டடை) ஸங்கமம், (சேர்க்கை). பிறகு குந்த ( குந்த மரம் )முகுந்த ஸங்கமம். கூல துகூல ஸங்கமம் என்பது உலக இச்சைகளைக் களைந்த பின் கிருஷ்ணானுபவம் ஏற்படுவதைக் குறிக்கும். குந்த: என்றால் கும் – பாபத்தை , த்யதி- களைதல் . முகுந்த: என்ற நாமத்திற்கு முக்திம் ததாதி, முக்தியைக் கொடுப்பவன் என்று பொருள்.
அவர்களை தலை மேல் கை கூப்பச் சொன்னது, தேஹாத்ம புத்தியை ( தேகமே நான் என்னும் புத்தி) விடுவதன் பொருட்டே ஆகும். பிறகே முக்தி சித்திக்கும். மேலும் 'எல்லோருள்ளும் ஆத்மாவாக இருக்கும் என்னிடம் எதை மறைக்க முயலுகிறீர்கள் என்பதுதான் கண்ணைன் சிரிப்பிற்குக் காரணம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.பூரண சரணாகதியைக் குறிக்கும் சம்பவம்.
No comments:
Post a Comment