Monday, January 20, 2020

KB Sundarambal & S.G.Kittappa

தமிழ் நாட்டையே அசத்திய ஜோடி!

-------------------------------------------------------------------------
தமிழ் நாட்டையே அசத்திய ஜோடி!

எத்தனை தடவைதான் பிரியாமணியைப் பற்றியும், நயன்தாராவைப்
பற்றியுமான செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பீர்கள்?
ஒரு மாறுதலுக்காக இதையும் படியுங்கள்.

திருமதி. K.B.சுந்தராம்பாள் அவர்கள் 11.10.1908ஆம் ஆண்டு
ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் பிறந்தார்.
அற்புதமான குரல்வளம் மிக்கவர். சிறந்தபாடகி.
காவிரிக் கரையில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த ஊர் அது.

சிறுவயதில் மிகவும் சிரமப்பட்டவர். குழந்தையாக இருக்கும்
போது ரயிலில் பாட்டுப்பாடி, கிடைத்த காசைத் தன் தாயார்
பாலாமணி அம்மாள் அவர்களிடம் கொடுத்து பிழைக்க வேண்டிய
சூழ்நிலையில் இருந்தவர். இவருடைய அற்புதமான குரல் வளத்தைப்
பார்த்த - அவருடைய தாயார் பாலாமணி அம்மாவிற்கு
வேண்டிய காவல்துறை அதிகாரி திரு. கிருஷ்ணசாமி என்பவர்
அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்தக்காலத்தில் நாடகக்
கம்பெனி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த P.S. வேலு நாயர்
என்பவரிடம் சேர்த்துவிட்டார். அப்போது சுந்தராமபாளுக்கு
வயது பத்து.

வள்ளிதிருமணம், பவளக்கொடி, ஹரிச்சந்திரா போன்ற நாடகங்களில்
நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடன் நாடகங்களில் நடித்தும்,
பாடிக்கொண்டுமிருந்த S.G.கிட்டப்பாவின் மேல் மயக்கம் கொண்டு
அவரைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தார். S.G.கிட்டப்பா
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடகர். சம வயதுக்காரர்தான்.

இருவருமே தங்கள் குரல்வளத்தால் தமிழ் மக்களைக் கட்டிப்
போட்டார்கள்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள ஜாதி ஒரு தடையாக இருந்தது.
இருவர் வீட்டிலுமே பலத்த எதிர்ப்பு. சுந்தராம்பாள் கவுண்டர்
இனத்தைச் சேர்ந்தவர். S.G.கிட்டப்பா அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பலத்த எதிர்ப்பிற்கிடையே, நண்பர்கள், மற்றும் ஏராளமான ரசிகர்களின்
ஆதரவுடன் இருவரும் 1927ஆம் ஆண்டு திருமணம் செய்து
கொண்டார்கள்.அற்புதமான ஜோடி என்று தமிழ் நாடே பார்த்தும்,
கேட்டும் வியந்தது. அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 19தான்.

ஐந்து வருட காலம் ஓடியதே தெரியவில்லை.

எந்தக் கொள்ளிக்கண் பட்டதோ - 1932ஆம் ஆண்டு கிட்டப்பா
மேடையில்நடித்துக் கொண்டிருக்கும்போதே இரத்தம் கக்கி
இறந்து விட்டார். சுந்தராம்பாள் நொறுங்கிப்போய் விட்டார்.

அப்போது அவருக்கு வயது 24தான்.

அந்தக் காலகட்டத்தில் ஒலி வாங்கி, ஒலி பெருக்கியெல்லாம்
கிடையாது. Mike & Sound System, Speakers எல்லாம் கிடையாது.
மேடையில் இருந்து இருவரும் பாடினால் அரங்கில் கடைசி
வரிசையில் இருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் படியாகப் பாட
வேண்டும். அப்படித் தன்னை வருத்திக் கொண்டு அனுதினமும் பாடியதால்தான் கிட்டப்பா இளம் வயதிலேயே மாண்டு போனார்.

பின்னாளில் ஒரு விமர்சகன் இப்படிச் சொன்னான்:

For want of mike
Kittappa lost his life!


பிறகு சில ஆண்டுகளில் சுந்தராம்பாள் தன்னைத் தேற்றிக் கொண்டு
மேடைகளில் பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பித்து அதிலும்
பிரபலமானார். அவர் எங்கு பாடினாலும் கூட்டம் அலை மோதியது.

"வெந்நீறு அணிந்ததென்ன? - வேலைப் பிடித்தததென்ன?"
"பழம் நீயப்பா - ஞானப் பழம் நீயப்பா - தமிழ்ஞானப் பழம் நீயப்பா!"

போன்ற அவர் பாடிய முருகன் பாமாலைகள் மிகவும் பிரசித்தமானவை.

1953ஆம் ஆண்டு வந்த ஒளவையார் திரைப்படம் அவர் வாழ்க்கையில்
ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதென்றால் அதில் சந்தேகம் ஒன்றுமில்லை!

அந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதே ஒரு சுவையான
விஷயம்.

அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த திரைப்படத்
தயாரிப்பாளரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான
திரு.S.S. வாசன் அவர்கள் ஒளவையாரின் கதையைத் திரைப்படமாக
எடுப்பது என்று எண்ணிச் செயல்படத் துவங்கியவுடன், கதாநாயகி
யாக நடிக்க மிகவும் தகுதியானவர் சுந்தராம்பாள் என்று முடிவு
செய்து அவரை அணுகினார்.

தன் கணவர் இறந்தவுடன், நாடக மேடைகளைத் துறந்திருந்த
சுந்தராம்பாள் அவர்கள் சினிமாவில் நடிக்க முதலில் மறுத்து
விட்டார்.

ஆனால் தான் நினைத்ததைச் சாதிக்கும் திறமையுள்ள திரு.வாசன்
அவர்கள் விடவில்லை.

"நீங்கள் தான் நடிக்க வேண்டும்.அப்போதுதான் இந்தப் படத்திற்கு
உயிர் கிடைக்கும் என்று சொன்னதோடு நீங்கள் கேட்கின்ற தொகை
யையும் தருவதாகச் சுந்தராம்பாளிடம் சொன்னார். அப்போது
ஐந்தாயிரம், பத்தாயிரத்திற்கு மேல் யாருக்கும் சம்பளம் இல்லாத
காலம்.

அவர் விட்டால் போதும் என்பதற்காக யாருமே எதிர்பார்க்க 
முடியாத ஒரு தொகையைக் கே.பி.எஸ் அவர்கள் சொன்னார்.

ஆமாம்,"ஒரு லட்ச ரூபாய் தருவீர்களா?" என்று சும்மா கேட்டு
வைத்தார்,

சற்றும் யோசிக்காத திரு,வாசன் அவர்கள் தருகிறேன் என்று
உடனே சொல்ல அவர் நடிக்கும்படி ஆகிவிட்டது. படம் சூப்பர்
ஹிட்டாக ஓடியது தனிக் கதை!

பின்னாட்களில் நல்ல இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தார்.
பூம்புகார், திருவிளையாடல் போன்ற படங்களை உதாரணமாகச்
சொல்லலாம்.

1964ஆம் ஆண்டில் தமிழ் இசைப் பேரறிஞர் விருதும், 1970ஆம்
ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் அவருக்குக் கிடைத்தது.

தமிழ் இசை உலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி
யவர் 1980ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அந்த ஓளவையார் படம் பிரமாண்டமான விளம்பரங்களுடன் ஓடியது
மக்கள் அலையென வந்து படத்தைப் பார்த்தார்கள். அந்தப் படம் ஓடிய
ஒவ்வொரு ஊர்களிலும் படத்தின் காட்சி ஒன்று கலரில் - படம் நடக்கும்
திரையரங்கின் பெயருடன் நோட்டிசில் விளம்பரப் படுத்தப்பட்டது.

கலர் நோட்டிசையெல்லாம் நினத்துப் பார்க்க முடியாத காலம் 
அது. வாசன் அவர்கள் அதிலும் ஒரு சாதனை நிகழ்த்தினார் 
என்பதுதான் கூடுதல் ஆச்சரியம்.


கிட்டப்பாவின் படம். 
அருகில் ஹார்மோனியம் வாசிப்பவர் 
அவருடைய சகோதரர் காசி அய்யர் 
படம் உதவி: நன்றி ஹிந்து நாளிதழ்

அன்புடன்
வாத்தியார்
(நேறைய பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த 33 பதிவுகளில் இது
இரண்டாவது. மற்ற பதிவுகளும் தொடர்ந்து வரும்)

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment