ஶ்ரீமத்பாகவதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 20
கோடைகாலத்திற்குப் பின் மழைக்காலம் ஆரம்பமாயிற்று.
( யாதவாப்யுதயத்தில் பிருந்தாவனத்தில் மழைக்கால வர்ணனை மிகவும் அழகு வாய்ந்தது. அதைப் பின்னர் காண்போம். )
சுகர் கூறியது பின் வருமாறு.
மின்னலும் இடியும் கூடிய கார்மேகங்களால் மறைக்கப்பட்டு சூரியனும் சந்திரனும் நக்ஷத்திரங்களும் தெளிவாகக் காணப்படாமல் இருந்த ஆகாயம் முக்குணங்களால் மறைக்கபட்ட பிரம்மம் போல விளங்கிற்று.
( சத்வகுணம் ப்ரகாசமான மின்னலுக்கும், ரஜோ குணம் இடிக்கும் , இருள் தமஸிற்கும் ஒப்பிடப்படுகிறது.)
சூரியன் எட்டு மாதங்களில் தன் கிரணங்களால் பூமியிடம் இருந்து பெற்ற நீராகிய செல்வத்தை காலம் வந்ததும் விடுவதற்கு ஆரம்பித்தான். இது வரி வசூலித்த பின் ஒரு அரசன் அந்த வரிப்பணத்தை மக்களுக்கே செலவிடுவது போல் இருந்தது.
கோடையில் வரண்ட பூமி தவம் செய்த பின் கிடைக்கும் பயனைப் போல செழித்து விளங்கியது. இரவில் நக்ஷத்திரங்களும் கிரகங்களும் ப்ரகாசிக்காமல் மின் மினிப் பூச்சிகள் போல இருந்த நிலை கலியுகத்தில் பாவங்களின் மிகுதியால் வேதங்களின் நிலையை ஒத்து இருந்தது.
நித்யானுஷ்டானம் முடிந்தபின் சிஷ்யர்கள் எவ்வாறு குருவின் குரல் கேட்டு வேதம் ஓத ஆரம்பிப்பது போல தவளைகள் மேகத்தின் சப்தத்தைக் கேட்டு ஒலி எழுப்பின.
ஒரு அற்பனுக்கு வாழ்வு வந்தால் எவ்வாறு கட்டுக்கடங்காமல் திரிவானோஅவ்வாறே சிற்றாறுகள் கரை புரண்டு ஓடின.
பக்குவம் அடையாத மனம் விஷய சுகங்களால் அலைக்கழிக்கப் பட்டதைப் போல் நதிகளின் சங்கமத்தாலும் காற்றினாலும் அலைகளாலும் கடல் கலங்கிற்று.
பகவானிடம் சித்தம் வைத்தவர்கள் துன்பங்களால் கலங்காதது போல மலைகள் மழையால் அடிக்கப்பட்டும் அசையவில்லை. பாதைகள் புல் மூடி மறைக்கப்பட்டது வேதங்கள் அப்யசிக்கப்படாததால் மறக்கப்பட்டதைப் போல இருந்தது.
எல்லா பிராணிகளுக்கும் மகிழ்ச்சியை அளிப்பதும் தன் சக்தியால் விருத்தி அடைந்ததுமான அந்த மழைக்காலத்தைக் கண்டு பகவான் அதைப் புகழலுற்றார்.
பின்னர் ஆகாயமும் நீர் நிலைகளும் தெளிந்து சரத்காலம் ஆரம்பித்தது. யோகத்தில் இருந்து நழுவிய யோகியின் மறுபடி தெளிவுற்றதைப் போல க்லங்கி இருந்த நீர் தாமரைகளுடன் தெளிவடைந்தது.
ஆசைகளையெல்லாம் விட்ட முனிவர்களைப் போல மேகங்கள் வெண்ணிறமடைந்தன.
பூமியில் கிருஷ்ணன் கோபர்களால் சூழப்பட்டது போல் சந்திரன் நக்ஷத்திரங்களால் சூழ்பட்டு விளங்கினான்.
தேசிகரின் மழைக்கால வர்ணனையை அடுத்துக் காண்போம்.
ஶ்ரீ ஹரயே நமஹ
ReplyDelete