Friday, December 6, 2019

Srimad Bhagavatam skanda 10 adhyaya 17,18,19 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஶ்ரீமதபாகவதம் தசமஸ்கந்தம் -அத்தியாயம் 17, 18, 19

அத்தியாயம் 17

பரீக்ஷித் காளியன் ரமணகம் என்ற சர்ப்பங்களின் தீவை விட்டு அங்கு வந்தான் என வினவ சுகர் கூறலுற்றார்.
ரமணகம் என்ற தீவில் சர்ப்பங்கள் கசித்து வந்தன. அங்கு ஒரு மரத்தின் கீழ் ஜனங்கள் சர்ப்ப பயத்தை ஒழிப்பதன் பொருட்டு சர்ப்பங்களுக்கு பலி சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்தது. பௌர்ணமி அன்று சர்ப்பங்கள் அந்த பலியை கருடனுக்கு சமர்ப்பித்து தம்மை கொல்லாமல் இருக்க வேண்டுவது வழக்கம்.

ஆனால் காளியன் தன் பலத்தினாலும் விஷத்தன்மையின் தீவிரத்தினாலும் கர்வம் கொண்டு கருடனை எதிர்ப்பதற்காகஅந்த பலியை எல்லாம் தானே சாப்பிட்டுவிட்டான்.
அதை அறிந்த கருடன் காளியனை எதிர்க்க தோல்வியடைந்த காளியன் கருடனிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு யமுனையில் கருடனால் நெருங்க முடியாத இடத்தை அடைந்தான் .

அங்கு முன்னர் ஸௌபாரி என்ற முனிவர் நதியில் ஆழ்ந்து தவம் செய்துகொண்டிருக்கையில் கருடன் மீனைப் பிடிக்க அங்கு வந்தபோது அவரால் தடுக்கப்பட்டான். ஆயினும் பசி மிகுதியால் கருடன் ஒரு மீனைக் கவ்வ மற்ற மீன்களின் துயரத்தைக் கண்ட முனிவர் கருடன் இனி அங்கு வந்தால் மரணம் எய்தட்டும் என்று சபித்தார். அதனால் அங்கு கருடனின் பயம் இன்றி காளியன் வசித்து வந்தான்.
பகவான் தன் பாதங்களால் அனுக்ரஹிக்கப்பட்டதால் கருடன் ஒன்றும் செய்ய மாட்டான் என்று கூறி அவனை ரமணக தீவிற்கு திரும்ப அனுப்பினார்.

காளியனை வென்று அவனுடைய பரிசாக ஆபரணங்கள், ரத்தினங்கள் ஆடைகள் முதலியவைகளுடன் திரும்பிய கண்ணனைக் கண்டதும் யசோதை, நந்தன், முதலிய எல்லோரும் இழந்த உயிரை திரும்பப் பெற்றது போல் ஆகி மகிழ்ச்சியுற்றனர்.அவனுடைய மகிமையை அறிந்த பலராமர் கண்ணனைக்கண்டு நகைத்துத் தழுவிக் கொண்டார். நந்தகோபர் அந்தணர்களுக்கு பசுக்கள் பொன் முதலியன வழங்கினார்.

பிறகு இரவாகி விட்டதால் எல்லோரும் அங்கேயே உறங்க முற்பட்டனர். அப்பொது அவர்களை காட்டுத்தீ சூழ்ந்தது. அவர்கள் கிருஷ்ணரை சரணடைய அவர் காட்டுத்தீயை விழுங்கி அவர்களைக் காப்பாற்றினார்.

அத்தியாயம் 18
ஒரு சமயம் க்ருஷ்ணனும் பலராமனும் கோபர்களுடன் பிருந்தாவனத்தில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தபோது ப்ரலம்பன் என்னும் அசுரன் கிருஷ்ணனைக் கொல்லும் பொருட்டு அங்கு கோப வேஷத்தில் வந்தான்.

அவனை அறிந்த பகவான் கோபர்களிடம் இரண்டு கட்சியாகப் பிரிந்து விளயாடலாம் என்று கூறினார். பலராமன் ஒரு கட்சிக்கும் கண்ணன் ஒரு கட்சிக்கும் தலைமை தாங்க போட்டி விளையாட்டுகள் ஆரம்பமாயின.

ஜயித்தவரை தோற்றவர் தோளில் சுமக்க வேண்டும் என்ற விதிப்படி கண்ணன் ஶ்ரீதாமனை சுமக்க , கண்ணனை எதிர்க்க பயந்து பலராமனுடன் போட்டியிட்ட ப்ரலம்பன் தோற்று பலராமனை தூக்கிக் கொண்டு வெகு தூரம் செல்ல முற்பட ,அவனை யாரென்று கண்ணனின் குறிப்பால் உணர்ந்த பலராமன் வஜ்ராயுதம் போன்ற தன் முஷ்டியால் அவனைக் கொன்றார்
.
அத்தியாயம் 19

அவர்கள் இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கையில் பசுக்கள் மேய்ச்சலை நாடி காட்டுக்குள் சென்றுவிட்டன. அவைகளைத் தேடி க் கொண்டு போன கோபர்களையும் பசுக்களையும் காட்டுத்தீ சூழ்ந்தது. காப்பாற்றுமாறு கண்ணனை வேண்டிய அவர்களின் கூக்குரலையும் பசுக்களின் கதறலையும் கேட்ட கண்ணன் அங்கு வந்து அவர்களை கண்ணை மூடிக்கொள்ளும்படிக் கூறினான். அவனிடம் முழு நம்பிக்கை கொண்ட அவர்களும் அவ்வாறு செய்ய கண்ணைத் திறந்தபோது தாங்கள் வேறிடத்தில் இருக்கக் கண்டனர்.
அடுத்த அத்தியாயம் ருது வர்ணனை. இதில் வியாசரின் கவித்வம் பிரகாசிக்கிறது.

  

No comments:

Post a Comment