ஶ்ரீமத்பாகவதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 21
மயிலிறகு அணிந்து செவியில் கர்ணிகார பூக்களுடன் இடையில் பீதாம்பரமும் மார்பில் வைஜயந்தி மாலையும் அணிந்து கண்ணன் குழலூதிக் கொண்டு ஒரு நடிகனைப் போல் உதடுகளின் வழியே அமுதத்தை வர்ஷிக்கும் குழலோசையுடன் தன் திருவடி படுவதால் மங்களம் பொருந்திய ப்ருந்தாவனத்தில் பிரவேசித்தான்.
எல்லா பிராணிகளுடைய மனதையும் மகிழ்விக்கும் குழலோசையை கேட்ட இடைப்பெண்கள் அந்த கானத்தைப் பின்வருமாறு புகழ்ந்தார்கள்.
பசுக்கள் தூக்கிய செவிகளின் வழியே வேணுகானமாகிய அமுதத்தையும் கண்களால் கிருஷ்ணனுடைய அழகையும் பருகி நின்றன. பால் குடித்துக்கொண்டிருந்த கன்றுகள் பாலையும், புல் மேய்ந்துகொண்டிருந்தவை புல்லையும் நழுவவிட்டுமெய் மறந்து நின்றன. மூடிய கண்களுடன் குழலிசையை செவிமடுத்துக் கொண்டிருந்த பறவைகள் முனிவர்களே அந்த உருவத்தில் கிளைகளில் அமர்ந்து கேட் கிறார்கள் போலும் என்று தோன்றின.
ஆறுகள் கண்ணனால் கவரப்பட்ட நங்கையர் போல வேகம் குறைந்து சுழல்களால் தம் மன நிலையை காட்டுவது போல அலைகளாகிய கரங்களில் தாமரைப்பூக்களை அவன் காலடியில் சமர்ப்பித்தன.
அசையும் பிராணிகள் அசைவற்று நிற்க , தாவரங்களுக்கு புளகாங்கிதம் உண்டானதால் ஸ்தாவரம் ஜங்கமமாகவும் ஜங்கமம் ஸ்தாவரமாகவும் ஆனது.
இதை பெரியாழ்வார் எவ்வாறு வர்ணிக்கிறார் என்றால்,
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கனிந்திரங்கி செவியாட்டகில்லாவே
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே
இவ்விதம் கோபியர் பகவானுடைய லீலைகளைபாடிக்கொண்டே ப்ருந்தாவனத்தில் சஞ்சரிக்கும் அவருடைய த்யானத்தால் அவர் மயமாகவே ஆகிவிட்டனர் என்று சுகர் கூறினார்.
No comments:
Post a Comment