தசாவதாரமும் கீதையும் -மத்ஸ்யாவதாரம்
தசாவதாரங்கள் எவ்வாறு கீதையை ப்ரதிபலிக்கின்றன என்று காண்போம்.
மத்ஸ்யாவதாரம்
ஹயக்ரீவாசுரனால் நைமித்திக ப்ர்ளயத்தின் போது பிரம்மா கண் அயர்கையில் கைப்பற்றி கடலின் அடியில் மறைக்கப்பட்ட வேதங்களை வெளிக்கொணரவே எடுத்தது மத்ஸ்யாவதாரம்.
மிகப்பெரிய மீ ன் உருவெடுத்து ஹயக்ரீவாசுரனைக் கொன்று கடலின் அடியில் சென்று வேதங்களை வெளிக்கொணர்ந்தார் ஸ்ரீமன் நாராயணன் என்பது புராணம். இதன் உட்பொருள் என்னவென்று பார்ப்போம்.
ஹயக்ரீவாசுரன் என்பது உலகில் குயுக்தியான கொள்கைகளுடன் வேதத்தின் பொருளை மறப்பது அல்லது மறப்பதைக் குறிக்கும். ஹய என்னும் சொல்லுக்கு குதிரை என்று ஒரு பொருள் இருந்தாலும் , அது மரத்தைப் போல் திடம் கொண்ட , திமிர் , தவறான வாழ்க்கை முறை , பயமின்மை இவை உள்ள ஒருவகை மனிதரைக் குறிப்பதாகும்.
காஷ்டா துல்யா வபு: த்ரஷ்ட: மியத்யாசார: நிர்பய: - ஹய என்னும் சொல்லுக்கு அகராதியின் விளக்கம்.
வேதங்களில் சொல்லப்பட்ட உண்மைகளை அறியாமை என்னும் கடலில் மூழ்கச் செய்த குதர்க்க புத்தியே ஹயக்ரீவாசுரன். அப்போது இறைவனின் அருள் ஒரு பெரிய மீனைப் போல் தோன்றி வேதங்கள் மூலம் நல்லறிவை மீட்கிறது.
ப்ருஹதாரண்ய உபனிஷத்தில் 'யதா மஹாமத்ஸ்ய: உபே கூலே அனுஸஞ்சரதி பூர்வம் ச அபரம் ச ' , எவ்வாறு ஒரு பெரிய மீன் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஸஞ்சரிக்கிறதோ , என்ற ஒரு வாக்கியம் காண்கிறோம்.
சிறிய மீன்கள் நதியின் வேகத்தால் அலைக்கழிக்கப்பட்டு இரு கரைகளிலும் மாறி மாறி செல்வது போல ஸஞ்சலமான புத்தி அலைக்கழிக்கப்படுகிறது. ஆனால் நிச்சய புத்தியோ சலனமற்று ஒரே கதியில் செல்கிறது. இங்கு இரு கரைகளாவன, சந்தேகம், மயக்கம், (doubt and delusion). என்பன.
மீன் உருக் கொண்ட பகவான் மஹாமத்ஸ்ய: எனப்படுகிறான். மத்ஸ்யாவதாரம் வெண்மை நிறம். இது உபனிஷத்தால் குறிப்பிடப்பட்ட சுத்தசத்வ புத்தியாகும். மஹாமத்ஸ்யம் என்பது ஸர்வவ்யாபித்வம் , ஸர்வக்ஞத்வம் இவைகளைக் குறிக்கும். அப்படிப்பட்ட ஞானம்தான் அறியாமையில் இருந்து உலகைக் காக்க முடியும்.
இது கீதையின் சொற்களுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று பார்ப்போம்.
ராகத்வேஷ வியுக்தைஸ்து விஷயான் இந்த்ரியை: சரன்
ஆத்மவச்யை: விதேயாத்மா ப்ரஸாதம் அதிகச்சதி (கீ. 2.64)
விருப்பு வெறுப்பின்றி வசப்படுத்தப்பட்ட இந்த்ரியங்களால் போக விஷயங்களில் ஈடுபட்டும் உள்ளத்தெளிவை அடைகிறான். இங்கு இரண்டு கரைகள் எனப்படுவது விவேகமும் வைராக்யமும் ஆகும். அவ்வாறு தெளிவடைந்த புத்தியானது மஹா மத்ஸ்யத்தைப் போல் ப்ரம்மத்தில் ஆழ்ந்து ஸம்சாரத்தின் அலைகளால் பாதிக்கப்படுவதில்லை.
மத்ஸ்யாவதாரத்தில் பகவான் சத்யவ்ரதனிடம், ஏற்படப் போகும் ப்ரளயத்தின் போது எல்லா ஜீவராசிகளின் ஒவ்வொரு ஜோடியையும் தாவரங்கள் , ஓஷதிகள் இவற்றின் விதைகளையும் ஒரு ஓடத்தில் எடுத்துக் கொண்டு மஹாமத்ஸ்யமான தான் அங்கு வரும்போது தன் கொம்பில் கட்டும்படியும், அப்போது அவர் எல்லோரையும் பத்திரமாகக் கரை சேர்ப்பதாகவும் கூறினார்.
இதன் பொருள் என்னவென்றால் பிரளயம் என்பது பகவானின் மாயை . அதிலிருந்து விடுபடுவது அவனுடைய அருளால் மட்டுமே இயலும். இதையே கீதையில் ,
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் த்ரந்தி தே ( கீ. 7.14)
இந்த முக்குணங்களால் ஏற்பட்ட எனது மாயையை கடப்பது மிகவும் கஷ்டம். யார் என்னை சரணடைகிறார்களோ அவர்களே இதை கடக்கிறார்கள், என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment